POST: 2024-12-23T05:55:22+05:30

செய்தி வெளியீடு எண்: 2304

நாள் : 22.12.2024

தமிழ் வளர்ச்சித் துறை

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் 2024-25ஆம் ஆண்டிற்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அரசாணை வழங்குதல்.

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 188 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 15.32 கோடி நூலுரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதில் முத்தமிறிஞர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 139 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு 9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு நாளிதுவரை 31 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரியையர்களுக்கு ரூ.3.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 22.08.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இவ்வறிவிப்பிற்கிணங்க இலக்கிய இலக்கணப் படைப்புகளாகவும் ஆய்வாகவும் தமிழன்னைக்குத் தொண்டறம் பூண்டு வாழ்ந்து மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான திருமதி க. ராஜாத்தி அம்மாள் அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினை 22.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் அவர்களின் இல்லத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் இன்று (22.12.2024) செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி

முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் அவர்களுடைய நூல்கள் நாட்டுமையாக்குவதற்காக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அந்த வகையில் அவருடைய அனுமதியோடு, அவரின் உத்தரவின் அடிப்படையில் இன்றைக்கு அந்த அரசாணையை நம்முடைய மாண்புமிகு முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் அவர்களுடைய மாண்புமிகு துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மாள் அவர்களிடத்தில் அரசின் சார்பில் ஒப்படைத்தோம்.

ஏறத்தாழ பல்வேறு படைப்புகளை தந்தவர்.

இன்னும் சொல்லப்போனால், பள்ளிப்பருவத்தில் தான் எழுதத் துவங்கி “மாணவன் நேசன்” என்கின்ற பத்திரிகை கையேடை துவங்கி அதிலிருந்து முரசொலியில் உடன்பிறப்பிற்கான பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதி இடையில் குறளோவியம். நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் போன்ற படைப்புகளை தந்தவர்.

திரையுலகிலும் முத்திரை பதித்தவர்.

அதேபோல, 5 முறை இந்த நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 70 ஆண்டு காலம் தலைவராக பணியாற்றியவர்.

அப்படிப்பட்ட மகத்தான தலைவருடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டு, இதுவரை நாட்டுமையாக்கப்பட்டிருக்கிறது 179

அதற்கெல்லாம். படைப்பாளர்களுடைய நூல்கள் அரசின் சார்பில், நிதி வழங்கப்பட்டிருந்தாலும் பாரதியாரை தவிர, இன்றைக்கும், மாண்புமிகு முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் அவர்களின் குடும்பத்தார்கள் அதற்கு எதுவும் தொகை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கட்டணம் இல்லாமல், இன்றைக்கு நிதி இல்லாமல் அந்த படைப்புகள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அந்த வகையில் அதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர் அவர்களுடைய குடும்பத்தார் அனைவருக்கும். மரியாதைக்குரிய அம்மா தயாளு அம்மாள் அவர்கள் குடும்பத்தாருக்கும். அதேபோல. அம்மையார் ராஜாத்தி அம்மாள் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியை தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மற்றும் எழுத்தாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி – மொத்தம் எத்தனை நூல்கள்?

பதில் 179 நூல்கள் – பல்வேறு தலைப்புகளில், நெஞ்சுக்கு நீதி, குறளோவியம். சங்கத்தமிழ் மற்றும் முரசொலியில் தொடர்ந்து உடன்பிறப்பிற்கான கடிதங்கள் இப்படிப்பட்ட அனைத்து படைப்புகளும் இன்றைக்கு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. வே. ராஜாராமன் இ.ஆ.ப., மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *