POST: 2026-09-21T11:24:17+05:30

நக்கீரன் – இனிய உதயம் –
செப்டம்பர் மாத இதழ்
1-30 September 2026

பக்கம் எண் : 46,47,48,49,50.

முனைவர் மஞ்சுளா அவர்களின் திறனாய்வுக்கட்டுரை

தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒரு கடமை இருக்கிறது !

ஔவையின் செந்தமிழ்ப் புதையல்
ஔவை அருள்

எழுதவும் படிக்கவும் தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை கணக்கிலடங்காத நூல்கள்
வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

இன்னும் சொல்லி முடிக்க முடியாத கதைகள், எழுதித் தீர்ந்துபோகாத கருத்துக்கள் எப்போதும் வரிசைகட்டி நிற்கின்றன.

ஓலைச்சுவடிகளில் தொடங்கிய எழுத்தாக்கம், அச்சாக்கம் பெற்றதுடன், இன்று கணினித்திரையில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

இலக்கியத்தில் தன்னைக் கரைத்துக்கொள்பவர்கள் எழுத்தெண்ணிப் படிப்பதை வழக்கமாகவே கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் பொழுதுபோக்கிற்காக வாசிப்பவர்களும் உண்டு.

அறிவைப் பெறுவதற்காக எந்த நேரமும் புத்தகமும் கையுமாக இருப்பவர்களைப் புத்தகப்புழு என்றே குறிப்பிடுகிறோம்.

இலக்கியச் சுவையை உணர்ந்து கொள்பவர்களின் ரசனை வேறுவிதமானது.

அப்படி என்னதான் இந்த நூலில் சொல்லாத செய்தி புதுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்ற தேடலுடன் வாசிப்புக்குள் நுழைபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

புத்தக வாசிப்பு மனிதனைப் பண்புள்ளவனாக மாற்றுகிறது.

வாசிப்பின் மூலமாக மற்ற உயிர்களை நேசிக்கும் உள்ளம் மனிதர்களிடம் குடிகொள்ளத் தொடங்குகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தச் சமுதாயத்திற்குச் சொல்லாமல் விடுபட்ட செய்திகளைக் கவிதையின் மூலமாகவோ, கதைகளின் வடிவிலோ, கட்டுரைகளின் வழியாகவோ தொடர்ச்சி அறுந்துவிடாமல் அறிவுச் சமூகம் சொல்லிவருகிறது.

எந்த இடத்தில் இந்த எழுத்தின் பாய்ச்சல் தடைப்படுமோ, எந்த ஒரு புள்ளியில் வாசிப்பின் வாசல் அடைபடுமோ அன்றைய நாளில் பண்பாடும் நாகரிகமும் என்னவாகும் என்ற பயம் நம்மை அச்சுறுத்துகிறது !

இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பது உண்மையென்றாலும், அதே இலக்கியம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள சொல்லிக் கொடுக்கப்படும் பாடம் என்பதே முழு உண்மையாக இருக்கமுடியும்.

இரவு நேரத்தில், உலகத்தின் இரைச்சல் அடங்கிய பிறகு, காற்றின் ஊடாக மரங்கள் பேசிக்கொள்ளும் உரையாடலில் நூற்றாண்டுக் காலத்தின் இயற்கையின் பரிணாம வளர்ச்சி அல்லவா வெளிப்படுகிறது.

எல்லோருக்கும் சொல்லிக்கொள்வதற்கு ஒரு செய்தி உண்டு என்பதைப் புரிந்துகொள்ளும் மனித இனம் மேன்மேலும் முன்னேற்றமடைகிறது.

அந்த வகையில் ஒருவர் தன் வாழ்நாளில் செய்து முடிக்கவியலாத பணியை அவரின் இல்லாமைக்குப் பிறகும் வெளிவருகிறதென்றால் அந்தப் படைப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒருவர் தான் வாழும்பொழுது தன் கைப்பட எழுதிய நூல்களுக்கும், அவரின் மறைவுக்குப் பிறகு அவரின் அன்புக்குரியவர்கள் தொகுத்து வெளியிடும் நூல்களுக்கும் பெரும்பாலும் வேற்றுமை இருப்பதில்லை.

ஆனாலும் எழுத்தாளரின் மறைவுக்குப்பிறகு வெளியாகும் நூல்களில் அவற்றைத் தொகுத்து வெளியிடும் மனிதர்களின் பேரன்பு செயல்வடிவம் பெற்றுவிடுகிறது.

இயேசு பெருமானின் சொற்பொழிவுகளை அவர்களின் சீடர்கள் நூலாக்கம் செய்தனர் என்பது ஒருபுறமிருக்க,

வைணவ உலகில் நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பட்டோலை செய்தவர் அவரின் சீடரான மதுரகவியாழ்வார் என்பது மற்றொரு புறமிருக்க,

மகாகவி பாரதியாரின் மறைவுக்குப் பிறகு அவரின் படைப்புகளை அச்சிலேற்றி அழகு பார்த்த அந்தப் பற்றாளர்களைத் தமிழ்ச் சமுதாயம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறது.

அந்த வகையில் ‘ ஒளவையின் செந்தமிழ்ப் புதையல் ‘ என்ற நூலை மகன் என்ற நிலையிலிருந்து நூலாக்கம் செய்து வெளியிட்டிருக்கும் பெருமை ஒளவை கண்ணனுக்கும். ஒளவை அருளுக்கும், ஒளவை பரதனுக்கும் உண்டு.

‘எங்கிருந்தோ வந்தான் கண்ணன்’ என்பதைப்போல ஒளவை நடராசனாரின் குடும்பத்திற்காகத் தன்னை ஒப்புக்கொடுத்த கவிஞர் பொன்னேரி பிரதாபும் நூலைக் கொண்டுவருவதில் பெரும் உழைப்பைத் தந்திருக்கிறார்.

ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் தமிழ்ச் சமுதாயத்தின் கருத்துப் பெட்டகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

அணிந்துரைகளாகவும், சொற்பொழிவுகளாகவும், வாழ்த்துரைகளாகவும், சுட்டுரைகளாகவும் தொகுக்கப்பட்ட இந்நூலில் மொத்தம் 109 தலைப்புகளில் பல்வேறு அரிய தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

நூலாசிரியரின் குடும்பத்திற்கு ஒளவை என்ற அடைமொழி கிடைத்ததன் பின்னணியை ரசனை குறையாமல் பதிவுசெய்திருக்கிறது நூல்.

அதாவது ஒளவை நடராசனாரின் தந்தையார் தமிழறிஞர் துரைசாமி பள்ளியில் படிக்கின்ற காலத்தில், மேலும் ஒரு மாணவர் துரைசாமி என்ற பெயரில் படித்து வந்தார்.

துரைசாமி என்றழைக்கும்போது இருவரும் திரும்பிப் பார்க்க, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஆசிரியர் செய்த மாற்றத்தால் ஒளவை என்ற அடைமொழி வந்து சேர்கிறது.

நூலாசிரியரின் அப்பா ஒளவையார் குப்பம் என்ற ஊரில் பிறந்ததால் என்று பள்ளிக்கூட ஆசிரியர் பெயர் சூட்டினார்.

டி. நடராசனாருக்கும் பெயரைச் சொல்லும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

துரைசாமி என்ற தந்தையாரின் பெயரை டி என்று தலைப்பெழுத்தாகக் குறித்தபொழுது திரு. டி நடராசன் என்று அழைக்க, அது திருடி நடராசனாக மாறியது.

திருட்டுப் பட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஒளவை நடராசன் என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டார் என்ற தகவல் சுவாரசியமானது.

பல்வேறு கவிஞர்களின் கவிதை நூல்களுக்கும், பல எழுத்தாளர்களின் கட்டுரை நூல்களுக்கும் சளைக்காமல் அணிந்துரை வழங்கியிருப்பதை இந்தப் படைப்பின் மூலமாகத் தெரிந்துகொள்கிறோம் .

புதிய படைப்பாளிகளை அணிந்துரை தந்து ஊக்குவிப்பதில் ஒளவை நடராசனாருக்கு ஈடு இணையில்லை என்பதை நிரூபிக்கும் இந்நூல் நம்மையும் புதிய படைப்பாளிகளை வரவேற்கத் தூண்டுகிறது.

திருமதி வாசுகி கண்ணப்பன் எழுதிய ‘பல் மருத்துவர் கண்ணப்பனாரின் பல முகங்கள்’ என்ற நூலுக்கான அணிந்துரையில் பெண்ணின் பெருமையைப் பலபடியாகப் பேசியிருக்கிறார்.

திருமணத்திற்கு பின் குழந்தைகளுடன் ஒரு பெண் கல்லூரிப் படிப்பைப் படிப்பது என்பது அந்தக் காலத்தில் எவ்வளவு பெரிய சாதனையாக இருந்திருக்கும் என்று இன்று நினைத்தால் நமக்கு வியப்பாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் மூன்று முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமைமிக்க நூலாசிரியர் டாக்டர் கலைஞரைப் பற்றிக் குறிப்பிடும்போது புறநானூற்றில் இடம்பெற்ற மோசிகீரனார் பாடலுடன் நினைத்துப் பார்க்கிறார்.

அரசன் இரும்பொறையைக் காண வரும் மோசிகீரனார், மன்னன் அரண்மனையில் இல்லாததால் அங்கே இருந்த கட்டிலில் படுத்துத்தூங்கிவிடுகிறார்.

அரச சின்னமான முரசு வைக்கக்கூடிய கட்டிலில் புலவர் உறங்கிவிட்டார்.

திரும்பி வந்த அரசன் யாரோ ஒருவர் முரசுக் கட்டிலில் படுத்திருக்கிறார் யாரோ என்று நினைத்து கொல்வதற்காக வாளை எடுத்தான்.

பக்கத்தில் வந்தவுடன் புலவர் என்று தெரிந்துகொண்டு அவருக்குக் காற்று வீசுவதற்காகக் கவரியை வீசினான்.

கண்விழித்த புலவர் நடுங்கிப் போனார்.

‘ உன்னுடைய தமிழ் அன்பை என்னவென்று புகழ்வேன் ‘ என்று பாராட்டினார்.

இந்தப் பாடலையும் கலைஞரையும் ஒன்றாக நினைத்துப் பார்க்கும் நூலாசிரியர் கலைஞரின் தமிழ்ப்பற்றை இந்தச் சமுதாயத்திற்கு உணர்த்திவிடுகிறார்.

கலைஞரைப் பற்றிக் குறிப்பிடும்போது தை முதல் நாளைப் புத்தாண்டாக அறிவித்ததையும் சேர்த்தே குறிப்பிடுகிறார்.

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் தை என்ற பெயர் ஒன்று மட்டுமே தமிழ்ப் பெயர் என்று சொல்லி வாசகனை வியப்பில் ஆழ்த்துகிறது நூல்.

தை என்பதற்கு இன்பம், மகிழ்ச்சி, ஆடல், விளைச்சல் என்ற பல பொருள்கள் உண்டு.

உழவே தலை என்ற வள்ளுவத்திற்கிணங்க உழவர் திருநாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாட வைத்த வரலாற்றை நினைக்க வைக்கிறார்

ஆசிரியர் நாலு திசையிலும் சந்தோஷம் என்ற நூலில் ரா.கி. ரங்கராஜன் எழுதிய கருத்து மிகுந்த
கவனத்திற்குரியது.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியவர்கள் தமிழர்கள் என்று சொல்லும்போது தமிழர்கள் புளகாங்கிதம் அடைந்தாலும், கல்லும் மண்ணும் தோன்றும் முன்னர் மனிதன் எப்படித் தோன்றியிருக்கமுடியும் என்று பலரும் கேலி செய்வதைப் பார்க்கிறோம்.

இதற்கான விடையை ஒளவை நடராசனாரிடம் தான் கேட்கவேண்டும்.

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி’ என்பது உழவர் பெருமையைக் குறிக்கிறது.

கல் என்றால் மலை, மண் என்றால் சமவெளி வயல், வாள் என்பது ஏர்முனை.

இவரின் தமிழ்ப் புலமையை, தமிழ்ப் பற்றை மலை மட்டுமே இருந்த ஊரில் ஏர்முனையால் நிலத்தைச் சீர்படுத்தி வயல் ஆக்கினார்கள் தமிழர்கள் என்பது இதன் பொருள் என்று சொல்லி நம்மை பெருமைபட வைக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் வார்த்தையிலிருந்தும் புரிந்துகொள்ளலாம்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்க விரும்பிய ஜெயலலிதா அம்மையார் இவரிடம் அதற்கான ஒப்புதலைக் கேட்டார்.

இவரோ பணி நிறைவு பெற்ற பின் அந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கொள்கிறேன்.

அதுவே எனக்கு நன்மை செய்யும் என்று பதில் கூறினார்.

உங்கள் நன்மை முக்கியமா தமிழின் மேன்மை முக்கியமா என்று எதிர்க்கேள்வி கேட்டவுடன் வாயடைத்துப் போன நூலாசிரியர் உடனடியாக சம்மதத்தைத் தெரிவித்து மூன்றே நாளில் துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டார்.

தேடுதல் குழு மற்றும் ஆளுநரின் ஒப்புதலுடன் துணைவேந்தர் நியமனம் நடந்ததென்றால் அந்தந்த மாநிலத்து முதல்வருக்குத் துணைவேந்தரைத் தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே தமிழைப் புறக்கணிக்கும் சூழலை இன்று எதிர்கொண்டுவருகிறோம்.

இது இன்று நேற்றல்ல, பல காலமாகத் தொடர்கிறது

செம்மொழித் தகுதிபெற்ற தமிழ்மொழிக்கு ஈடு இணை உண்டா !

உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வாசகத்தைக் கொண்டாட மறுக்கும் மனிதர்களே இருக்க முடியாது.

ஆனாலும் தமிழ்மொழி கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்த்தால் இரத்தக் கண்ணீர் வருவது உறுதி.

தமிழ்நாட்டில் அரசியல் சூழல் மாறியபோது, வேற்று மொழியைப் பேசுபவர்கள் அரசாட்சி செய்தபோது தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது.

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

கல்வியும், கலைகளும் ஆங்கில மொழியிலேயே தொடங்கப்பட்டன.

தமிழ்ப் படிப்புக்கான முதுகலை பட்டப்படிப்பின் வினாத்தாள்களும் ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டன.

மரபுமொழி. பண்பாட்டுப் படிமமொழி, கடவுளின் மொழி, கோயில்மொழி, வேதமொழி என்றெல்லாம் வடமொழி கட்டமைக்கப்பட்டது.

எனவே வடமொழி பழமையான மொழி என்றும் ஆங்கிலம் அரசு மொழி என்றும் நிலைநிறுத்தப்பட்டன.

மனோன்மணியம் சுந்தரனார், பேராசிரியர் எம்.எஸ். பூரணலிங்கம், மறைமலை அடிகளார், பரிதிமாற் கலைஞர் முதலிய தமிழறிஞர்கள் தமிழ்க் கட்டுரைகளை எழுதி தமிழுணர்வை ஊட்டி வந்தனர்.

இன்றும் தமிழ்மொழிக்கான முக்கியத்துவத்தை நடுவண் அரசு தர மறுக்கும் சூழலை எப்படி எதிர்கொள்வது !

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் எழுதிய ‘மெய்யறம்’ என்ற நூலை இந்தப் படைப்பு சிலாகித்துப் பேசுகிறது.

திருவள்ளுவர் அறிவுறுத்தும் அறத்தை வ.உசியும் பேசுகிறார்.

அதே நேரத்தில் காலத்திற்கு ஏற்ற அறங்களையும் குறிப்பிடத் தவறவில்லை.

அதில் ஒன்று ஆணுக்கு பெண் இளைத்தவள் இல்லை என்பது. ஆண்கள் மனைவியைத் தவிர பிற பெண்களை நாடுவது பெரும் பாதகம் என்று சாடுகிறார்.

‘ஆண்பால் உயர்வெனல் வீண்பேச்சறிக தன்துணை அலாளைத் தழுவுவோன் பரத்தன் பரத்தையினும் மிகக் கொடியன் பரத்தன் நன்மகள் கெடுதல் அப்புனமகனாலே மன்னெல்லாம் நிகழ்வது அம் மாயாவியாலே’
என்ற வரிகள் மகளிருக்கான வழக்குரைஞராக நின்று வாதாடுகின்றன.

நூலாசிரியருக்கு தன் மனைவியின் திறமை குறித்து எப்போதும் பெருமை உண்டு.

அவருடைய மனைவி மருத்துவர் தாரா மிகவும் கண்டிப்பான பேர்வழி.

அவருக்கு கீழ் 900 மருத்துவர்கள் பணி புரிந்திருக்கிறார்கள் என்றும் தன்னுடைய மனைவியை ‘அவங்க’ என்றுதான் மரியாதையுடன் குறிப்பிடுவார் என்றும் வாசிக்கும் வாசகர்கள் மனைவியை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று அறிவுபெறுவர்.

துக்ளக் வாசகர்கள் ஒளவை நடராசனாருடன் கலந்துரையாடிய நேர்காணல் சுவையான பகுதி.

இந்தித் திணிப்புக்கு எதிரான போர்க் குரலை எப்போதும் தமிழ்நாடு எழுப்புகிறது.

இந்தச் சூழலில் முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனின் நிலைப்பாட்டை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் நடராசனார்.

இந்தி கற்றுக்கொள்ளாமலேயே ஐந்தாண்டு காலம் தில்லியில் முதல் குடிமகனாக அதாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்துவிட்டேன் என்று நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டதைச் சொல்லும் நூலாசிரியர், சூழ்நிலையைப் பொறுத்தே மாற்றுமொழியைக் கற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் நடக்கும்.

அதே நேரத்தில் மாற்று மொழியைக் கற்றுக்கொள்வதாலேயே நம்முடைய தாய்மொழி சீர்குலைந்து விடுவதில்லை என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ளத் தூண்டுகிறார்.

மனிதர்களுக்கு தத்துவம் பிறக்கும் இடங்கள் இரண்டு ஒன்று சுடுகாடு மற்றொன்று சிறைச்சாலை.

பேரறிஞர் அண்ணா சிறைச்சாலையில் இருந்தபோது தோன்றிய சிந்தனைகளைத் தத்துவமாக குறிப்பிடுகிறது நூல்.

தமிழினத்தின் வாளாகவும், தமிழர்களுக்குத் தோளாகவும், அறிவின் விளக்கமாகவும், ஆற்றலின் தோற்ற மாகவும், ஊக்கத்தின் உறைவிடமாகவும், எழுச்சியின் இருப்பிடமாகவும், பண்பாட்டின் பலகணியாகவும் திகழ்பவர் அண்ணா.

அவருடைய மொழிபெயர்ப்பை அவருடைய தமிழ் ஆங்கிலப் புலமையை வியக்காதவர்களே இருக்கமுடியாது.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம். Robert Clive comes to India.

He becomes Robber Clive என்ற ஆங்கிலத் தொடரை அடுத்த நொடியே ‘திரு கிளைவாக வந்தவர் திருட்டு கிளைவாக மாறினார்’ என்று கூறிய மொழித்திறம் பாராட்ட வைக்கிறது.

சிறைச்சாலையில் இருந்தபோது பறவைகளின் ஒலி கேட்டு கண் விழிப்பதை மகிழ்ச்சியோடு அனுமதிக்கிறார் அண்ணா.

இசை, இன்னிசை, கவலை, பயம், தேவை, தவிப்பு எனும் எந்த உணர்ச்சிகளுமற்ற ஒரு நிம்மதியான நிலையிலிருந்து எழும் இசை, பறவைகளின் இசை என்று அண்ணா குறிப்பிடுவதை ஒரு கவிதைக்கான மனநிலை என்று போற்றுகிறார் நூலாசிரியர்.

‘நாங்கள் உள்ள பகுதியிலுள்ள மரங்கள் சிலவற்றில் இலை உதிர்ந்து மொட்டையாகி நின்றன.

பாதாம் மரத்தின் இலைகள் பச்சையாக இருந்தவை இரத்தச் சிவப்பாக மாறின.

பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது.

ஆனால் சிவப்பு சுருஞ்சிவப்பாகி, மஞ்சள் கலந்ததாகி, சருகாகி உதிர்ந்துவிட்டன.

இந்தப் பாதாம் மரத்திலுள்ள மற்ற இலைகளும் உதிர்ந்ததும் இலைகள் உதிர்ந்து மொட்டையாகிவிட்ட அந்த மரம் இந்த நிலையில் தன்னை உலகம் விரும்பாது என்பதால் மறுபடியும் துளிர்க்கத் தொடங்கிவிட்டது.

மரத்திலேயே கல்லறையும் தெரிகிறது , தொட்டிலும் தெரியத் தொடங்குகிறது.

என்ற பகுதி உலகக் கவிதைக்கு இணையான பகுதி.

இன்னொரு பக்கம் அனல் பறக்கும் அரசியல் நிகழ்ச்சிகளையும் சொல்லிக்கொண்டே வருகிறார்.

தமிழ்நாடு என்று பெயர் வைப்பதில் எழுந்த எதிர்ப்பிலிருந்து, காங்கிரஸ் கட்சி குறித்த அண்ணாவின் விமர்சனப் பார்வை என்று பலவற்றையும் சாறாகப் பிழிந்து தந்திருக்கிறது படைப்பு.

வரலாற்று ஆய்வுக்கும், மொழிபெயர்ப்புத்துறைக்கும் பெரும் தொண்டாற்றிய பேராசிரியர் ந. சுப்பிரமணியன் மற்றும் மானமிகு அறிஞர் சோமசுந்தரம் ஆகியோரை இந்த நூல் நன்றியுடன் நினைத்துப் பாராட்டுகிறது.

வரலாற்றுத் துறை சார்ந்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்த பெருமை இவர்களையே சேரும்.

பார்ப்பனர்கள் கொண்டுவந்து சேர்த்த 13 விதமான முட்டாள்தனமான நம்பிக்கைகளை, சுரண்டல் மனநிலையை, பொய்யான வரலாறுகளைத் தோலுரித்துக் காட்டியமைக்காகவும், பகுத்தறிவுச் சுடரை ஒளிரச் செய்தமைக்காகவும் தமிழ்கூறு நல்லுலகம் இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

மிகச் சிறந்த அறிஞர்கள், மகான்கள், சிந்தனைச் சிற்பிகள், சமூகப் போராளிகள் முதலியோர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே ஒரு வரம்.

பக்தர்கள் இறைவனின் அவதாரம் நிகழ்ந்த காலத்தில் வாழக்கொடுத்து வைக்காத நிலையை நினைத்து ஏங்குவது போலில்லாமல் தமிழறிஞர் ஒளவை நடராசனார் வாழும் காலத்திலேயே நானும் வாழ்ந்திருக்கிறேன், அவருக்கு அருகிலிருந்து அவர் இட்ட பணிகளைத் தலைமேல்
கொண்டு செயல்படுத்தியிருக்கிறேன் என்று பூரித்துப் போகும் கவிஞர் பொன்னேரி பிரதாப் பற்றி இந்த நூல் தரும் சான்றிதழ் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்று சொல்வார்கள்.

அந்த வகையில் ஒளவை நடராசனார் நினைப்பதற்கு முன்பாகவே அவரின் விருப்பத்திற்குச் செயல் வடிவம் கொடுத்து, அவரின் மறைவுக்குப் பிறகும் அவரின் மகனாருடன் உடனிருந்து தொண்டாற்றும் அந்தத் தூய உள்ளத்தை வாழ்த்துவதன் மூலம் எல்லோருக்குமான அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது படைப்பு.

இப்படி அள்ள அள்ளக்குறையாத அமுதசுரபியாக வெளிவந்திருக்கும் இந்நூலில் நூலாசிரியரின் திருமண அழைப்பிதழ் உட்பட பல இனிமை தரும் கருத்துக்களும் படையலாக்கப்பட்டிருக்கின்றன.

எதுகை மோனைக்கு முக்கியத்துவம் தரும் நூலாசிரியரின் மனங்கவர்ந்த கவிதையாக ஒரு சுவிதையைக் குறிப்பிடலாம்.

அது கவிக்கோ அப்துல் ரகுமான் மீது கொண்ட இவரின் அன்பு வெளிப்படுத்தி நிற்கிறது.

தன்னுடைய உதடுகள் முணுமுணுக்கும் பாடலாக,

‘வாளெடுத்துப் போர் தொடுத்தல் இவனுக்கு வாடிக்கை
வீரக்களத்தில் இரத்த ஈரக்குளத்தில்
ஆடி வருவது இவனுக்கு வேடிக்கை பாடிக்கை
நீட்டி வந்தால் தருவதற்கு இருப்பதோ இரண்டல்ல கோடிக்கை’

என்ற வரிகளைச் சொல்லி நம்மையும் கவிக்கோ பக்கம் திருப்புகிறார்.

கோடை வெயிலுக்கு இதம் தரும் மர நிழலைப் போல, மேய்ச்சலுக்குப் போன தாய்ப்பசு வருகைக்குக் காத்திருக்கும் கன்றுக்குட்டிக்குத் தன் மடியைத் தந்து பசியைப் போக்குவதுபோல, பிரிந்த காதலர்கள் ஒன்றுசேரும் அற்புத தருணங்களைப்போல, உலக மகா யுத்தங்கள் முடிவுக்கு வருவதுபோல இன்பமும் அமைதியும் ஆறுதலும் உண்மையும் தரும் நூலாக வெளிவந்திருக்கும் இந்தப் படைப்புக்கு உயிர் கொடுத்து தந்தைக்கு மகன்கள் செய்ய வேண்டிய உதவியைச் செய்து தங்கள் கடமையாற்றியிருக்கின்றனர்.

தமிழ்ச் சமுதாயத்திற்கென்று ஒரு கடமை இருக்கிறது, இந்த நூலை வாசித்துப் பயன்பெற வேண்டியதே அந்தக் கடமை !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *