POST: 2025-11-30T09:27:54+05:30

Arul.2009/FB/#6800

ஓம் சக்தி – மாத இதழ் –
தீபாவளி சிறப்பிதழ்
பக்கம் எண் : 306,307,308.

செயற்கரிய செயல்
முனைவர் ஔவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை
தமிழ்நாடு அரசு

வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய யெல்லாம் பிற
இங்கே பிளாரென்சு நைட்டிங்கேல் வாழ்க்கை நினைவுகூரத்தக்கது.

இங்கிலாந்தில் பெருஞ்செல்வந்தருக்கு மகளாகப் பிறந்த பிளாரன்சு வளர்ந்து வந்த பொழுது தானொரு செவிலியாக வேண்டுமென்று பெரிதும் விரும்பினார்.

ஆனால், அக்காலத்தில் செவிலியரைப் பற்றி மிகவும் மோசமான கருத்து நிலவி வந்தது. அதுவும் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பிளாரன்சு நைட்டிங்கேல் போன்றோர் செவிலியராவதென்பது நினைத்துக் கூடப் பார்க்க இயலாத ஒன்று.

1845 – ஆம் ஆண்டு அவருடைய இருபத்தைந்தாவது வயதில் சாலிசுபரி மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்ற அவர் விரும்பியபொழுது அவருடைய தந்தை கடுமையான தடை விதித்தார்.

தனது குடும்பத்தாரின் எதிர்ப்பால் சற்றே மனம் வெதும்பிய போதிலும், செவிலியாகப் பயிற்சி பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டுபிடித்தார்.

குடும்பத்தாருடன் இலண்டனுக்கும் ஐரோப்பிய நகரங்களுக்கும் சுற்றுலா சென்ற பொழுது மருத்துவமனைகளுக்கும், சேரிகளுக்கும்,பள்ளிகளுக்கும், பணிமனைகளுக்கும் சென்று தொண்டாற்றினார்.

மருத்துவமனைகள் தோன்றி வளர்ந்த வரலாற்றையும் சிகிச்சைக்குப் பின் ஓய்வு பெறும் விடுதிகளைப் பற்றியும் ஆய்வு செய்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறையினரும் மருத்துவக் குழுக்களும் வெளியிட்ட ஆய்வு அறிக்கைகளில் மூழ்கிப் போனார்.

செருமனியின் கெய்செர்வொர்த்து மருத்துவ நிறுவனத்தின் ஆண்டறிக்கையினை அவருடைய தோழி அனுப்பி வைத்தார்.

அந்நிறுவனம் நற்பண்பு கொண்ட மகளிருக்கு செவிலியர் பயிற்சி அளித்தது.

அந்தப் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு தன் பெற்றோருடன் நான்கு ஆண்டுகள் போராடி அனுமதி பெற்றார்.

அவருக்கு முற்றிலும் ஏற்றவர் என்று அவருடைய குடும்பத்தார் கருதியவரை மணம் புரிய மறுத்து விட்டார்.

தனது பணிகளைத்தொடருவதற்கு ஏதுவாக சுதந்திரமாக இருப்பதென்று முடிவு செய்தார்.

1853- ஆம் ஆண்டில் அவருடைய முப்பத்தி மூன்றாம் வயதில் இலண்டனில் பிணியற்ற சீமாட்டியருக்கான பராமரிப்பு நிறுவனத்தில் ஊதியமற்ற பதவியில் ஒருவாறாக அமர்த்தப்பட்டார்.

அங்கே மிகச் சிறந்த நிருவாகி என்று புகழ் பெற்றார்.

1854-ஆம் ஆண்டு முடிவில் ஆங்கிலேயப் போர் வீரர்கள் கிரிமியாவுக்கு அனுப்பப்பட்டனர். கருங்கடலின் வடக்குக் கரையில் துருக்கிக்காக உருசியாவுக்கு எதிராகப் போர் புரிந்தனர்.

அப்போது போர் தொடர்பான செய்தித்தாள்கள் வெளிவரத் தொடங்கியிருந்தன.

கிரிமியப் போர்க்களத்தில் காயமுற்ற வீரர்கள் சிகிச்சையின்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செய்தி ஆங்கிலேயப் பொதுமக்களுக்கு எட்டியது.

அங்கு சென்று பணியாற்வதற்கு இராணுவத்துறையினரிடமிருந்து வந்த அழைப்பினை பிளாரென்சு ஏற்றுக் கொண்டு ஆறே நாட்களில் முப்பத்தெட்டு செவிலியரைத் திரட்டிக் கொண்டு கான்ஸ்டான்டி நோபிள் சென்றடைந்தார்.

இராணுவ முகாம்களிலும் மருத்துவமனைகளிலும் 2400-க்கும் மேற்பட்ட காயமுற்ற வீரர்கள் கவனிப்பாரின்றி முடைநாற்றத்தில் கிடந்தனர்.

அதிகப்படியான சாவுகளை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருந்த இராணுவ மருத்துவமனையின் செயல்பாட்டினை மேம்படுத்துவதென உறுதி பூண்டார்.

சாதாரணக் குடும்பப் பெண்டிரை அனுப்பி வைத்துவிட்டதாகக் கொக்கரித்துக் கொண்டிருந்த இராணுவ அலுவலர்கள் மத்தியில், தனது அளப்பரிய மனத்திட்பத்தால் தனிப்பட்ட முயற்சியில் நிதி திரட்டி தேவையான உயிர்காக்கும் மருந்துகளையும் சிகிச்சைக்கான கருவி கரணங்களையும் பெற்று தனது அயர்வறியா உழைப்பினால் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 41 விழுக்காடாக இருந்த இராணுவ மருத்துவமனையின் இறப்பு வீதத்தை மே மாதத்தில் இரண்டு விழுக்காடாக மடியச் செய்தார்.

கண்டிப்பான நடைமுறைகளாலும், உறுதியான ஒழுங்கமைப்பாலும், ஒவ்வொரு செயலிலும் உன்னிப்பாகக் கவனம் செலுத்தியதாலும், அயராத உழைப்பாலும், வெல்லற்கரிய மனத்திட்பத்தாலும் அந்நிலை சாத்தியமாயிற்று.

போர் முடிவுற்றபின் வெற்றி வீராங்கனையாக, விளக்கேந்திய நங்கையாக இங்கிலாந்து திரும்பிய நைட்டிங்கேல், கிரிமியக் காய்ச்சலால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறக் கூட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அடிக்கடி மயக்கமும் வலிப்பும் ஏற்பட்டு மிகுந்த சோர்வினால் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகவே கிடந்தார்.

இருப்பினும் தனது சாய்வு நாற்காலியில் இருந்தவாறு வில்லியம் பர் என்கிற இணையற்ற புள்ளியியல் வல்லுநருடன் இணைந்து 800 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்றைத் தனது சொந்தச் செலவில் அச்சிட்டு வெளியிட்டார்.

அவர் இயற்றிய மருத்துமனைக் குறிப்புகள் எனும் நூல் மிகவும் புகழ் பெற்றது.

நலிவுற்ற நிலையிலும் அவர் எழுதிய 12,000 கடிதங்களும் 200 நூல்களும், ஆய்வு அறிக்கைளும் புள்ளியியல் வரைபடங்களும் அவர்தம் புகழ்பாடும் நினைவுச் சின்னங்களாக நிலைத்து நிற்கின்றன.

போர்வீரர்களுடைய குடியிருப்புகளின் வசதிகளையும் அவர்களுடைய வாழ்க்கை நிலையினையும் மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய தொண்டு மதிப்பிடற்கரியது.

கலித்தொகை அறிமுகம்

‘கற்றறிந்தார் ஏத்தும் கலியென்பது’ கலித்தொகை.

கருத்து வளமிக்க நூல்,

காதலைப் பற்றிக் கூறும் நூல்;

தமிழர் பண்பாட்டைப் பற்றிப் பேசும் நூல்;

அன்பு, பண்பு முறை, நிறை, பொறை, போற்றுதல், ஆற்றுதல் போன்றவற்றுக்கு விளக்கங்களைத் தருகின்ற நூல்;

வலிமைக்கு எளிமையான நூல்;

எளிய சொற்களைக் கொண்டு, அரிய நீதிகளைக் கூறும் நூல்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், முதுமொழிக்காஞ்சி தவிர, வெண்பாவில் அமைந்தவை.

எட்டுத்தொகை நூல்கள், ஆசிரியப்பா அல்லது அகவற்பாவில் அமைந்தவை கலித்தொகையில் மொத்தமுள்ள 150 பாக்களில், முதலாவதாகத் தோழி கூற்றாக அமைந்துள்ள 133-ஆம் பாடல், சோழன் நல்லுருத்திரன் பாடியது.

19 அடிகளை உடைய பாடலில், 6 முதல் 14 அடி முடியவுள்ள 9 அடிகளை மட்டும் இங்குக் காணலாம்.

அவை, திருக்குறள் சார்ந்த நெறிகளையே எடுத்தியம்பும் திறத்தைக் காண்போம்.

ஆற்றுத லென்பதொன்ற லந்தவர்க் குதவுதல்
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்
அறிவென படுவது பேதையார்சொல் நோன்றல்

செறிவெனப் படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை
முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்;
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல் !

ஏதுமற்ற ஏழை எளியவர்க்கு – வறியவர்க்கு வேண்டுவன ஈதல்வேண்டும்;

முதலாவதாகப் பசிப்பிணி அகற்றும் மருத்துவராக இருத்தல் வேண்டும்.

அடுத்த அடிப்படைத் தேவைகளான உடை வழங்குதல், உறையுள் வழங்குதல் வேண்டும்.

மொத்தத்தில் உற்றுழியும் உதவுதல் உயர்ந்தநெறி புணர்ந்தாரை எனில், நட்டச் செய்தாரை என்பது பொருள்.

இதுவே ‘ஆற்றுதல்’ ஆகும்.

அவரை ஒருபோதும் பிரிதல் கூடாது.

அந்த நட்டம் நுனிக் கரும்பிலிருந்து அடிக்கரும்பைச் சுவைப்பது போல் – அதாவது வளர்வதாக இருத்தல் வேண்டும்.

அதைத்தான் ‘போற்றுதல்’ என்கிறார்.

பண்பெனப்படுவதும் குணமெனப்படுவதும் ஒன்றுதான்.

முன்னோர் சென்ற நன்னெறியில் நாமும் நடைபயில்வதே ‘பண்பு’ எனப்படும்.

‘அன்பு’ எனப்படுவது தெரிந்தவர்மாட்டுக் கொள்ளும் பற்றுள்ள மாகும்.

எனவே, உற்றாரும் உறவினருமாகிய அனைவரிடத்திலும் அன்பு கொள்ள வேண்டும்.

‘அருளென்னும் அன்பின் குழவி’ என்பார் திருவள்ளுவர்.

மேதையர் எனப்படுவோர்.
பேதையர் பிதற்றும் தகாச்சொற்களைப் பொறுத்துக் கொள்ளலாகும்.

அறிவானது அற்றம் காக்கும் கருவியில்லையா?

‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்பதையும் நினைவிற் கொண்டு வாழ்வதே அறிவுடைமையாகும்.

செறிவென்பது ‘திண்மை’ எனப்படும்.

ஒருவர், முன்னர்க் கூறியதை மறக்காமலும், மறைக்காமலும் இருப்பதே ‘ செறிவு’ எனப்படும்.

மறைபொருள் என்பது ஒன்றைப் பிறர் அறியாமல் பாதுகாத்துக்
கொள்வது.

இல்லையெனில், வெளிப்பட்டு வேதனைப்படுத்தும், இத்தகைய நிலைப்பாடே ‘நிறை’ எனப்படும்.

கண்ணோட்டம் என்பது, இரக்கம் எனப்படும்.

அத்தகு இரக்கம் கொள்ளாமல், உயிரைக் கொல்லுதல் கூடாது.

‘வௌவல்’ என்பதற்குக் கவர்தல் என்பது பொருள்.

எனவே, இரக்கமின்றி அரக்கத்தனமாக எந்த உயிரையும் வௌவுதல் கூடாது.

மன்னவன், மக்களை ‘முறை’ செய்து காக்க வேண்டும்.

‘முறை செய்து காட்டாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று’ வைக்கப்படும் இல்லையா?

மனுநீதிச்சோழன், தன் மகனென்றும் பாராமல் வீதிவிடங்களைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றதை ‘முறைசெய்தல் ‘ எனலாம்.

‘முறை’ யெனில், ‘நீதி’ யென்க! ‘பொறை’ என்பதன் பொருள், பொறுமை என்பதாகும்.

தன்னைப் பிறர் போற்றாமல் தூற்றியபோதும் பொறுத்துக் கொள்ளுதல், ‘பொறை’ எனப்படுவதாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *