POST: 2025-11-02T11:21:51+05:30

Arul.2009/FB/#6772

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிந்து உளமகிழ்வு கொண்ட இனிய தருணம்

குடந்தையிலுள்ள புகழ்பெற்ற சிவகுருநாதர் செந்தமிழ் நூல் நிலையத்தை(நாணயக்காரத் தெரு) 9.10.25 வியாழக்கிழமையன்று
மாலை 4 மணியளவில் கண்டு மகிழ்ந்தேன்.

அறிவுத் திருக்கோயிலின் அனைத்துப் பொருண்மைகளைக் கொண்ட நூலகத்தினை நிலைத்த புகழோடு நடத்திவரும் அறங்காவலர் பேராசிரியர் இராமகுருநாதன் அவர்களைச் சந்தித்து அளவளாவினேன்.

நூலகத்தின் உயரத்தையும், பரப்பினையும், அரிய நூல்கள்
தொகுப்பினையும் கண்டு மலைத்தேன்.

மிகப்பழைமையான நூல்களைச் செந்தமிழ் நூலகத்தார் பராமரிக்கும் பாங்கினைச் சென்றுக் கண்டு வருவோர் அனைவரும் உணர்ந்து மகிழலாம்.

எளிதில் காணக் கிடைக்காத அரிய கருவூலங்கள் கொண்ட நூலகத்தில் எந்தையார் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது 11.12.1994 அன்று அவர்கள் சிவகுருநாதர் செந்தமிழ் நூலகத்திற்குச் சென்று அங்கு அவர் கைப்பட எழுதிய குறிப்பினைக் கண்டு எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்ததோடு அதனை அனைவரும் படிக்கும் வண்ணம் தட்டச்சும் செய்து இணைத்துள்ளேன்

சிவ குரு நாதர் செந்தமிழ் நூல் நிலையத்தை இன்று கண்டு மகிழும் பேறு பெற்றேன்.

அறிவு திருக்கோயிலாகத் திகழும் வண்ணம் இந்நூல் நிலையத்தை அமைத்துக் காத்து வரும் பெருமக்களுக்குத் தமிழகம் என்றும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையதாகும்.

அழகிய முறையில் பழைய நூல்களைத் தொகுத்ததோடு, வனப்புறப் பட்டியலிட்டுக்காத்து வரும் பாங்கினைப் போற்றுகிறேன்.

தொடர்ந்து புது நூல்களையும் பெற்று ஆண்டுதொறும் நூல் நிலையத்தைப் பெருக்குவதும் ஒரு கடனாகும்.

இந்நிலையில் அரசோ, பல்கலைக்கழகமோ, தாமே முன்வந்து நிதியுதவி செய்தல் வேண்டும்.

சிவ குருநாதர் செந்தமிழ் நூல் நிலையம் உரிய வளங்களை மிகப் பெற்று பல்லாண்டுகளுக்கு ஓங்கிய நிறுவனமாய் ஒளிர வேண்டும் என்பதும் நமது பெருவிருப்பமாகும்.

தளர்ந்து முதிய நிலையில் திரு சாமிநாதன் செட்டியார் அவர்கள்
என்னோடு உடனிருந்து இந்நிலையத்தின் வரலாற்றை நெஞ்சுருக உரைத்தார்கள்.

புத்தகங்களைக் காப்பது அருங்கலையாகும்.

அறிவியற் பொருள்களின் துணைக்கொண்டு நல்லுழைப்போடு காக்கும் நெறிகள் பரவி வருகின்றன.

இவ்வகையில் நல்லுதவிகளைப் பெறலாம் என்பதும் என் விழைவாகும்.

ஔவை நடராசன்
11.12.1994

துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சை

சில வரலாறுகள் எழுதி முடிக்கப்பெறும்.

சில வரலாறுகள் தொடர்ந்து எழுதும் தகைமை உடையன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *