Arul.2009/FB/#6764
கலைமகள் தீபாவளி மலர் 2025
21.10.25
பக்கம் எண்: 99,100,101,102
காலத்தை வென்ற ஞானத்தின் நாயகன் – கலீல் ஜிப்ரான்
முனைவர் ந. அருள்,
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
ஒரு படைப்பாளியின் சிறப்பு எதனைப் பொறுத்து இருக்கிறது?
மண் தோன்றிய காலம் தொட்டு எழுப்பப்பட்டு வரும் கேள்வி இது.
அவனது படைப்புகள் அந்தந்தக் காலத்தில் மக்களின் மனத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்திச் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை எழுப்பி இலக்கிய உலகில் ஒரு நிலையான இடத்தைப் பெறுகின்றன.
ஆண்டாண்டுக்காலமாக மக்கள் மனத்தில் இடம் பெற்று இறவா வரம்பெற்ற காவியங்கள், இதிகாசங்கள் உலகெங்கும் உண்டு.
நம் நாட்டில் ஒரு சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, இராமாயணம், பாரதம், பாகவதம் போல உலகின் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் தோற்றம், பண்பாடு, வளர்ச்சிக்கேற்ப பல்வேறு காலங்களில் தோன்றிய காவியங்கள், புராண இதிகாசங்கள் ஆகியவை நிலையான இடத்தைப் பெற்றுள்ளன.
குறள், பைபிள், குரான், ஆதிகிரந்த், ஜென்ட் அவெஸ்டா ஆகிய அற நூல்கள் இவற்றுள் அடங்கும்.
இவை தவிர பல்வேறு நாடுகளில் தோன்றிய ஆதி காவியங்களும், கவிதைகளும் நிலையான புகழ்பெற்று இலக்கிய மதிப்பைப் பெற்றுள்ளன.
லெபனான் அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரும், தத்துவவாதியும் கலைஞருமான கலீல் ஜிப்ரானைப் போல மனிதனின் ஆன்மாவை தமது படைப்புகளால் எட்டிய கவிஞர்களின் எண்ணிக்கை சொற்பமானதேயாகும்.
அவரது வார்த்தைகள் எல்லைகளையும், தலைமுறைகளையும் தாண்டியவை.
அவரது தலைசிறந்த படைப்பான தீர்க்கதரிசி’ மூலம் மிகவும் பிரபலமான ஜிப்ரானின் எழுத்து, காதல், துக்கம், நம்பிக்கை மற்றும் மனிதப்பயணம் ஆகிய கருப்பொருள்களைத் தொடர்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
அவரின் வரிகளிலேயே சொன்னால்:
ஆற்றுக்கும் – ஓடைக்கும் அமைதியையும், விடுதலையையும் தருவது உன்னைத் தவிர வேறு யார்?
இந்த ஓடையாகிய எனக்கும் இன்னும் ஒரே ஒரு சுழற்சி தான்.
இவ்வோடை இத்தோப்பில் ஓடுவது இன்னும் ஒரே ஒரு சலசலப்போடுதான்.
பின்னர் யான் கரையற்ற கடலிலே கரையற்ற நீர்த்துளியாகி உன்னிடம் வந்து கலந்து விடுவேன்.
தானியக் கதிர்களைக் கட்டுக்கட்டிப் பிணிப்பதைப்போல அன்பு உங்களை ஒன்று சேர்க்கிறது.
தானியப் போர்க்களத்திலே போர் அடித்தலைப் போன்று,
அது உங்களை மோதி அடிக்கின்றது.’
பதர்களிலிருந்து, உங்களை வேறுபடுத்திப் பிரித்தெடுக்க அது உங்களைக் கொழித்தெடுக்கிறது.
உங்களை வெளுக்கும்படி செய்ய, அஃது உங்களை மாவாக அரைத்து விடுகிறது.
நீங்கள் இளகத் தக்கவாறு அது உங்களைப் பிசைந்து வைக்கிறது.
பின்னர் அவ்வன்பு உங்களைத் தன்னுடைய தூய்மையான நெருப்பிலே இட்டு இறைவனின் தூய்மையான விருந்துக்கு ஏற்றதோர் உணவாகச் சமைத்து வைக்கிறது.
நீங்கள் அன்புகொண்டால் ‘கடவுள் எம் உள்ளத்திலே இருக்கிறார்’ என்று கூறாதீர்கள்.
மாறாக, ‘இறைவன் உள்ளத்திலே நாங்கள் உள்ளோம்’ என்று கூறுங்கள்.
நீங்கள் அனைவரும் இணைந்தே பிறந்தீர்கள். இனி எப்போதும் இணைந்தே இருப்பீர்கள்.
உங்களுடைய வாழ்நாள்களை மரணம் தன் வெண் சிறகுகளால் சிதற அடிக்கும் காலத்தும் இணைந்தே இருப்பீர்கள்.
ஆம். இறைவனுக்கான அமைதி மிக்க தியான நேரத்திலும் நீங்கள் இணைந்தே இருப்பீர்கள்.
ஆனாலும், உங்கள் இணைப்பின் இடையே சிறிது இடைவெளி இருக்கட்டும்.
அந்த இடைவெளியிலே வானுலகத்தின் காற்று நடனம் புரியட்டும்.
ஒருவரை ஒருவர் காதலியுங்கள். ஆனால், அக்காதலினால் பிணிப்பான தளையை உண்டாக்கிக் கொள்ளாதீர்கள்.
அக் காதல் உங்கள் உயிராற்றலின் கரைகளிலே அலைமோதும் கடலாக விளங்கட்டும்.
நீங்கள் இணைந்தே நில்லுங்கள். ஆனால், நெருங்கியன்று.
ஏனெனில், கோயிலின் தூண்கள் கூட விலகி நின்றேதான் கோயிலைத் தாங்குகின்றன.
மற்றும் மரங்கள் கூடத் தனித்து நின்றுதான் வளர்ச்சியடையுமேயன்றி, ஒன்றன் நிழலிலே மற்றொன்று வளர முடியாது.
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.
உங்கள் குழந்தையாகிய அம்புகளை எய்யும் வில்லாகவே நீங்கள் இருக்கின்றீர்கள்.
வேடனோ முடிவற்ற நெறியிலுள்ள குறியை இலக்கு வைத்துத் தன் அம்பு வேகமாகவும், தூரமாகவும் செல்லத் தக்கவாறு உங்களைத் (வில்லை) தன் பலங்கொண்ட மட்டும் வளைத்து அம்பெய்கிறான்.
வேடன் கையிலுள்ள வில்லாகிய உங்களது வகைவுகூட மகிழ்ச்சிக்குரியதாக இருக்கட்டும்.
அவ்வேடன் பறந்து தூரத்திலே செல்லும் அம்பை எப்படி நேசிக்கிறானோ, அப்படியே தன் கையிலுள்ள வில்லையுமன்றோ நேசிக்கிறான்?
உங்களுக்குரிய உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும்போது நீங்கள் மிகக் குறைவாகத்தான் கொடுப்பவர்கள் ஆவீர்கள்.
ஆனால், நீங்கள் உங்களையே பிறருக்குக் கொடுத்துவிடும் போதுதான் நீங்கள் உண்மையான கொடை வள்ளல்கள்.
நம்முடைய கேணி நிறைந்திருக்கும் காலத்திலும், தீர்க்க முடியாத நீர்வேட்கை நமக்கு ஏற்படுவது பயங்கரமானதன்றோ?
தங்களிடமுள்ள பெருஞ்செல்வத்தில் சிறிது கொடுக்கும் பலர் உள்ளனர்.
அவர்கள் அதைத் தம் சுய விளம்பரத்துக்கெனக் கொடுக்கின்றனர்.
அவர்களிடையே மறைந்துள்ள அந்த அவா அவர்தம் கொடையைத் தூய்மையற்றதாக்கி விடுகின்றது.
மகிழ்ச்சியோடு கொடுப்பவர்கள் சிலர் உள்ளனர்.
அந்த மகிழ்ச்சியே அவர்கள் பெறும் பரிசாகும்.
