POST: 2026-09-18T10:24:59+05:30

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

தமிழ்நாடு அரசு அருங்காட்சியக இயக்ககத்தில் மூன்று பிரிவுகளில் உள்ள 64 கோப்புகள் மற்றும் 23 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் குழுவாக இணைந்து மேற்பார்வை செய்து எடுத்த குறிப்புக்களின் அடிப்படையில் வழங்கப்பெற்ற ஆய்வறிக்கை 10.09.2026 வியாழக்கிழமையன்று பிற்பகல் 1.00 மணியளவில் அரசு அருங்காட்சியக இயக்கத்தின் முதல் தல அரங்கில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்வைக்கப்பெற்றது.

அரசு அருங்காட்சியக இயக்ககத்தின் அலுவலர் பெருமக்கள் முன்னிலையில் நிகழ்ந்த அக்கூட்டத்தில், அரசின் திட்ட வரைவுகள், செயல்முறைகள், அறிவிப்புகள் முதலியவற்றில் நற்றமிழ்ப் பயன்பாடு மின்னி மிளிர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினேன்.

அலுவலகக் கோப்புகளைக் கண்ணொற்றிக் கொள்ளும் கவினுடன் தயாரிப்பதும், பராமரிப்பதும் கவனம் பெறும் என்பதை அறிவுறுத்தினேன்.

வலைத்தளங்களின் வளமையும் வலிமையும் உணர்ந்து அவற்றைப் பயன்கொள்ளும் வழிமுறைகளையும் சுட்டிக் காட்டினேன்.

மிகு சிறப்பாகக் கோப்புகளைப் பேணும் அலுவலகப் பணியாளர்களைப் பனிதூங்கும் சொற்களால் பாராட்டி மகிழ்ந்தேன்.

‘தேனார் மலர்ச்சோலையில் திரியும் வண்டுகள்போல், அலுவலகப் பணிகளில் ஆர்வம் தழைக்க நுழைந்து, அரும்பணியாற்ற விழைந்து, செயலாற்றலில் மிகுந்து, செந்தமிழ் சீர்பெற எல்லோரும் ஒன்றிணைந்து உழைப்போம்’ என்று அனைவரையும் உற்சாகப்படுத்தி விடைபெற்றேன்.

அரசு அருங்காட்சியக இயக்ககத்தின் உதவி இயக்குநர் திரு.வெற்றிவீர பாண்டியன், உதவி இயக்குநர் திரு சுந்தர்ராஜன், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, உதவியாளர் திரு.தெ.ராமகிருஷ்ணன், திரு.விக்னேஷ் ஆகியோர் நிழலாய் உடன் இருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *