Arul.2009/FB/#6769
மாணவக் கண்மணிகளின்
மொழி, முயற்சி, மாட்சியின் விழா!
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமையன்று (28.10.2025) நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள்
பேச்சுப் போட்டியில் 35 பேர், கட்டுரைப் போட்டியில் 32 பேர், கவிதைப் போட்டியில் 33 பேர் என மொத்தம் 100 பேர் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவர்கள்
பேச்சுப் போட்டியில் 30 பேர், கட்டுரைப் போட்டியில் 30 பேர், கவிதைப் போட்டியில் 33 பேர் என மொத்தம் 93 பேர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு மொத்தம் 193 மாணவ, மாணவிகள் தங்களது முழங்கும் சொல்லாற்றல் திறமை, கவி புனையும் கற்பனையாற்றல், கட்டுரைப் படைக்கும் படைப்பாற்றல் எனப் பல அடுக்குகளில் தங்களின் சிந்தனை ஆழத்தை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 193 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்திய இந்த விழாவில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் ரூ. 15,000/-, இரண்டாம் இடம் ரூ. 12,000/-, மூன்றாம் இடம் ரூ. 10,000/- எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 மாணவர்களுக்கு ரூ.2,22,000 மதிப்பிலான பரிசுக் காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களை நேரில் வாழ்த்தும் வாய்ப்புப் பெற்றேன்.
அந்நிகழ்ச்சியில்,
அடாது மழை பொழிந்தாலும் விடாது தங்கள் வருகையை பதிவு செய்த மாணவக்கண்மணிகளை, ஆசிரிய பெருமக்களை, பெற்றோர்களை வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளேன்.
“வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் சாதனையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், இம்முறை வெற்றி பெறாத மாணவர்களும் தங்கள் முயற்சியைத் தளர்வில்லாமல் தொடர வேண்டும்.
தொடர்ந்து பயிற்சி செய்து பங்கெடுத்தால், வருங்காலப் போட்டிகளில் நிச்சயம் வெற்றி அவர்களுக்கே சொந்தமாகும்.
கடந்த ஆண்டுகளில் இப்போட்டிகளில் பங்கெடுத்த மாணவர்கள் இன்று பல படைப்பாற்றல் துறைகளில் திகழ்வது, தமிழ் வளர்ச்சித் துறையின் முயற்சிக்குப் பெருமை சேர்க்கிறது.”
என்று மேடையில் முழங்கிய அந்த எழில்மிகு எண்ணத்தை மீண்டும் மனத்தில் நினைத்தபோது பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
இந்தப் போட்டிகள் மாணவர்களின் தமிழ்ப்பற்றை, சிந்தனை ஆழத்தை, படைப்பாற்றலைக் கடந்த 22 ஆண்டுகளாகத் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வளர்த்து வரும் அரிய தளமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் ஒரு சிறப்பான அம்சம்
பள்ளி, கல்லூரி என இரு நிலைகளிலும் பெண்களின் பங்கு ஆண்களை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது.
பேச்சு, கட்டுரை, கவிதை — எதைக் கேட்டாலும், பெண்களின் பங்களிப்பு வியப்பூட்டும் விதமாக இருந்தது.
அதுவே, பாரதியரின் வரிகளாகிய —
“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!”
என்ற பாட்டை அனைவரின் மனத்தில் ஒலிக்கச் செய்தது.
இன்றைய இளம் தலைமுறையின் பெண்கள் தங்களது தன்னம்பிக்கை, முயற்சி, அறிவாற்றல், படைப்பாற்றல் மூலமாகத் தமிழ் மொழியின் மாட்சியை உயர்த்தி வருவது உண்மையிலேயே பெருமைக்குரியது.
தமிழின் ஒளி திகழட்டும்,
இளமைத் திறமை வளரட்டும், ஒவ்வொரு முயற்சியும் மொழியின் மைல்கல்லாகட்டும்.
மேடையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் திருமதி க. பவானி,
மற்றும் அம்பேத்கர் கல்லூரி சமூகப் பணியியல் துறைத் தலைவர் திரு. மு. ராஜூ, தமிழ்த்துறையைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் சற்குருநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Add a Comment