ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைமையகத்தின் 32 பிரிவுகளில் 107
இருக்கைகளிலுள்ள 1271 கோப்புகள் மற்றும் 227 பதிவேடுகளைத் தமிழ்
வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், உதவியாளர் ஆகியோர் குழுவாக இணைந்து மேற்பார்வை செய்து எடுத்த குறிப்புக்களின் அடிப்படையில் வழங்கப்பெற்ற ஆய்வறிக்கை வியாழக்கிழமை 24.09.2026 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதனை அலுவலகத்தில் எளிமையாகவும் சிறப்பாகவும் எவ்வாறு செயலாற்றுவது என்பது குறித்தும் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அலுவலர் பெருமக்கள் முன்னிலையிலும் கூடுதலாக பிற மாவட்டங்களிலுள்ள அலுவலர்களும் பயன் கொள்ளும் வண்ணம் கூகிள் கூட்டப்பதிவு வாயிலாகவும் முதன்முறையாக நிகழ்ந்த அத்திறன் கூட்டத்தில், அரசின் திட்ட வரைவுகள், செயல்முறைகள், அறிவிப்புகள் முதலியவற்றில் நற்றமிழ்ப் பயன்பாடு மின்னி மிளிர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினேன்.
அலுவலகக் கோப்புகளைக் கண்ணொற்றிக் கொள்ளும் கவினுடன் தயாரிப்பதும் பராமரிப்பதும் கவனம் பெறும் என்பதையும்
21.6.1978 ஆம் நாளிட்ட அரசாணை 1134 படி அரசின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் ஒப்பிட வேண்டுமென்றும்
16.9.1998 ஆம் நாளிட்ட அரசாணை 431 படி அரசு ஊழியர் பெயருக்கு முன் ஊர்/ பெற்றோர்களின் பெயரின் முதல் எழுத்தினை தமிழில் எழுதுதல் வேண்டுமென்றும்
2.11.2021 ஆம் நாளிட்ட அரசாணை 140 படி பெயர்கள் தமிழில் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டுமென்றும்
28 .6 .1971 ஆம் நாளிட்ட அரசாணை 1993 படி பணிப்பதிவேட்டில் அனைத்துப் பதிவுகளும் தமிழிலேயே எழுத வேண்டுமென்றும்
27. 12. 1969 ஆம் நாளிட்ட அரசாணை 3148 படி அலுவலகப் பயண நிரல் தமிழில் இடம்பெற வேண்டுமென்றும்
10.3. 1981 ஆம் நாளிட்ட அரசாணை 432 படி வாலாயமான கடிதங்கள், நேர்முகக் கடிதங்கள், அனுப்பபெறும் கருத்துருக்கள், நினைவூட்டுக் கடிதங்கள், இடைக்கால மறுமொழிகள், சுற்றாணைக் குறிப்புகள், அலுவல் சார்பற்ற குறிப்பாணைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், ஒப்புவிப்பு ஆணைகள் அனைத்தும் தமிழில் இடம்பெற வேண்டுமென்றும்
27.3.1973 ஆம் நாள் இட்ட அரசாணை 175 படி அலுவலகத்தின் அனைத்து முத்திரைகளும் தமிழில் மட்டுமே இருத்தல் வேண்டுமென்றும்
14.10.1987 ஆம் நாளிட்ட 349 அரசாணைப்படி தகவல் பலகைகள் அனைத்தும் தமிழில் அமைக்கப்பட வேண்டுமென்றும்
9.4.2008 ஆம் நாளிட்ட அரசாணை 70 படி அலுவலக ஆணைகள், கடிதங்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு நேரான தமிழ்த் திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டி அறிவுறுத்தினேன்.
வலைத்தளங்களின் வளமையும் வலிமையும் உணர்ந்து அவற்றைப் பயன்கொள்ளும் வழிமுறைகளையும் சுட்டிக் காட்டினேன்.
சிறப்பாகக் கோப்புகளைப் பேணும் அலுவலகப் பணியாளர்களைப் பனிதூங்கும் சொற்களால் பாராட்டி மகிழ்ந்தேன்.
‘தேனார் மலர்ச்சோலையில் திரியும் வண்டுகள்போல், அலுவலகப் பணிகளில் ஆர்வம் தழைக்க நுழைந்து, அரும்பணியாற்ற விழைந்து, செயலாற்றலில் மிகுந்து, செந்தமிழ் சீர்பெற எல்லோரும் ஒன்றிணைந்து உழைப்போம்’ எதிலும் தமிழென்னும் பேர் கொடுப்போம், மேற்குறித்த அனைத்து அரசாணைகளுக்கும் உயிர் கொடுப்போம் என்று அனைவரையும் உற்சாகப்படுத்தி விடைபெறும் பொழுது எனக்குப் பின்னால் அமைக்கப்பட்டுள்ள அலுவலகப் பதாகையையும் சுட்டிக்காட்டி 39 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அரசாணைப்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்று தமிழில் முதன்மையாக மிளிர வேண்டும் என்றும் மறவாமல் வலியுறுத்தினேன்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைமையகத்தின்
செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் மரு.ப.மு. செந்தில்குமார்,
நிதி ஆலோசகர் திரு தரணி பாபு,
தலைமைப் பொறியாளர் (நகரம்)
திரு. கண்ணன், தலைமைப்பொறியாளர் (புறநகரம்) திரு சரவணன், தலைமை வருவாய் அலுவலர் திரு இராஜேந்திரன்
மாவட்ட வருவாய் அலுவலர் (திட்டங்கள்)
திருமதி சௌந்தர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சைலேந்திரன்
தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி ரா.சிவசங்கரி, உதவியாளர் ஜெ.உதயரசன் ஆகியோர் நிழலாய் உடன் இருந்தனர்.

Add a Comment