தினமணி – 14 1 2023
பக்கம் எண் : 8
நிலைத்த புகழ் கொண்ட வள்ளுவர் !
தமிழகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லாத இடமில்லை .
‘ வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ‘ என்ற வகையில் இன்று தமிழ்நாடு மதிக்கப்பெறுவதற்கு திருக்குறளே மையப் புள்ளியாகும்.
திருவள்ளுவரை ‘உலகப் பாவலர்’ என டாக்டர் ஜி.யூ. போப் போற்றியிருக்கிறார்.
திருக்குறள் பன்னாட்டு மாநாட்டில் பொதுமறை என்பதை பொதுமுறை என்று கூடச் சொல்லி, எல்லோருக்கும் ஏற்ற முறையில் திருக்குறள் அமைந்தது என்ற கருத்தில் ஒடிஸாவைச் சார்ந்த ஓய்வு பெற்ற இந்திய குடிமைப் பணி அதிகாரி பேசினார்.
மனோ ரஞ்சித மலர், நினைப்பவர்களுக்கெல்லாம் அவரவர்கள் நினைப்பிற்கேற்ப மணங்கமமும் என்பார்கள்.
அதுபோலத் திருக்குறளும், எந்தக் கருத்து உடையவர்களாயினும் அவர்களுக்கு ஏற்றபொருள் தருவதாகும்.
‘எந்த நூலுமே பொய்மையைப் பரப்புகிறது’ என்று கடிந்து பேசிய ஈ.வெ.ரா. பெரியார்கூட திருக்குறள் மாநாடு நடத்தினார்.
உலகில் எல்லோரும் நிகரானவர்கள்.
ஒருவர் பெரியவர் ஒருவர் அடிமையெனத் தாழ்த்தவர் என்ற கருத்து எல்லா நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்தது.
ஆனால் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறியதோடு மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்’ என்று வலியுறுத்தியதும் திருக்குறள்தான்.
ஜாதிகளைப் பற்றிய பேச்சே இல்லாத நூல் திருக்குறள்.
‘வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனு ஆதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்று மனோன்மணீயம் சுந்தரனார் குறிப்பிடுகின்றார்.
வாழ்க்கையில் தனிமனிதவாழ்வு, கணவனும் மனைவியும் வாழும் இல்லறம்,குடும்பங்கள் சேர்ந்த நாடு என்ற மூன்றும் தான் அறம், இன்பம், பொருள் என்று அழைக்கப்படுகிறது.
இவற்றில் முதலிரண்டும் அறமும் இன் பமும் செழித்து ஓங்குவதற்குப் பெருமை தருகிற இடங்களாகும்.
பொருள் என்பது நாடும் அரசியலுமாகும்.
நாடும் அரசியலும் பண்போடு பெருமிதமாக அமைய வேண்டும்.
நாடு என்றால் வேறு யாரிடத்திலும் எதையும் நாடாதது.
‘நாடென்ப நாடா வளத்தது’ என்றும் அரசு என்பது ‘முறை செய்து காப்பது’ என்றும் வேலன்று மன்னவன் கோல் குளிர்ச்சி தருவதாக, கொட்டும் குற்றால அருவியைப் போல இன்பம் தருவது எனக் கருதும் வகையில் வள்ளுவர் அமைத்திருக்கிறார்.
வள்ளுவர், தமிழ்நாட்டு மூவேந்தர்களின் மரபுகளையோ, கொடி, பூ முதலியவற்றையோ கூறவில்லை. குறுநில மன்னர்களின் மரபுகளையும் கூறவில்லை.
அரசர்களின் பிறந்த நாள் விழாவையும் பிற விழாக்களையும் கூறவில்லை. முடிசூட்டும் சிறப்பையும் கூறவில்லை.
இறந்தபின் அடக்கம் செய்யும் வழக்கத்தையும் அதன் பிறகு உடனே மகனோ மற்றொருவனோ பொறுப்புக் கட்டிலேறும் முறையையும் கூறவில்லை.
வேந்தனுக்கு வேண்டிய வீரத்தையும் அற முறையையும் கூறினாரே அல்லாமல், அவன் கையில் ஏந்திய வாளையும் செங்கோலையும் புகழ்ந்து வருணிக்கவில்லை.
அரசனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாடு எவ்வாறு விளங்க வேண்டும் என்று கூறினாரே அல்லாமல், அரசன் வாழும் அரண்மனை எவ்வாறு புனையப் பெறவேண்டும் என்று கூறவில்லை.
ஆட்சிமுறைக்கு உறுதுணையாகும் சுற்றமும் நட்பும் பற்றிக் கூறினாரே அல்லாமல், அரச குடும்பத்தில் பெண் கொண்டும்
கொடுத்தும் சுற்றத்தாரானவர்களைப் பற்றியும் கூறவில்லை.
மக்களின் வாழ்க்கையை விளக்கி வழிகாட்டப் புகுந்த பெரியோர் ஆதலின் திருவள்ளுவர் விளக்கியுள்ள அரசியல் கருத்துகள் எந்த ஆட்சிமுறைக்கும் பொருந்தும் கருத்துகளாக விளங்குகின்றன; காலங்கடந்தும் ஒளிர்கின்றன.
முடியாட்சிக் காலத்தில் மன்னர்கள் போற்றத்தக்கவர்களாக இருந்ததைப் போலவே, குடியாட்சிக் காலத்திலும் மன்றத் தலைவர்களும் மற்ற உறுப்பினர்களும் போற்றத்தக்கவர்களாக இருக்கின்றனர்.
முடியாட்சியின் தலைவனைப் பற்றிக் கூற நேர்ந்தபோதும், மிகச் சிறந்த அரசனுடைய இயல்புகளையே கூறுகின்றார் வள்ளுவர்.
சிறந்த அரசன் என்பவன் மரபின்வழி வந்தவன், தேர்தலின் வழியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாட்டுத்தலைவன்.
எவ்வாறு செம்மையாகக் குடி மக்களின் கருத்திற்கு இணங்க, நன்மை விளைய ஆட்சி புரிவானோ, அவ்வாறே, மிக நல்ல செங்கோல் மன்னனும் குடிமக்களின் நன்மையையே குறிக்கோளாகக் கொண்டு தன்னலம் இன்றி ஆட்சி புரிதல் உண்டு என்பதை வரலாறுகளில் கண்டு தெளிகின்றோம்.
மன்னவன் மிகச் சிறந்தவனாக விளங்கும் போது அவன் முடியாட்சி முறையான் என்பதையே மறந்துவிடுகின்றோம்.
ஆகையால், திருவள்ளுவர் கூறும் மன்னனின் இயல்புகள் முடியாட்சித் தலைவனுக்கும் மிகவும் பொருந்துகின்றன.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (544)
திருவள்ளுவர் உயர்ந்த அரசியல் கருத்துகள் உடையவர்.
‘நிலனாள்பவன்’ (383), ‘
கோலொடு நின்றான்’ (552), ‘காவலன்’ (560)
முதலான பொதுச் சொற்களையும் அவர் ஆண்டிருக்கின்றார்.
ஆதலின் அரச, இறை, வேந்தன், மன்னன் என்னும் சொற்களைக் காணுமிடங்களில் இந்தக் காலத்திற்கு ஏற்ப, ஆட்சித் தலைவன் என்று பொருள் கொண்டு கற்பதே பயன் தருவதாகும்.
அரசனது இயல்பு கூறும் அரசியலையே
மிக விரிவாக இருபத்தைந்து அதிகாரங்களால் கூறி முதலில் வைத்துள்ளார்.
இந்தப் பகுதியில் தான் இறை, வேந்து முதலான சொற்கள் பல முறை பயின்றுள்ளன.
இந்த இருபத்தைந்து அதிகாரங்களில் நாற்பத்தாறு முறை ஆட்சித்தலைவனை இப்பெயர்களால் சுட்டிக் கூறியுள்ளார்.
கல்வி வேண்டும்,
கேள்வி வேண்டும்,
அறிவு வேண்டும்,
குற்றம் கடிந்த வாழ்வு வேண்டும், பெரியாரைத் துணைக் கொள்ள வேண்டும்,
சிற்றினம் சேராமல் வாழ வேண்டும், தெரிந்து (ஆராய்ந்து) செய்யும் இயல்பு வேண்டும்,
வலியும் காலமும் இடமும் அறிந்து வினை செய்யும் திறம் வேண்டும், தெரிந்து தெளியும் ஆற்றல் வேண்டும்,
தெரிந்து வினையை ஆளும் வன்மை வேண்டும்,
சுற்றம் தழுவவேண்டும்,
பொச்சாப்பு (சோர்வு) இல்லாமல் கடமைகளைச் செய்ய வேண்டும், செங்கோன்மை (நேர்மை) வேண்டும், கொடுங்கோன்மையை வெறுக்க வேண்டும்,
வெருவந்த (பிறர் அஞ்சி நடுங்கும் செயல்கள்) செய்யாமை வேண்டும், கண்ணோட்டம் வேண்டும்,
ஒற்று ஆளும் முறை வேண்டும், ஊக்கம் வேண்டும் –
இவைகளே அரசியலில் ஆட்சித் தலைவர்க்குத் திருவள்ளுவர் கூறும் இயல்புகளாகும்.
திருவள்ளுவர் முப்பால் எழுதி அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற பாகுபாடும் செய்து பத்துப் பத்துக் குறள்களை ஒவ்வோர் அதிகாரமாக வகுத்து, அதிகாரங்களுக்கு ஏற்ற தலைப்புகளும் இட்டு நூலை இயற்றியுள்ளார்.
