அருங்குணத் திலகம்
திருமதி தெ. சுந்தரி
எந்தையாரின் இனிய நண்பரும், தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள்
உதவி இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பண்பாளர்
திரு. தென்னவன், அன்பு, அடக்கம், பண்பு, பரிவு, ஆர்வம் மனித நேயம், எங்கும் எதற்கும் தன் பெயர் சொல்லாதக் கொடைத் தகைமை இத்தனைப் பண்பு நலன்களையும் மொத்தமாகக் கொண்ட பெருமகனாவார்.
பல நாட்கள் அப்பாவுடன் பல நிகழ்வுகளில் அவரைத் தொடர்ந்து நாங்கள் சந்தித்து மகிழ்ந்திருக்கிறோம்….
அவரும் அவர் குடும்பத்தினரும் எங்கள் குடும்பத்தோடு மிக நெருக்கமான நண்பராக பழகத் தொடங்கி எங்கள் பெற்றோர்கள் மறையும் வரை பல நாட்கள் இல்லத்திற்கு வந்து நலம் பாராட்டிய இணையராக திரு. தென்னவனும் திருமதி தெ. சுந்தரியும் திகழ்ந்தார்கள்.
அருங்குணத் திலகமாகத் திகழ்ந்த திருமதி தெ. சுந்தரி வாழ்க்கையில் பல நிலைகளில் எதிர் நீச்சல் போட்ட நீச்சல் வீராங்கணை ஆவார்.
அவர் நேற்று மாலை (24.3.23)அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன்.
அன்புற்றாய் – பண்புற்றாய் – வன்புற்றால் எங்குற்றார்! என்று நீங்காத கண்ணீரோடு நெஞ்சம் நினைய நிற்கின்றோம்.
பெற்றோர்களுக்குப் பிறகு எங்கள் மீது அளப்பரிய பாசம் காட்டுகிற
திரு. தென்னவன் இணையரின் மக்கள் செல்வங்கள் தான் சென்னையில் உள்ள திரு. செம்பியன், ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேர்னில் உள்ள
திரு. கணேஷ் மற்றும் திரு. இராஜராஜன்.
பண்பாட்டின் திலகமாக மிளிரும் திரு. தென்னவன் அவர்களுக்கும் அவருடைய மக்கள் செல்வங்களுக்கும் ஆறுதல் கூறி அமைதி பெறுகிறேன்.
-ஔவை அருள்

Add a Comment