துன்பத்தோடு தருபவர்கள் பலர்,
அவர்கள்தம் துன்பமே அவர்களின் மனந்திரும்புதல் ஆகும்.
“கேட்கும்போது கொடுப்பது நல்லது.
ஆனால், பிறர் கேளா முன்னரே, குறிப்பறிந்து ஈதலே அதைவிட நல்லது.
உங்கள் தோட்டத்திலே உள்ள பழமரங்கள் இப்படிச் சொல்லவில்லையே!
வயல் வெளியிலே மேயும் பசுமந்தைகள் இப்படிக் கூறவில்லையே!
அவை யாவும் தாம் வாழவே கொடுக்கின்றன.
ஏனெனில், கொடுக்க மறுப்பவை யாவும் அழிந்தே விடும்.
நவீன கால லெபனானில் (அக்காலத்தில் ஓட்டோ மனிதர்களால் ஆளப்பட்ட சிரியாவின் ஒரு பகுதி) பிஷாரி என்ற மலை கிராமத்தில் ஜனவரி 6, 1883 அன்று பிறந்த ஜிப்ரான், ஒரு மரோனைட் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்தார்.
அவரது ஆரம்பக் கால வாழ்க்கை இன்னல்கள் நிறைந்ததாக இருந்தது.
வரி வசூலிப்பவரான அவரது தந்தை கலீல் சாத் ஜிப்ரான், பண மோசடி செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
மன உறுதியும், தெய்வப் பக்தியுமுடைய அவரது தாயார் திருமதி. கமீலா ரஹ்மே, தனது குழந்தைகளுக்கான வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துத் தர முனைந்து, சிறுவன் கலீல் மற்றும் அவரது உடன்பிறந்தோருடன் ஐக்கிய அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, வளர்ந்து வரும் சிரிய – லெபனான் புலம்பெயர்ந்தோர் சமூகத்தின் தாயகமான பாஸ்டனின் தென்கோடியில் குடியேறினார்.
ஜிப்ரான் தனது கலைத்திறன்களை வளர்த்துக்கொண்டே ஆங்கிலமும் கற்றுக் கொண்டார்.
கமீலா குடும்ப செலவிற்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட சரிகைகளையும், துணிகளையும் விற்பனை செய்து வந்தார்.
வறுமையின் பிடியில் இருந்த போதிலும், சற்றும் தளர்வடையாத அவரது மனவலிமை, அறநெறியுடன் கூடிய உணர்வுகள் குறித்த ஜிப்ரான் மீண்டும் லெபனானுக்குத் திரும்பினார்.
அங்கு அவர் அரபு இலக்கியம் பயின்றதுடன், பாரம்பரிய மொழி மற்றும் கலாச்சாரத்தில் மூழ்கித் திளைத்தார்.
இருப்பினும், விதி அவரை விரைந்து பாஸ்டனுக்குத் திரும்ப அழைத்து, அவரது சொந்த வாழ்வில் துயரங்களைத் தொடர்கதையாக்கியது.
ஜிப்ரான் அல்-முஹாஜிர் என்னும் அரபு மொழி செய்தித்தாளில் கட்டுரைகளை வெளியிட்டு, அவரது எழுத்துப்பணியைப் பொதுத்தளத்தில் முதன்முறையாகக் காட்சிப்படுத்தினார்.
குறியீட்டியமும், மாயவாதக் கருப்பொருட்களும் கலந்த அவரது தனித்துவமான கலை மிளிரும், புகைப்படக் கலைஞரும் பதிப்பாளருமான, ‘பிரெட் ஹாலண்ட் டே’ என்பவரின் கவனத்தை ஈர்த்த நிலையில் அவர் ஜிப்ரானின் ஆரம்பக்கால ஆசான்களில் ஒருவரானார்.
ஜிப்ரான் நியூயார்க்கிலுள்ள கிரீன்விச் கிராமத்திற்கு குடிபெயர்ந்தார்.
அப்போது அக்கிராமம் கலை மற்றும் அறிவுசார் செயல்பாடுகளின் செழிப்பு மிக்க மையமாக இருந்தது.
