POST: 2026-09-20T10:29:46+05:30

நீங்கா நினைவு

​இயன்முறை பயிற்சி வித்தகராக விளங்கிய தமிழார்வலர் டாக்டர் கிருஷ்ணன் (01.02.1956-15.9.2026) மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.

​தலைமைச் செயலகத்தில் இயன்முறை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மருத்துவமாமணி குமரேசன் அவர்களின் நெருங்கிய நட்பால், இராயப்பேட்டையில் இயன்முறை சிகிச்சைக்கூடம் ஒன்றை அமைத்துக் கொண்டு, பல்வேறு நண்பர்களின் இல்லங்களுக்கும் குறிப்பாக செவாலியர் அண்ணாச்சி விஜி சந்தோஷம், ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் இல்லங்களுக்கு நேரில் சென்று நீவுதல், நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை இன்முகத்துடன் வழங்கியவர்.

தமிழ் நூல்கள் மீது பேரார்வம் கொண்டு நூலகம் அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டவர்.

கவிதைகள் தீட்டும் வல்லமை பெற்று நூலாசிரியராகவும், கவிஞராகவும், இயன்முறை மருத்துவராகவும், அனைவராலும் போற்றப்படும் நண்பராகவும் மிளிர்ந்த அவரது பெருமைகளை எவராலும் மறக்க இயலாது.

​எங்கள் இல்லத்திற்கு அவர் அடிக்கடி வந்ததும், என் தந்தையாரோடு நட்பு பூண்டு தன்னுடைய நூலுக்கு அவரிடம் முன்னுரை பெற்றதும் என் நினைவில் எப்போதும் பசுமையாக இருக்கும்.

அதேபோல, என் அப்பா பலமுறை நடக்க முடியாமல் நலிந்தபோதும், மூட்டு வலியினால் அல்லலுற்றபோதும், டாக்டர் கிருஷ்ணன் அவர்களின் சிறப்பான பயிற்சிகளாலும், கை கால்களை நன்றாக வீசிப் பயிற்சி அளித்த முறையாலும் குணமடைந்தார்.

அப்பாவும் அவரைப் பெரிதும் பாராட்டியது இப்போது என் நினைவில் நிழலாடுகிறது.

​மலேசியா, சிங்கப்பூர், இலங்கை,
தைவான், கம்போடியா எனப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்த அவர், அந்நாடுகளின் சிறப்புச் செய்திகளையும் அரிய தகவல்களையும் நாம் எவ்வாறு அவற்றை நம் வாழ்வில் பின்பற்ற வேண்டும்’ என்று நீண்ட நேரம் அவர் நம்மோடு கலந்துரையாடியதை எண்ணி நெகிழ்கிறேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *