Arul.2009/FB/#6753
நீடு புகழும் நெடிய வாழ்வும்
தலைமுறைகள் போற்றும் பண்பாட்டுத் தூதர் – திருமதி சிவசங்கரிக்குப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடுவோம்!
தமிழ்நாட்டின் மாபெரும் எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் 83ஆம் ஆண்டு பிறந்தநாள், மலர்மணம் வீசும் மங்கல விழா எழுச்சியாக 14.10.25 செவ்வாய்க்கிழமையன்று சவேரா மும்மீன் விருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பொன்னாடை அணிவித்து எழிலேடு வழங்கி வணங்கினேன்.
காலஞ்சென்ற திருமதி சாவித்திரி இராகவேந்திரா அம்மையார் அவர்களின் நல்லூக்கத்தால், திருமதி சிவசங்கரி அவர்களின் தலைமையில் அக்கினி அமைப்பின் வாயிலாக மாநிலக் கல்லூரியில் இளங்கலைத்
தமிழிலக்கியம் மூன்றாமாண்டு பயிலும் பொழுது என் இனிய நண்பர்கள் திரு. கணபதி சுப்பிரமணியன் (இன்று இலண்டனில் மாபெரும் கல்வியாளராகவும் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆளுநராகவும் மிளிர்கிறார்)
திரு. அண்ணாமலை என்கிற வெங்கட் (இன்று ஒர் தொழிலதிபராக பீடுடன் விளங்குகிறார்)
ஆகியோருடன் எழுத்தாளர் மாலன் ஒருங்கிணைப்பில் தில்லியிலுள்ள சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 1987ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 7,8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதோடு, அந்நாளைய பாரதப் பிரதமர் திரு இராஜீவ் காந்தி அவர்களை நேரில் கண்டு பேசும் நல்வாய்ப்புக் கிடைக்கப் பெற்றதை எண்ணி மகிழ்கிறேன்.
அன்று முதல் இன்று வரை அன்பின் வடிவமாய், பண்பின் பெட்டகமாய், தலைமையின் அணிகலனாய் மிளிரும் திருமதி சிவசங்கரி அவர்களை நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துவதிலும்,
நீதியரசர் இராமசுப்பிரமணியன் தன்னுடைய வாழ்த்துரையில் தெரிவித்ததைப் போலப் பல்லாண்டுகள் அவருடைய படைப்புகள் தமிழ்க் கருவூலமாய்ப் பேணப்படும் என்பதிலும் உள்ளத்தில் உவகை பூக்கிறேன்.
“உலகம் தழீஇயது ஒட்பம்” என்றெண்ணித் தக்காரைத் தகையாரைத் தமிழ் போலப் போற்றித் தகுந்த நலங்கள் சூழச் சுற்றமும் வாழ்த்த, வாழ்கவென வாழ்த்துகிறேன்.
குறிப்பு:-
14.10.25 மற்றும் 10.10.87
இரு ஒளிப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Add a Comment