அங்கு அவர் ஐக்கிய நாடுகளின் முதல் அரபு மொழி இலக்கிய அமைப்பான பென் லீக்கில்
(அல்- ரபிதா அல்-கலமியா) சேர்ந்தார்.
அமீன் ரிஹானி மற்றும் மிகைல் நைமி போன்ற ஏனைய அரபு அமெரிக்க எழுத்தாளர்களுடன் சேர்ந்து, ஜிப்ரான் புலம்பெயர்ந்த அரபு இலக்கியத்திற்காக கிழக்கத்திய ஆன்மிகத்தையும், மேற்கத்திய அன்பின் அகத்தினையும் இணைத்து ஒரு தனித்துவமான எழுத்து நடையை உருவாக்க உதவினார்.
ஜிப்ரானின் முதல் ஆங்கில புத்தகமான தி மேட்மேன் (1918), ஆல்ஃபிரட் ஏ. நாஃப் என்பவரால் வெளியிடப்பட்டது.
அவர் மிகவும் பிரபலமான படைப்பான தி ப்ரொஃபெட்டை 1923 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
அல் முஸ்தபா என்ற தீர்க்கதரசியால் எழுதப்பட்ட 26 கவிதைகள், கட்டுரைகளை உள்ளடக்கிய
தி ப்ரொஃபெட் நேர்த்தியான பாடல் வரிகளையும், ஆன்மிக ஞானத்தையும் கொண்டு காதல், திருமணம், வேலை, சுதந்திரம் மற்றும் இறப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது.
தொடக்கத்தில் விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்டாலும் –
தி நியூயார்க் டைம்ஸ் அப்புத்தகத்தை மதிப்பாய்வு செய்ய மறுத்துவிட்டாலும், பின்னர், இப்புத்தகம் அதன் தனிச்சிறப்பினால் மெதுவாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.
தனது வாழ்நாளில், அரபு மொழியில் ஒன்பது நூல்கள், ஆங்கிலத்தில் எட்டு நூல்கள் என ஜிப்ரான் பதினேழு நூல்களை எழுதியுள்ளார்.
மணலும் நுரையும் (1926),
மனித குமாரன் இயேசு (1928) மற்றும் பூமிக் கடவுள்கள் (1931) ஆகியவை அவருடைய ஏனைய படைப்புகளில் அடங்கும்.
அவரின் மையக் கருத்துகளான அன்றாடத் தெய்விகம், அன்பின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மாவின் நிரந்தரத் தேடல் போன்றவற்றை இப்படைப்புகளில் காணலாம்.
அரபி மொழியிலும், ஆங்கிலத்திலும் அமர சிருஷ்டிகளை அளித்துள்ள கலீல் ஜிப்ரானை மெய்ஞ்ஞானி, கலகக்காரர், தத்துவ வித்தகர், சமய அறிஞர், கவிஞர், தீர்க்கதரிசி என அவரவர் உணர்ந்தபடி ஆராதிக்கின்றனர்.
ஜிப்ரானின் கவித்துவமும், தத்துவமும் செறிந்த படைப்புகள் புதிய அலைகளை எழுப்பின.
கிறித்தவம், இசுலாம், ஜுடாயிசம் எனப் பல தாக்கங்களை அவற்றில் காணலாம்.
சூஃபி தத்துவத்தின் அழுத்தமான சாயல்கள் அவர் எழுத்தில் உண்டு.
கலீல் ஜிப்ரான் சிறந்த கவிஞர், ஓவியர், அறிவாளி. ஏழை எளியோர் அதிகார வர்க்கத்தினரால் அடக்கி ஒடுக்கப்பட்டு அநீதிகளுக்கு உள்ளாக்கப்படும் போது, இவரது இதயம் முதலில் “நொந்து புண்பட்டுப் பிறகு ஆத்திரத்தினால் துடித்துக் கடைசியில் அவர்களுக்கு எதிராக வீறு கொண்டு எழுகிறது.
ஜிப்ரானின் கவிதைகளில் ஏழையின் துடிப்பு, ஆதிக்க வர்க்கத்தினரின் ஆணவம், இயற்கையின் நீதி, இறைவனின் எல்லையற்ற கருணை இவை யாவும் நூல் இழை போன்று பரவியிருப்பதைக் காணலாம்.
கலீல் ஜிப்ரான் பிறந்தது லெபனான் நாட்டில்.
அவர் சார்ந்த சமயம் கிறிஸ்தவம்.
அவர் எழுதிய கிளர்ச்சி மிக்க உணர்வுகள் (Spirits Rebellious) என்ற வசன நூல், மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை ஆணித்தரமாக எடுத்துக் கூறியது.
ஜிப்ரான் வசன நூல்கள் பல எழுதியுள்ளார்.
கவிதை படைப்புகள் பல அவர் செய்துள்ளார்.
இவை யாவற்றிலும் சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றிய சோக இழைகளும், அவனது வாழ்வு மலர வேண்டிய வழி சமத்துவம், சகோதரத்துவம் மக்களிடையே மலர யாது என்பதைப் பற்றிய சிந்தனைச் சிதறல்களும், வேண்டிய அவசியம் பற்றிய கருத்துகளும் பரவிக் கிடப்பதைக் காணலாம்.
ஜிப்ரானுடைய கண்ணோட்டத்தில் மனித வாழ்க்கையில் சிறப்பிடம் பெறத்தக்கவை வெகு சிலவே.
மக்கள் இதை மறந்து ஆடம்பர வாழ்க்கையை நாடி, அமைதியை இழந்து ஆணவத்தை வளர்த்துக் கொள்ளும் பரிதாப நிலையைக் கண்டு மனம் குமைகிறார்.
இவரது படைப்புகள் யாவற்றிலும் ஓர் உயர்ந்த கவி உள்ளத்தின் குமுறல்களையும், ஒரு தத்துவ ஞானியின் தெளிந்த ஞானத்தையும் நாம் காண்கிறோம்.
கண்ணீரும் புன்னகையும்;
முறிந்த சிறகுகள்;
மணலும் நுரையும்;
காதலிக்கு எழுதிய கடிதங்கள்; ஞானக் களஞ்சியம்;
இதயக் கண்ணாடி;
மனித குமாரன் ஏசு
ஆகிய நூல்களும், நானூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களும் அவரை உலகறியச் செய்துள்ளன.
அரிய உவமைகள், மணியான உருவகங்கள் இவரின் தனிச் சிறப்புகளாகும்.
ஆரம்பத்தில் இவரை நாடு கடத்திய அதே சமூகம் பின்னாளில், அவர் மரணமடைவதற்குச் சிறிது காலம் முன்பு பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்றது.
இந்த வாழும் உலகையும், இனி வரப்போகும் உலகையும் ஒன்றாக இணைப்பவனே கவிஞன்.
நிர்மலமான ஓர் ஊற்றைப் போன்றவன் கவிஞன்.
தங்கள் உள்ள வேட்கைகளைத் தணிப்பவன் அவனே.
இதயத்தில் தோன்றும் உணர்வுகளை அன்பு என்னும் சமவெளியில் ஊன்றி விதைக்கிறான் கவிஞன்.
முற்றின பயிரை அறுவடைச் சமயத்தில் மக்கள் எடுத்துச் செல்வதற்காகத்தான்.
கவிஞனை அவன் உயிர் வாழும் நாளில் அவனை ஒதுக்கிடும் மக்கள் அவன் ஆவி பிரிந்த பின்னர்தான் அவனைப் புரிந்து கொள்கிறார்கள்.
மக்களிடம் அவன் கேட்பதுதான் என்ன?
ஒரு புன்முறுவல், அவ்வளவுதான்.
சம தளத்தில் அழகான கவிதைகளை வண்ண வண்ணமாகத் தீட்டி வைக்கிறான் கவிஞன்.
ஆனாலும் என்ன?
மக்கள் அவன் பெருமையை உணரவில்லையே!
கவிஞனே!
இந்த வாழ்க்கைக்கே வாழ்வளிப்பவன் நீ தான்!
காலம் காலமாக நீ ஏற்றுக் கொண்டிருக்கும் பழி கொஞ்ச நஞ்சமா?
ஆனாலும் என்ன? இறுதி வெற்றி உனககே தான்.
ஒன்று கூறுகிறேன்.
என் நெஞ்சம் கவர்ந்த கவிஞனே!
மக்களின் இதயங்களில் நீ ஆட்சி செலுத்தும் நாள் ஒன்று வரத்தான் போகிறது.
உன்னுடைய சாம்ராஜ்ஜியத்திற்கு எல்லையே கிடையாது.
முட்களாலான மகுடத்தை சற்றுக் கூர்ந்து பார், மறைந்து கிடக்கும் மலர்க்கொத்து உன் கண்ணில் படவில்லையா?
உன் ஜிப்ரான் ஒரு மாபெரும் கவிஞன்.
தன்னைத் தானே நுட்பமாக ஆத்ம பரிசோதனை செய்து கொள்கிறான்.
அவன் உணர்ச்சிகள் கூரிய ஈட்டி போல் வெளி வந்து பொய்மையின் வாயைக் கிழித்துப் பட்டைத் தீட்டிய வைரம் போல் மக்கள் உள்ளத்தில் ஒளிவீசிக் காட்சியளிக்கின்றன.
1960 களில், ‘தீர்க்கதரிசி எனும் நூல், (தி ப்ரொபெட் பண்பாட்டு எதிர்ப்பு இயக்கத்திற்கு ஓர் ஆன்மிக வழிகாட்டியாக உருவெடுத்தது.
சமய நிறுவனங்களால் ஏமாற்றமடைந்த ஆன்மிக நாட்டம் உள்ளவர்களை இதன் உலகளாவியக் கோட்பாடுகள் மற்றும் அறநூல் சார்ந்த கருத்துகள் ஈர்த்தன.
100 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 10 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையான (தி ப்ரொபெட்) தீர்க்கதரிசி நூல்,
அனைத்துக் காலத்திலும் அதிகம் விற்பனையாகும் கவிதை நூல்களில் ஒன்றாக உள்ளது.
அமெரிக்காவின் இசைக் கலைஞன் எல்விஸ் பிரிஸ்லி ‘தீர்க்கதரிசி’ நூலில் ஆழ்ந்து போனவர்.
பீட்டில்ஸ் இசைக் கலைஞர்கள் எடுத்தாண்டது அவருடைய குறிப்பிடத்தக்க வரிகளையும்
பாடல்களையும் என்றால் மிகையாகாது.
கலீல் ஜிப்ரான், 10.04.1931 ஆம் நாளன்று நியூயார்க்கில் தனது 48 ஆவது வயதில் கல்லீரல் இறுக்கம் மற்றும் காசநோயால் மறைந்தார்.
அவரது விருப்பத்திற்கிணங்க, அவரது உடல் அவரது சொந்த ஊரான பஷாரிக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒரு காலத்தில் பாறையில் செதுக்கப்பட்ட ஒரு மடாலயமாக இருந்து, தற்போது ஜிப்ரான் அருங்காட்சியகமாக உள்ள இடத்தில் அவர் துயில் கொண்டுள்ளார்.
ஜிப்ரான் மறைந்தாலும், கண்டங்களைக் கடந்தும் உலக மக்களின் என்றும் இதயங்களில் பொதிந்துள்ளது.
அவருடைய கருத்துகள் மறைவதில்லை.
கருணையும், ஒற்றுமைக்கான வேட்கையும் நிரம்பிய மனிதநேயம் குறித்த அவரது பார்வை, வாசகர்களின் அக உலகைத் தொடர்ந்து ஒளிரச் செய்கிறது.
“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.
அவர்கள் வாழ்க்கை ஏக்கத்தின் குழந்தைகளே ஆவார்கள்”.
லெபனான் நாட்டுச் செடார் மரங்களிடையே உலவினாலும், நியூயார்க்கின் விண்முட்டும் கோபுரங்களிடையே திரிந்தாலும் காணும் பொருள்களை எல்லாம் தன் ஆன்மாவின் கண்ணாடிகளாகவே கண்டவர் ஜிப்ரான்.

Add a Comment