பின் வந்த அறிஞர்கள் திருக்குறளை ஓதி ஓதிப் பால் தோறும் உட்பிரிவுகளை அமைத்துள்ளார்கள்.
அவர்கள் பொருட்பாலில் வகுத்த உட்பிரிவுகள் மூன்று.
அரசியல் அங்கவியல், ஒழிபியல் என்பன. பரிமேலழகர் உரையால் இதனை அறியலாம்.
அரசியல் ஐந்து ஐந்து அமைச்சியல்
ஈரைந்து
உருவரல் அரண் இரண்டு ஒன்று ஒண்கூழ்
இருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடி
பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை
என்று போக்கியார் என்னும் புலவர் பெயரால் உள்ள பழைய வெண்பா இங்கே நினைக்கத்தக்கது.
இதன்படி, பொருட்பால் ஏழு பகுதிகளை உடையது.
அரசியல் 25, அமைச்சியல் 10,
அரண் 2, கூழ் 1, படை 2, நட்பு 17, குடி 13ஆக எழுபது அதிகாரங்களை ஏழு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
இது மிகப் பொருந்துவதாகவே உள்ளது.
பொருட்பாலின் முதல் குறளிலேயே இந்தப் பாகுபாட்டிற்கு அடிப்படையும் காணப்படுகின்றது.
படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. (381)
இதில் உள்ளவாறு அரசாங்கம் (அரசின் அங்கம்) என்பதன் அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என்னும் ஆறு அங்கங்களையும் தனித்தனியே வகுத்து, இந்த ஆறனையும் உடைய ஆட்சித்தலைவனைப் பற்றித் தனியே சில அதிகாரங்களில் கூறி ஏழு வகையாகப் பாகுபாடு செய்தல் திருக்குறளின் அமைப்பு முறைக்கு ஏற்றதாக உள்ளது.
திருவள்ளுவர் பகுத்தறிவாளர் என்பதை கண்டால் வியப்பாக இருக்கிறது.
எப்பொருன் எத்தன்மைத்தாயிலும் அப்பொருள் மெய்ப்பொருள் காண வேண்டும் என்பது எவ்வளவு பெரிய சிந்தனை.
சாக்ரட்டீஸ், பிளாட்டோ போன்ற அறிஞர்களும் தெளிவான கடவுட்கோட்பாட்டைச்
சுட்டிக்காட்டவில்லை.
பல தெய்வங்கள் இருக்கலாம். அவை பற்றிய கதைகளில் பொய்யும் மெய் யும் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையே கொண்டிருந்தார்கள்.
சாக்ரட்டீஸுக்கு நஞ்சு கலந்து கொண்டு வந்து கொடுத்த சிறைக்காவலனிடம் இவ்வுலகிலிருந்து வேறு உலகிற்கு செல்லும் என்னுடைய பயணம் சிறப்பாக இருப்பதற்கு நான் தெய்வங்களை வேண்டிக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாக பிளாட்டோ எழுதுகிறார்.
திருவள்ளுவர் போல தெளிவு, அவர்களுக்கு இல்லை.
சிந்தனை என்பதும் உண்மையைத்தேடி அறிவது என்பதும் கி.மு.300 400 ஆண்டுகளில்தான் தோன்றியது.
ஆனால் திருவள்ளுவர் எல்லா நிலையிலும் எந்தச் சார்பிலும் சாராமல் அருளுடமை, தவம், மெய்யுணர்தல், நிலையாமை, அவா அறுத்தல், ஊழ் ஆகிய விவாதத்திற்கு உரிய ஆன்மிகக் கருத்துகளை மிகத் தெளிவாகவும் எவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதியிருக்கிறார்.
‘வகுத்தான் வகுத்த வகை’ ‘பிறப்பு என்னும் பேதைமை’, ‘மெய்ப்பொருள் காண்பது’ என்ற கருத்துகளையெல்லாம் தமக்கு சுட்டிக்காட்டுவது திருவள்ளுவரின் பேரறிவைப் புலப்படுத்துகிறது.
தோண்டத் தோண்ட பொருள்களை வாரிவழங்கும் சுரங்கங்களைப் போல திருவள்ளுவர் ஞானப் புதையலாக விளங்குகிறார்.
‘அன்புடையார் என்பும் உரியர், “அன் பின் வழியது அறநிலை’, ‘அறத்தான் வருவதே இன்பம். ‘செம்பொருள் காண்பது அறிவு’ என்று அன்பு, அறம், அறிவு என்ற மும்மைப் பொருளை மிகச் செம்மையாக விளக்குகிறார்.
திருவள்ளுவரின் நிலைத்த புகழ் தமிழ் இனத்தை என்றும் வாழ்விக்கும் என்பது உறுதி.
ஜன. 16 திருவள்ளுவர் நாள்.
கட்டுரையாளர்:
முனைவர் ஒளவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழக அரசு.

Add a Comment