Arul.2009/FB/#6811
சொல்வயல்
திங்கள் மின்னிதழ்
திசம்பர் -2025
பக்கம் எண். 6 முதல் 9
வழக்குச் சொற்கள் முடிவதில்லை
முனைவர் ஔவை ந. அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து நீக்க வேண்டுமென்ற துடிப்பு ஒருபுறத்திலும், இவற்றை நீக்க வேண்டியதில்லை என்ற கருத்து மறுபுறத்திலுமாகத் தமிழின் மொழிக்கொள்கை இருவேறு இயல்பாக உருப்பெற்றுள்ளதைப் பல்வேறு முனைகளில் தமிழ் உலகம் அறிந்து வருகிறது.
இந்நிலையில் ஒருசாரார் புதிய அறிவுத்துறைப் பொருண்மைகளைக் குறிப்பதற்குப் பிறமொழிச் சொற்களை எடுத்தாளுதலில் எவ்வகையான தடையும் இருக்கக் கூடாது என்கின்றனர்.
வேறொரு சாரார் தமிழ்ச் சொற்களைத் தான் எங்கும் நாம் வழங்குதல் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இப்போக்கினைப் பற்றி, “இது முடிந்து விடவில்லை. இந்நிலை என்றேனும் முடிந்துவிடப் போவதும் இல்லை. இது புதிதாக உண்டான ஒரு விவாதமும் அன்று.
தமிழ் மொழியில் தொடக்க நிலையிலிருந்தே எப்பொழுதும் இது உள்ளது தான்.
ஆனால் முன்பெல்லாம் கட்சிப் பிரதிகட்சிகள் இல்லை. வாதப் பிரதிவாதங்களும் இல்லை.
பிறமொழிக் கலப்பினால் நமது மொழி பாழாய்விடும் அதைப் பாதுகாத்தற்குத் தமிழ்ப் பாதுகாப்புப் படை ஒன்று வேண்டும் என்று படை திரட்டியதும் இல்லை.
எனினும், உள்ளூர அடிப்படையில் இந்த விவாதம் அமைதியாய் நடந்து கொண்டுதான் இருந்தது.
நமது தாய்மொழிக்கு மட்டும் இவ்விவாதம் தனி உரிமையுமில்லை; வழக்கிலுள்ள எல்லாமொழிகளிலும் இதுகாணப்படுவதே”என்றார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.
ஒருவர் வாணிகத் துறையில் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இவரிடம் விடுமுதல் அதிகமாயில்லை. தம்மிடமுள்ள கைப்பொருளுக்கு ஏற்றபடி சுருங்கிய அளவில் வணிகம் தொடங்குகிறார்.
இவரிடத்தில் ஐம்பது சரக்குகள் தாம் உள்ளன. இவரைச் சுற்றி வாழும் மக்களுக்குத் தேவையோ இருநூறு சரக்குகள். அச்சரக்கு அவரிடம் இல்லை.
அதைக் காட்டிலும் தம்மிடமுள்ள வேறொரு சரக்கு அதிகம் பயனுடையது என்று சொல்லி இச்சரக்கை இவர் கொடுத்து வருகிறார். மக்கள் நிறைவு அடையவில்லை.
இதைக் கண்டதும் அவர்கள் கேட்கும் சரக்கு இதுதான் என்று தம் கடையிலுள்ள பிறிதொரு சரக்கைக் கொடுத்து வருகிறார்.
மக்கள் நிறைவடையாமல், வாணிகர் மீது மிகுந்த வெறுப்புக் கொள்ளுகிறார்கள்.
இவர் கடையில் வாடிக்கை வைத்துக் கொள்ளாது வேறு கடைக்கு மக்கள் செல்கிறார்கள்.
வாணிகர் மற்ற கடைகளோடு சமமாகப் போட்டி போட்டு, மக்கள் வேண்டும் சரக்குகளையும் வாங்கி வைத்து அவர்களையும் நிறைவு பண்ணித் தருகிறார்.
இவ்வணிக நிகழ்ச்சி போன்றதே மொழி வரலாறும்.
சொற்களே சரக்குகள்: மக்கள் தேவைதான் புதிய அறிவுத் துறைகள்.
ஆனால் வருங்காலத் தமிழைப் பற்றி ஒன்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.
வாணிகர் தனது சரக்குகளைச் செய்தது போலத் தமிழ்மொழியும் உயிர் என்ற சொல்லை எவ்வளவு பயன்படுத்தக் கூடுமோ அவ்வளவும் செய்து விட்டது.
ஆனால் “நாழி முகவாது நானாழி”. புதுச் சரக்குகளை வாங்கத்தான் செய்தார் வாணிகர்.
அது போல ஆன்மா என ஒன்று உண்டு என்று சொன்னாலும் சரி. சொல்லாவிட்டாலும் சரி, சொல்லளவிலாவது அதனைக் கடன் வாங்க வேண்டியதுதான்.
கடன் வாங்கிய அச்சொல்லைத் தள்ளிவிட முடியாது என்றும் அவர் குறிப்பதும் சிந்தனைக்குரியது.
பிறமொழிச் சொற்களை முழுவதும் ஏற்பது, அறவே தள்ளி விடுவது என்ற நிலைகளை விடுத்து, இயன்ற வரையில் தமிழாக்கம் செய்தும் தனித்தமிழில் எழுதியும் வரும் நிலை கடந்த 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
பேரறிஞர் அண்ணா இம்முயற்சியில் தாம் எவ்வளவு வெற்றி பெற்றோம் என்பதைக் குறிப்பிடும் போது,
“தம்பி பலவற்றை நான் எழுதிய பிறகு அவற்றில் பிறமொழிச் சொற்களின் கலப்பையெண்ணி வருந்தியுள்ளேன் என்னால் இயன்றது அவ்வளவு தான்.
நீயாவது பிறமொழிச் சொற்கலப்பை நீக்கி எழுதவும் பேசவும் பழகு”
எனக் கூறுவது இங்குக் கருதத்தக்கது.
உலக அறிவியல் வளர்ச்சியோடு ஒப்புநோக்கி பேரறிஞர் வா. செ. குழந்தைசாமி குறிப்பிடும் கருத்துகள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டி, மொழிக் கோட்பாட்டில் ஒரு புதிய அணுகுமுறையை நமக்கு அறிவிப்பதாக அமைந்திருக்கிறது.
“தூய்மை, தனித்தன்மை என்பது உயர்ந்த கூறுபாடுகளைக் குறிப்பிடும் சொற்கள்.
ஆனால், மொழித்துறையில் எது தூய்மை. எது தனித்தன்மை என்பதிலும்,அது எங்கு, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் நமக்குத் தெளிவு வேண்டும்.
கன்னித் தன்மை தான் தூய்மையுடையது என்பதில்லை. தாய்மையும் தூய்மையானதே.
தன்மை வேறு: தனித்தன்மை வேறு. பலருடன் சேர்ந்து செயற்படும் பொழுது தான், ஒருவரது தனித்தன்மை தெரிகிறது.
தமிழ் விண்ணிலிருந்து பிறந்தது அன்று; விண்ணவர் தந்ததும் அன்று: மனித சமுதாயம் படைத்த மொழி: மனித சமுதாயம் வளர்த்த மொழி: மனிதன் படைத்த எதுவும் குறையுடையது; வளர்ச்சிக்கு வழியுடையது; வளர வேண்டிய தேவையுடையது.
எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் தேவையான எல்லாவற்றையும், நம் மூதாதையர்கள், மொழியைப் பொறுத்தவரை முடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று நாம் எண்ணவோ, நம்பவோ இடமில்லை.
தமிழும் உலகிலுள்ள மற்றைய மொழிகளைப் போன்றதே.
ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்புகள் இருக்கலாம்.
தமிழுக்குச் சில சிறப்புகள் கூடுதலாகவே இருக்கலாம். இருப்பினும், வளர்ந்த நாட்டினர் தம் மொழி வளர்ச்சி, அதில் அவர்கள் கடைப்பிடித்த முறை, அவர்கள் கண்ட அனுபவம் ஆகியன சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ நமக்கும் பயன்படும்:
பயன் தரும்.
நமது மொழி மற்ற மொழிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இயல்பும், சிறப்பும் உடையது என்பது போன்ற பார்வையோடும், மற்ற மொழியினர் அனுபவம் நமக்குத் தேவையில்லை. அல்லது பயன்படாது என்னும் மனநிலையோடும், காதும், கருத்தும் மூடிய நிலையில் இருந்து கொண்டு எழுதுவதும், பேசுவதும் தக்க பாதையாகாது.
முன்னேறியுள்ள நாடுகளின் கடந்த கால அனுபவங்களை ஆய்ந்து, அவற்றை இயன்ற வழியில், தேவையான மாற்றங்களோடு பயன்படுத்தி, அதன்வழி நாம் பயன் பெறவேண்டும் என்ற நோக்கம் நமக்கு வேண்டும்”.
அருந்தமிழில் அயற் சொற்களை ஆய்வு செய்த வகையில், எதிர்கால நலன் கருதி நாம் ஏற்கத் தக்கதாகத் துணைவேந்தர் வா. செ. குழந்தைசாமி கருத்து அமைகிறது.
எனினும், அயல்மொழிச் சொற்கள் வழக்கில் வந்தமை கருதி, பொதுமக்களுக்கு என்று எழுதும் நூலில் பலவாகப் பிறமொழிச் சொற்கள் அமையுமானால், அவர்களுக்கு என்ன விளங்கும்?
கல்லூரியில் பாடநூல்கள் வேறு, பொதுமக்கள் படிக்கும் நூல்கள் வேறு.
பொதுமக்களுக்கு அவர்கள் அறிந்த சொற்களைக் கொண்டே தெளிவாக எழுதி நாம் விளக்க வேண்டும்.
இங்கே மணிப்பிரவாள நடை பயன்படாது. இதனாலேயே இந்த நாட்டுப் பழைய மணிப்பிரவாள நடை வேர்கொள்ளாது மறைந்து விட்டது.
உலகம் போகின்ற போக்கில், பொதுமக்கள் மக்களாட்சியில் சிறந்த இடம் பெற வேண்டுமானால், உலக அறிவை எல்லாம் ஒரு வகையாக அவர்கள் எளிமையாகப் பெற்றே தீரவேண்டும்.
கலைச் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களாக அவர்கள் வாயிலும் காதிலும் இனிக்கின்ற காலம் அமைய வேண்டும்.
முற்காலத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதினாலன்றிச் சில கருத்துகளை விளக்கவே முடியாதென்று அறிஞர்கள் சிலர் கருதினார்கள்.
ஆனால் நாளடைவில் அந்த அறிவையெல்லாம் எளிய தமிழில் எழுதிக் காட்டக்கூடும் என்ற நிலை ஏற்பட்டபோது, மணிப்பிரவாள நடை தானாவே மறைந்து போனது.
இலத்தீனில் தான் கருத்துகளைத் தெரிவிக்க முடியுமென்று நியூட்டன் எழுதினார்.
இப்போதோ அந்த நிலைமாறி ஆங்கிலத்தில் எழுதும் காலம் அமைந்து விட்டது.
அந்த நிலை தமிழில் ஓராண்டில் ஈராண்டில் வாராது. எனினும், கற்றவர்கள் பொதுமக்களுக்காக எழுதும் போது இந்த நிலை படிப்படியாக வளரும். அதுவரையிலும் ஆங்கிலத்தமிழ் மணிப்பிரவாள நடை வழக்கத்தில் இருந்து கொண்டு தான் வரும்.
பாவேந்தர் பாரதிதாசன் பல புதிய சொல்லாக்கங்களை நமக்கு வழங்கிய போதிலும் அவரும், மியூசியம், தியேட்டர், இண்டியன், ரெயில், இந்தியன் பார்லிமெண்டரி. கவர்னர் ஜெனரல், கோர்ட், எலக்சன், கொம்முயூன், எலச்சியம், அத்மினிஸ்ராத்தேர், பிரெஞ்சு, சர்க்கார், போஸ்த், பிரிட்டிஸ், ஹைதராபாத், பிர்க்கா. தாலுக்கா. ஸ்தலஅதிகாரி, காண்டிராக்ட்,
பம்பாய், கிராணிக்கல், பிரிபிரஸ் ஜர்னல், நேஷனல் ஸ்டாண்டர்ட், ரிமாண்டு. கமிஷன். கார்ப்பரேஷன், மோட்டார், சோஷலிஸ்டுகள் போன்ற ஆங்கிலச் சொற்களைத் தம்முடைய படைப்புகளில் சேர்க்க நேர்ந்ததை எண்ணிப் பார்க்கலாம்.
ஆங்கிலம் என்பது ஆங்கிலேயர் மொழி என்னும் பொருளுடையதன்று.
ஆங்கில மொழி இன்றைய நிலைக்கு உலக வளர்ச்சியில் புதுமையின் வடிவமாக, புதுமையின் வாய்க்காலாக அமைகிறது.
அதனைத் தமிழ்நிலத்தில் பாய்ச்சிக் கொள்வதில் கேடொன்றுமில்லை. பழையன இங்கு நிறைய உண்டு. எல்லாம் செழிப்பாக வளர்வதில் என்ன ஐயம்?” எனப் பேராசிரியர் தெ. பொ. மீ. வினவுவது. வருங்காலம் நோக்கித் தமிழில் ஆங்கிலக் கலப்பு நிகழ்வதைத் தவிர்க்க இயலாது என்பதைத் தெளிவாக்குகிறது.
அறிவுத்தளத்தில் ஆங்கிலத்தை முற்றிலும் புறக்கணித்துச் செயலாற்றவியலாது என்பதனை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரும் உரிய காரணங்களோடு எடுத்துரைத்துள்ளார். ‘
ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா?’ என்ற தம் கட்டுரையொன்றில், ”
ஓர் உலகப் பொதுமொழிக்கு இருக்க வேண்டிய இயல்புகளெல்லாம் ஆங்கிலத்திற்கு ஒருங்கே அமைந்துள்ளன. …
நாகரிக வுலகிலுள்ள எல்லாக் கலைகட்கும் நூல்கட்கும் உரிய சொற்களெல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன.
ஞாலத்தில் மேலையர்க்குத் தெரிந்த எல்லாப் பொருள்களும் ஆங்கிலத்திற் பெயர் பெற்றுள்ளன. …
ஆதலால் அறிவியன் மொழிக்கும் அன்மொழிக்கும் வேறுபாடறிந்து, ஆங்கிலத்தைக் கடைப்பிடிக்க”
என்று குறித்துள்ளார் தேவநேயப் பாவாணர்.
மேற்குறித்த அறிஞர்தம் கருத்துகளையெல்லாம் ஆழ உள்வாங்கினால் மொழிப் பயன்பாடு குறித்த தெளிநிலை நமக்குள்புலப்படும்.
சொல்வளம் மிகுந்த அருந்தமிழில் கலைச்சொல்லாக்கம் செய்கையில் மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக சுருக்கமாக அச்சொற்கள் அமைந்திட வேண்டும்.
பல்வேறு துறைகள் சார்ந்து ஆங்கிலத்திலுள்ள குறியீடுகள், அறிவியலறிஞர்களின் பெயர்களால் வழங்கப்பெறுகின்ற விதிகள் கருவிகள் கண்டுபிடிப்புகள், நிறுவனங்களின் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் உள்ளபடியே ஒலிபெயர்ப்பாகப் பயன்படுத்தலாம்.
மற்றபடி, கலைச்சொல்லாக்கம் செய்ய இயலுகின்ற அனைத்தையும் அருந்தமிழால் செய்து, மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கலாம்.
இவற்றையெல்லாம் நுண்ணாய்ந்துதான், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வாயிலாகச் ‘சொற்குவை’ என்ற அருமையான ஓர் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு செயற்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, சொற்பிறப்பியல் பேரகரமுதலி, ஆட்சிச்சொல் அகராதி, தமிழ் இணையக் கல்விக் கழகக் கலைச்சொல் அகராதி, சொல் அகராதி உள்ளிட்ட பல்வேறு அகராதிகளிலுள்ள கலைச்சொற்களைத் தொகுத்தும், அகரமுதலி இயக்ககத் தமிழ்க் கலைக் கழகம் வாயிலாகப் புதிய கலைச்சொற்களை வடிவமைத்தும், நாளிதுவரை 15,49,495 தமிழ்ச் சொற்கள் www.sorkuvai@tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் நாள்தோறும் செய்தித் துறை வாயிலாக 10 ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்கள் நாள்தோறும் புலனம் வழியாக கடந்த 150 நாள்களாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல் அகரமுதலி இயக்ககத்தால் கடந்த 3 திங்களாக ‘நாளும் விளையும் சொற்கதிர்’ என்ற பெயரில் நாள்தோறும் ஒரு கலைச்சொல் அதற்குரியபடத்துடன் செய்தித்துறை வாயிலாக வெளியிடப்பட்டுவருகிறது.
செந்தமிழைச் செழுந்தமிழாக்கும் இப்பணிகளை இளையோர் பெரிதும் விரும்பி, பாராட்டி வருகின்றனர்.

Add a Comment