செய்தி வெளியீடு எண்: 962
நாள் : 06.05.2025
ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 211ஆம் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 07.05.2025
திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அயர்லாந்தில் 07.05.1814இல் பிறந்து, (1814-1891) ஸ்காத்லாந்தில் கல்விப் பயின்று, இங்கிலாந்து நாட்டில் பயிற்சிபெற்றுத் தமிழ்நாட்டில் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் இருந்து அளவில்லாத அரும்பணிகளை ஆற்றினார். மொழி ஆராய்ச்சியில், வரலாற்று தேடலில் கண்டறிந்த நவமணிகள் பலவுண்டு.
கால்டுவெல் இளமையிலேயே மேலை நாட்டுச் செம்மொழிகளாகிய கிரேக்கமும் இலத்தீனும் கற்றிருந்தார்; கிறித்தவ சமய நுண் பொருளை அறிய ஈபுரு மொழியைப் படித்தார்; தமிழ்நாட்டிற்கு வந்த பின்னர் வடமொழியையும், தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார்; ஜெர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகளைக் குறித்து எழுதிய ஆராய்ச்சி நூல்களைப் பயில ஜெர்மானிய மொழியைக் கற்றார். இவ்வாறு பதினெண் மொழிகள் அறிந்த பல்கலைச் சிறப்பு பெற்றார்.
தமிழ் முதலிய திராவிட மொழிகளுக்கும். இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த காலத்தில், அதனை மறுத்துத் திராவிட மொழிகளின் தொன்மையையும், தனித்தன்மையையும், வளமையையும் சான்றுகளுடன் நிறுவித் தமிழ் மொழியின் தனிப் பெருமையை உலகுக்கு உணர்த்திய தனிப்புகழ் இவரைச் சாரும். சமஸ்கிருதத்துக்குப் புறம்பான தனியான ஒரு மொழிக் குடும்பம் உண்டு என்றதோடு தமிழில் சமஸ்கிருதமும், பிற இந்திய-ஆரிய மொழிகள் பலவும் கூடச் சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்று அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் (1856) காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாய் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இடையன்குடியில் மீளா உறக்கத்தில் இருக்கும் ஒப்பிலக்கணத் தந்தை பேராயப் பெருந்தகை கால்டுவெலின் புகழொளியும் மணியோசையும் என்றும் இசைத்துக் கொண்டிருக்கின்றன.
தமிழறிஞர் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் சிலை சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது. 02.01.1968 அன்று மேலவைத் தலைவராக இருந்த திரு.எம்.ஏ.மாணிக்கவேலர் அவர்கள் தலைமையில் பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரையார் அவர்களால் திறக்கப்பட்டது.
டாக்டர் இராபர்ட் கால்டுவெல் சிலையினைத் தென்னிந்தியத் திருச்சபையினர் வழங்கினர்.
சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரையில்) அமைந்துள்ள இராபர்ட் கால்டுவெல்லின் திருவுருவச் சிலைக்கு 07.05.2025 புதன்கிழமையன்று காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Add a Comment