POST: 2024-06-15T08:50:34+05:30

சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம்

செய்திக் குறிப்பு

தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்!

இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாகும்!!

என்னும் பாவேந்தரின் கவிதை முழக்கத்தைத் தமிழ்நாடு அரசு தலைமேற்கொண்டு, தமிழுக்கு அழகூட்டும் நன்முயற்சியின் விளைவுதான் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாகச் செயற்படுத்தப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் பெருந்திட்டமாகும்.

அறிவு வளர்ச்சியில் அக்கறை இல்லாச் சமூகம் உயர இயலாது என்பதை உணர்ந்தே தமிழ்ச் சமூகம் காலந்தோறும் செயலாற்றி வருகின்றது.

வரலாறு அறியப்படாத காலம்தொட்டே இலக்கிய; இலக்கணப் படைப்புக்களைத் தருவதில் தமிழ்வாணர்கள் ஏற்றமுடனே இருந்து வருகின்றனர் என்பது கண்கூடு.

அந்நிலை இன்றும் தொடர்வதன் அறிகுறியே, இன்றும் தமிழில் எண்ணற்ற நூல்கள் வெளிவருவதே. காலந்தோறும் இந்நன்னிலை தொடருவதற்கே இப்பெருந்திட்டம் ஆக்கம் பெற்றுள்ளது.

அருவி நீர்த்துளிகளைப் போல ஆர்த்தெழும் நூல்களில், கால நீரோட்டத்தை எதிர்த்துப் பயன் தரத்தக்கனவாக – திட்பமும் நுட்பமும் நிறைந்தனவாக அமைவன சிலவே.

அத்தகைய நூல்கள் வெளிவருதலின் இன்றியமையாமையை உணர்ந்து, கதை புனைவோரை – காவியம் படைப்போரை – கட்டுரையாளர்களை – ஆய்வு முனைவோரை ஊக்குவிக்க, அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவினரால்; அரசால் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப; வரப்பெறும் நூல்களை ஆய்வு செய்து அறிஞர்களின் மதிப்பீடுகளைப் பெற்று, தமிழுக்குத் தகத்தகாய நூல்களைப் படைத்தளித்த நூலாசிரியர்களுக்கும், அந்நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிப் பெருமை கொள்கின்றது.

அவ்வகையில், 2023 ஆம் ஆண்டில்
(01.01.2023 முதல் 31.12.2023 வரை)
தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள 33 வகைப்பாடுகளின் கீழ், பரிசுப்போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.

கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாக ஒரு நூல் தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்குப் பரிசுத்தொகையாக ரூ.30,000/- அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்குப் பாராட்டுத்தொகையாக ரூ.10,000/- என ஒரு நூலுக்கு
ரூ. 40,000 வரை பரிசுத்தொகைகள் வழங்கப்பெறும்.

நூல் வகைப்பாடு:

1. மரபுக்கவிதை
2. புதுக்கவிதை
3. புதினம்
4. சிறுகதை
5. நாடகம் (உரைநடை, கவிதை)
6. சிறுவ ர் இலக்கியம்
7. திறனாய்வு
8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
9. பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
10. நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
11. அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
12. பயண இலக்கியம்
13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
14. நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு
15. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
16. பொறியியல், தொழில் நுட்பவியல்
17. மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
18. சட்டவியல், அரசியல்
19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
20. மருந்தியல், உடலியல், நலவியல்
21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
22. சமயம், ஆன்மிகம், அளவையியல்
23. கல்வியியல், உளவியல்
24. வேளாண்மையியல், கால்நடையியல்
25. சுற்றுப்புறவியல்
26. கணினியியல்
27. நாட்டுப்புறவியல்
28. வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்
29. இதழியல், தகவல் தொடர்பு
30. பிற சிறப்பு வெளியீடுகள்
31. விளையாட்டு
32. மகளிர் இலக்கியம்
33. தமிழர் வாழ்வியல்

பரிசுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ அல்லது இத்துறையின் வலைதளத்திலோ இலவசமாகப்
(https://tamilvalarchithurai.tn.gov.in/?page_id=3405) பதிவிறக்கம் (Download) செய்து பெற்றுக்கொள்ளலாம்.

அஞ்சல் வாயிலாகப் பெற 23X10 செ.மீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில் 10 ரூபாய் அஞ்சல் வில்லை ஒட்டி அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

போட்டிக்கான விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100/-
“தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை“ என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை (Demand Draft) சேர்த்து அளிக்க வேண்டும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள்: 30.8.24

அனுப்ப வேண்டிய முகவரி

தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்,
சென்னை 600 008.
தொலைபேசி எண்கள். 044 – 28190412, 28190413

தமிழ் வளர்ச்சி இயக்குநர்

தமிழ்வளர்ச்சித் துறை

விண்ணப்பப் படிவம்

சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் – 2023

1. நூலின் பெயர் :
2. பதிப்பிக்கப்பட்ட ஆண்டு :
3. நூலாசிரியர் பெயர் (புனைபெயர் உள்பட)
தமிழிலும் ஆங்கிலத்திலும் :

4. முகவரி (தொலைபேசி எண்ணுடன்) :

5. பதிப்பகத்தார் மற்றும் பதிப்பகத்தின்
பெயர் (தமிழிலும் ஆங்கிலத்திலும்) :

6. முகவரி (தொலைபேசி எண்ணுடன்) :

7. நூலாசிரியர் ஒப்பம் அல்லது இசைவுக் கடிதம் :

8. பதிப்பகத்தார் ஒப்பம் அல்லது இசைவுக் கடிதம் :

9. பரிசுப் போட்டியில் பங்கு பெறும் தலைப்பு :

10. நூலாசிரியரின் தன் விவரக் குறிப்பு
(தனித்தாளில் இணைக்கப்பட வேண்டும்) :

11. பதிவுக் கட்டணம் செலுத்திய விவரம் :

உறுதி மொழி

இந்நூல் போட்டிக்குரிய ஆண்டில் வெளியிடப்பட்டது என்றும்,

இத்தலைப்பில்/ வகைப்பாட்டில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினை இருமுறை பெற்றிருக்கவில்லை என்றும்,

இதற்கு ஒன்றிய / மாநில அரசிடமிருந்து நிதியுதவி / பரிசு எதுவும் பெறவில்லையென்றும்,

பாடநூலில் இந்த நூல் இடம் பெறவில்லை என்றும்,

இந்த நூலானது அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள் ஆகியவற்றிலிருந்து தொகுத்து வெளியிடப்படவில்லை என்றும்,

பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் பெறுவதற்கு இந்நூல் ஆய்வேடாக அளிக்கப்படவில்லை என்றும்,

நாளிதழ்களில் இது தொடராக வரவில்லை என்றும்,

வானொலி/தொலைக்காட்சிகளில் தொடராக ஒலி/ஒளிபரப்பு ஆகவில்லையென்றும்

உறுதி அளிக்கிறேன்.

மேலும், இப்பரிசுப் போட்டிக்குரிய விதிமுறைகள் அனைத்தையும் நன்கு அறிந்துள்ளேன் என்பதையும் அவற்றிற்கு உட்படுகிறேன் என்றும்,

நான் அளித்துள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் உறுதி அளிக்கிறேன்.

நூலாசிரியர் ஒப்பம்

பதிப்பகத்தார் ஒப்பம்

இணைப்பு : நூல்படிகள் – 5

சிறந்த நூல் பரிசுத்திட்ட விதி முறைகள்

1) பரிசுப் போட்டியில் பங்கு பெறுவோர் விண்ணப்பப் படிவத்தினை விடுபாடின்றி முழுமையாக நிறைவு செய்து அனுப்புதல் வேண்டும்.

முழுமையாக நிறைவு செய்யப்படாத விண்ணப்பம் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2) ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் அனுப்புதல் வேண்டும்.

3) போட்டிக்கு அனுப்பப்பெறும் நூல் ஒவ்வொன்றிலும் 5 படிகள் அனுப்புதல் வேண்டும்.

4) பின்வரும் வகைப்பாடுகளில் போட்டிக்கு நூல்கள் பெறப்படும்.

1. மரபுக்கவிதை
2. புதுக்கவிதை
3. புதினம்
4. சிறுகதை
5. நாடகம் (உரைநடை, கவிதை)
6. சிறுவர் இலக்கியம்
7. திறனாய்வு
8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
9. பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
10. நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
11. அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
12. பயண இலக்கியம்
13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
14. நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு
15. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
16. பொறியியல், தொழில் நுட்பவியல்
17. மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
18. சட்டவியல், அரசியல்
19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
20. மருந்தியல், உடலியல், நலவியல்
21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
22. சமயம், ஆன்மிகம், அளவையியல்
23. கல்வியியல், உளவியல்
24. வேளாண்மையியல், கால்நடையியல்
25. சுற்றுப்புறவியல்
26. கணினியியல்
27. நாட்டுப்புறவியல்
28. வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்
29. இதழியல், தகவல் தொடர்பு
30. பிற சிறப்பு வெளியீடுகள்
31. விளையாட்டு
32. மகளிர் இலக்கியம்
33. தமிழர் வாழ்வியல்

5) பரிசுப் போட்டிக்குக் கருதப்படும் நூல்களின் முதல் பதிப்பானது போட்டிக்குரிய ஆண்டில் சனவரி முதல் நாளிலிருந்து திசம்பர் 31க்குள் (01.01.2023 – 31.12.2023) அச்சிடப்பட்டு வெளியிடப்பெற்றிருக்க வேண்டும்.

6) நூலாசிரியர்/பதிப்பகத்தார் ஒப்பம் அல்லது இசைவுக் கடிதத்துடன் அனுப்பப்பெறும் விண்ணப்பங்கள் போட்டிக்குக் கருதப்பெறும்.

7) நூலாசிரியர் ஒப்பமோ இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்பகத்தாருக்கு மட்டுமே பரிசளிக்கப்படும்.

நூலாசிரியருக்குப் பரிசுகள் வழங்கப்படமாட்டாது.

பதிப்பகத்தார் ஒப்பமோ இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்பகத்திற்கான பரிசுகள் வழங்கப்படமாட்டாது.

8) இப்போட்டிக்காகப் பெறப்படும் நூல்கள் அரசால் அமர்த்தப்பெறும் நிலைக்குழு ஆய்ந்து பரிசுக்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்கும்.

9) குறிப்பிட்டதொரு நூல் எந்த வகைப்பாட்டைச் சார்ந்தது என்று படிவத்தில் குறிப்பிடப்படாத நேர்வில் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.

10) வாழும் ஆசிரியர்களின் நூல்களும், நூல்கள் வெளியிடப் பெற்றபோது வாழ்ந்து கொண்டிருந்த ஆசிரியர்களின் நூல்களும் மட்டுமே இத்திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

நேர்வுக்கேற்ப, நூலாசிரியர்களுக்கோ, அவர்களுடைய மரபுரிமையர்களுக்கோ பரிசுகள் வழங்கப்பெறும்.

11) அரசால் ஏற்கப்பட்டுள்ள சீரமைக்கப் பெற்ற எழுத்துக்களில் அச்சிடப்பெற்ற நூல்கள் மட்டுமே போட்டிக்குக் கருதப்படும்.

12) தொகுப்பாக அமையும் குறு நாவல்கள், சிறுகதை என்னும் தலைப்பில் அடங்கும்.

13) போட்டிக்கு வரப்பெறும் நூல்கள் முன்னுரை முதலியன உட்பட இரட்டை கிரவுன் அளவில் 150 பக்கங்களுக்குக் குறையாமலும், டெம்மி அளவில் 130 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

மரபுக் கவிதை, புதுக்கவிதை சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று தலைப்புகளுக்கும் பக்க வரையறை இல்லை.

கவிதை, சிறுவர் இலக்கியம் உட்பட அனைத்து வகைப்பாடுகளின் கீழான நூல்களும் கிரவுன் அளவுக்குக் குறையக்கூடாது.

14) ஒவ்வொரு வகைப்பாட்டிலும் தெரிவு செய்யப்பெறும் சிறந்த நூலை எழுதிய நூலாசிரியருக்குப் பரிசுத் தொகையாக ரூ.30,000/- வழங்கப்பெறும்.

இந்நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு பரிசுத் தொகையாக ரூ.10,000/- வழங்கப்பெறும்.

நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெறும்.

15) ஒரு தலைப்பில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றால் அத்தலைப்பில் பரிசு வழங்க இயலாது.

16) ஒரு தலைப்பில் / வகைப்பாட்டில் இருமுறை பரிசு பெற்ற நூலாசிரியர் அதே வகைப்பாட்டில் / தலைப்பில் மூன்றாவது முறையாகப் பரிசு பெற இயலாது.

17) ஒன்றிய / மாநில அரசின் நிதியுதவி அல்லது பரிசு பெற்ற எந்நூலும் இப்பரிசுப் போட்டிக்குக் கருதப்பட மாட்டாது.

18) பரிசு பெறும் நூல், நூலாசிரியர்களின் கூட்டு முயற்சியால் ஆக்கப்பட்டதாயின் அந்நூலின் பரிசுத் தொகை அந்நூலாசிரியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

19) அயல்நாட்டு நூலாசிரியரால் எழுதப்பெற்ற ஒரு நூல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொடர்புடைய ஆசிரியருக்குப் பாராட்டுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.

20) பாடநூலில் இடம் பெற்றுள்ள நூல்கள் பரிசுப் போட்டிக்குக் கருதப்படமாட்டா.
21) அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள், பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு அளிக்கப்பெற்ற ஆய்வேடுகள், நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பெற்றவை, வானொலி, தொலைக்காட்சியில் தொடராக இடம் பெற்றவை (கவிதை, உரை நீங்கலாக) நூலாக ஆக்கப்பட்டிருப்பின் அவை இப்போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
22) போட்டிக்காக வரப்பெற்ற நூல்களை எக்காரணத்தைக் கொண்டும் திருப்பியளிக்க இயலாது.
23) பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் அவர்கள் பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் பெறுவதற்காகச் சென்னை வந்து திரும்புவதற்காக தொடரியில் இரு வழி இரண்டாம் வகுப்பு சாதாரணக் கட்டணம் அளிக்கப்பெறும். சென்னையில் வசிப்பவர்களுக்குப் போக்குவரத்துப்படி அளிக்கப்படும். வெளிநாட்டினருக்குப் பயணப்படி எதுவும் வழங்கப்பெறமாட்டாது.
24) இத்திட்டம் தொடர்பான விதிகளைத் தேவைக்கேற்ப அவ்வப்போது திருத்தவோ, மாற்றவோ, நீக்கவோ அரசுக்கு அதிகாரம் உண்டு.
25) இத்திட்டத்தைச் செயற்படுத்துவதில் எழக்கூடிய இடர்ப்பாடுகள் குறித்து அரசால் மேற்கொள்ளப்படும் முடிவே இறுதியானதாகும். அம்முடிவினை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோ பிற வகையிலோ எதிர்த்தல் கூடாது.
26) இப்போட்டியில் கலந்து கொள்ள ஒவ்வொரு நூலுக்கும் பதிவுக்கட்டணமாக ரூ.100/- செலுத்தப்பட வேண்டும். இத்தொகை தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாகவோ அல்லது அலுவலக நாட்களில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நேரிலோ செலுத்தலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *