கவிஞர் தமிழ் ஒளியின் நினைவைப் போற்றி முன்னெடுத்த விழா!
உலகத் தொழிலாளர் ஒற்றுமையே, நல்லுணர்வே, அன்பே,இருட் கடலின் ஆழ்ந்திருந்து வந்த முத்தே, முழு நிலவே, மே தினமே வாராய் நீ! வாராய் உனக்கென்றன் வாழ்த்தை யிசைக்கின்றேன்…
மண்ணில் முளைத்தவன் நான்-அதன் மார்பில் திளைத்தவன் நான்!
எண்ணித் துணிந்து விட்டேன்-இனி எங்கும் பறந்து செல்வேன்!
என்ற முழக்கத்துடன் வாழ்ந்து மறைந்த கவிஞர் தமிழ் ஒளி (21.9.1924-29.3.1965)
பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.
கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தை ப்பாடல்கள் என பல இயற்றியவர். அவரின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை.
கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பெயரில் தமிழ் வளர்ச்சித் துறையில் ஓர் அறக்கட்டளை நிறுவி பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பெற்று வருகின்றன.
அவ்வகையில் 2026ஆம் ஆண்டிற்கு கவிஞர் தமிழ்ஒளி நினைவைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் தியாகராய நகர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை 09.09.2026ஆம் நாளன்று நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையாக முதல் பரிசு ரூ. 10,000/- இரண்டாம் பரிசு ரூ. 7,000/- மூன்றாம் பரிசு ரூ. 5,000/- வழங்கப்பட்டது.
கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு பி. யோகஸ்ரீ, இரண்டாம் பரிசு ச. சபரிகுமார், மூன்றாம் பரிசு கா. தனிஷ்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
கவிதைப் போட்டியில் முதல் பரிசு ஷஹாவத் சாலிஹா மு.சி, இரண்டாம் பரிசு கி. மதுமிதா, மூன்றாம் பரிசு ம. மணிமேகலை ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
பேச்சுப் போட்டியில் முதல் பரிசு செ.லி. முகிலன், இரண்டாம் பரிசு கா. காயத்ரி, மூன்றாம் பரிசு சை. நஸ்ரின் பானு ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
கலந்து கொண்ட அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பங்கேற்பு சான்றிதழும் கவிஞர் தமிழ் ஒளியின் தெரிவு செய்யப்பெற்ற பாடல் தொகுப்பு நூற்பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா குழுவின் தலைவர் திரு. மயிலை பாலு, பொதுச்செயலாளர் திரு. முத்து, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் ஆய்வு அலுவலர் திரு. பிரபாகரன், ஆசிரியர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Add a Comment