”
Arul.2009/FB/#69066
ஷேக்ஸ்பியர் வரிசை 9 A
மகாகவி ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்
தமிழில்
கவிஞர் புவியரசு
மகாகவி ஷேக்ஸ்பியர்
வாழ்க்கைக் குறிப்பு
மனித குலம் இதுவரை கண்டுள்ள மகாகவிகளில், ஈடு இணையற்ற மேதைமை படைத்துள்ள சேக்ஸ்பியரின் இளமைப் பருவம், நமக்கு வியப்பைத் தருகிற அளவிற்கு மிகச் சாதாரணமானது!
அவரது கல்வியோ நமக்கு அதிர்ச்சி தருகிற அளவுக்கு மிக மிகக்குறைவானது !
இங்கிலாந்தின் வார்விக் வட்டத்தில், ஸ்டிராபோர்டு என்ற ஊரில் 1564 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி, ஜான் சேக்ஸ்பியருக்கும். மேரி ஆர்டனுக்கும் மகனாகப் பிறந்தார் வில்லியம் சேக்ஸ்பியர்.
தாய் மேரி. பிரபு குடும்பத்துப் பெண். தந்தை ஜான், ஊரில் பெரிய விவசாயி.
அத்துடன் ஆட்டுக் கம்பளம், மரம், இறைச்சி வணிகமும் நடத்தி வந்தார்.
குடும்பம் வசதியாக இருந்தது.
ஊரில் நல்ல மரியாதை இருந்தது.
ஜான் ஊர் விவகாரங்களில் முக்கியமான பிரமுகராக மதிக்கப்பட்டார்.
கௌரவ நீதிபதியாகவும் பணியாற்றினார்.
அவருடைய பல காரியங்களிலும் உடனிருந்து அனுபவம் பெற்றார் இளம் சேக்ஸ்பியர்.
ஒன்பதாவது வயதில் தான் அவர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
படிப்பில் மிகச் சாதாரண மாணவனாகவே இருந்தார்.
“விளையும் பயிர் முளையிலேயே தெரியும்”! என்ற பழமொழி பொய்யாயிற்று.
ஆனால், விளையாட்டில் ஈடுபாடு இருந்தது.
ஊர்ப்பொது விளையாட்டுகளில் பங்கு கொண்டு பரிசுகளும் பெற்றார்.
அவரது பள்ளிப் படிப்பு பனிரெண்டாம் வயதிலேயே நின்று போனது!
“அரை குறை இலத்தீனும், அற்ப கிரீக்கும்தான்” அவரது அயல்மொழிப் புலமை! அப்புறம், தந்தைக்கு உதவியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
திடீரென அவர் தந்தை நொடித்துப் போனார்.
சொத்து சுகங்களை இழந்தார்; பதவிகளை இழந்தார்; கடனாளியானார்.
சொந்தமாக வளர்த்துக் கொண்ட கல்வியும், உலக ஞானமும்தான் சேக்ஸ்பியரின் கை முதலாக இருந்தது.
இந்த நெருக்கடியிலேயே இளமைப் பருவம் கழிந்தது.
அவரது பத்தொன்பதாம் வயதில் எட்டுவயது மூத்த ஆனி ஹத்தாவே என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது.
ஆறாவது மாதத்திலேயே அவர்களின் முதற் குழந்தை பிறந்தது.
பெயர் சூசன்னா.
1585ல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன: ஹாம்னெட், ஜுடித்.
அவர்
மகன், ஹாம்னெட் பதினோராம் வயதில் இறந்துபோனான்!
மன நிறைவில்லாத திருமணம், வறுமைச் சூழல், அரைகுறைக் கல்வி, மகனின் மரணம் எல்லாம் சேர்ந்து சேக்ஸ்பியரை நிலை கொள்ளாமல் தவிக்கச் செய்தன.
அவரால் அங்கே இருக்க முடியவில்லை.
ஊர் ஊராகச் சுற்றி வரும் ஒரு நாடகக் குழு ஸ்டிராபோர்டு வந்து நாடகம் நடத்திக் கொண்டிருந்தது.
அது, ஊரைவிட்டுப் போகும் போது அந்தக் குழுவுடன் சேர்ந்து கொண்டு ஊரைவிட்டு ஓடிப் போனார் சேக்ஸ்பியர்.
சேக்ஸ்பியர் லண்டன் மாநகருக்கு வந்து சேர்ந்தார்.
இருபத்தி ஏழாம் வயதில் அந்த மாநகரம் அவரை ஒரு எடுபிடி நாடகக் காரனாக ஏற்றுக் கொண்டு ஒரு மகாகவியாக உருவாக்கி உலகிற்குத் தந்தது.
சேக்ஸ்பியர் பிறந்த காலத்தில், இங்கிலாந்தில் ஒரு நாடக அரங்கு கூடக் கிடையாது.
அப்போது இருந்தவையெல்லாம் நாடோடி நாடகக் குழுக்களே.
அவர்கள் ஊர் ஊராகச் சென்று பிரபுக்களின் மாளிகை முற்றங்களிலோ, பொது இடங்களில் திறந்த வெளி மேடை அமைத்தோ தான் நாடகங்கள் நடத்தி வந்தார்கள்.
சேக்ஸ்பியர் லண்டன் வந்த காலத்தில் உலகப் புகழ் பெற்ற “குளோப் தியேட்டர்” உருவாகிவிட்டிருந்தது.
அவரது வாழ்க்கை, அனுபவம், நாடகப் புலமை, மேதைமை எல்லாம் உருவானது அந்த அரங்கில்தான்.
ஆரம்பத்தில் அவர் நாடக ஆசிரியராக இல்லை.
நாடக அரங்கின் வாயிற் காவலனாகவும், நாடகம் காண வரும் சீமான்களின் கோச்சு வண்டி, குதிரைகளைப் பார்த்துக் கொள்கின்ற வனாகவும்,பிறகு நாடக அரங்கிற்குள் எடு பிடியாகவும் வேலை பார்த்தார் !
அதற்குப் பிறகுதான் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது!
தொடர்ந்து நடித்துத் திறமை காட்டியதில் சில நல்ல பாத்திரங்களும் ஏற்று நடிக்கும் வாய்ப்புப் பெற்றார்.
ஆனால், அந்த நாடகங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை.
அந்த அரங்கில் நடந்த மட்டமான நாடகங்கள் அவருக்கு வெறுப்பைத் தந்தன.
நல்ல நாடகங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை அப்போதுதான் சேக்ஸ்பியருக்கு ஏற்பட்டது.
எலிசபெத்தின் ஆட்சிக் காலம் அது.
இங்கிலாந்தின் பொற்காலம் என்று போற்றிப் புகழப்படும் அந்தக் காலத்தில் எங்கும் ஆடலும், பாடலும், கவிதையும், ஓவியமும் களிநடம் புரிந்தன.
மக்கள் ஆடம்பரமாக உடையணிந்தார்கள்: அணிமணிகளுக்காக
ஏராளமாகச் செலவழித்தார்கள்.
இங்கிலாந்தின் புகழ், உலக அரங்கில் கொடி,கட்டிப் பறந்தது.
உலகின் மாபெரும் வல்லரசாக அது உருவாகிக் கொண்டிருந்தது.
கடல் வல்லமை காரணமாக, “கதிரவன் சாயாத பேரரசை” உருவாக்கும் முயற்சியில், இங்கிலாந்து அடியெடுத்து வைத்த கால கட்டம் அது.
உலகெங்கும் சுற்றி வீர தீர சாகசங்கள் செய்யவும், புதிய உலகங்கள் காணவும், புதிய பூமிகளை வளைத்துப் போடவும் இங்கிலாந்து கிளர்ந்து எழுந்த அந்தப் பரபரப்பான கால கட்டத்தில் தான் சேக்ஸ்பியரின் முதல் காவியம், “வீனஸ் அண்ட் அடோனிஸ்” 1593-ல் வெளியானது.
சௌதாம்டன் பிரபுவுக்குக் காணிக்கையாக்கப் பட்டிருந்த இந்தக் காவியம் உடனடியான பெரும்புகழைத் தேடித் தந்தது.
நாடக அரங்கின் எடுபிடி வேலையாளிலிருந்து மூன்றே ஆண்டுகளில் ஒரு நாடக மேதை பரிணமித்தது ஓர் அதிசயம்தான்.
அந்தக் கூட்டுப் புழுவுக்குள் என்ன ஆற்றல் எப்படி மறைந்திருந்தது என்பது யாருக்கும் தெரியாத இரகசியம் !
தொடர்ந்து இருபது ஆண்டுகளில் 37 நாடகங்களையும், இரண்டு சிறு காவியங்களையும், சில தனிக் கவிதைகளையும் எழுதிக் குவித்தார் சேக்ஸ்பியர்.
இங்கிலாந்து, அவரது நாடகங்களை கண்டு மகிழ்ந்தது; பாராட்டியது: பெருமைப்பட்டது.
சேக்ஸ்பியர், புகழோடு நாடகங்கள் படைத்துக் கொண்டிருந்த காலத்தில், வாழ்ந்த மேதைகள் சாதாரண ஆட்களல்ல.
கவிஞர் எட்மண்ட் ஸ்பென்சர், பெரும் பேச்சாளர் பிரான்சிஸ் பேக்கன், நவ கவி பிலிப் சிட்னி, நாடகக் காவியக் கவிஞர்கள் மார்லோ, கிரீன், பென்ஜான்சன். சாப்மேன்… போன்ற புகழ்பெற்ற மனிதர்கள் நாடறிந்தவர்களாக இருந்தார்கள்.
இவர்களெல்லாம் பல்கலைக்கழகத்தில் கற்று, மேல்பட்டப் படிப்புப் படித்தவர்கள்.
இவர்களை யெல்லாம் எடுத்து விழுங்கிய சேக்ஸ்பியரோ, ஆரம்பக் கல்வி மட்டுமே அரை குறையாகப் பெற்றிருந்தார் என்பது வியப்பிற்குரிய செய்திதான்.
மேதைமை பட்டப் படிப்பில் இல்லை என்பதை நிரூபணம் செய்கிறது சேக்ஸ்பியரின் வாழ்க்கை.
( நம்முடைய புதுமைப் பித்தன், கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்ற மேதைகளின் வாழ்வும் தான். )
சேக்ஸ்பியரின் முதல் நாடகம்,”லவ்ஸ் லேபர் லாஸ்ட்” தொடர்ந்து எழுதி அரங்கேற்றப் பட்ட முதல் ஆறு நாடகங்களில் குறிப்பிடத்தக்கது “ரோமியோ அண்டு ஜூலியட்டும்”, “இளவேனிற் காலக் கனவும்”.
தொடர்ந்து எழுதிப் புகழ் சேர்த்த நாடகங்களில் அவரது இளமைக் கால மனக் காயங்கள் தென்படுகின்றன.
நிறைவற்ற மணவாழ்க்கை, புத்திர சோகம், வாழ்க்கையின் வீழ்ச்சி, வேதனை, எல்லாம் அங்கங்கே அனுபவப் பூர்வமாக வறுமை வெளிப்படுகின்றன.
அவரது லண்டன் வாழ்க்கை, எல்லையற்ற அனுபவங்களை அவருக்குச் சேர்த்தது.
பணியாளாக அற்ப ஊதியத்தில் அல்லற்பட்ட காலத்தில், கடைப்பட்ட மக்களின் அவல வாழ்வை நேரடி அனுபவங்கள் மூலம் அவர் பெற்றார்.
மதுச்சாலைகளிலும், வேசிகளின் வீடுகளிலும், அட்டும் அழுக்கும் இருளும் குடிகொண்டிருக்கும் சந்து பொந்துகளிலும் அலைந்து திரிந்து, உண்மையான வாழ்வின் உயிர்த்துடிப்பை உணர்ந்தார்.
வாழ்நாள் முழுதும் தம் மனைவி மக்களைக் காக்கக் கடுமையாக உழைத்தார்.
செல்வம் சேர்ந்ததும் சொந்த ஊரில் ஒரு பெரிய மாளிகையை விலைக்கு வாங்கினார்.
மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். குடும்பம் வசதியாக வாழ வழிவகை செய்தார்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொந்த ஊர் சென்று மனைவி மக்களுடன் சில காலம் கழித்து விட்டு லண்டன் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சக கவிஞர்களிடம் அன்புடனும், நேசத்துடனும் நேர்மையுடனும் நடந்து கொண்டார்.
தனக்குப் புகலிடம் தந்த, வாழ்வளித்த ‘குளோப்” நாடக அரங்கைத் தவிர வேறு எந்த நிறுவனத்திற்கும் அவர் நாடகம் எழுதித் தரவில்லை.
வாழ்நாள் முழுதும் அந்த அரங்கோடு மட்டுமே அவர் வாழ்க்கை பந்தப் பட்டிருந்தது.
அழகையும், உண்மையையும் ஆதாரமாகக்கொண்டு சேக்ஸ்பியர் படைத்த நாடகங்களில் பல நூறு மன்னர்களும், அரசிகளும், சீமாட்டிகளும். பிரபுக்களும், அமைச்சர்களும், தளபதிகளும், மாவீரர்களும், கற்பரசிகளும், கயவர்களும், சாதாரண மக்களும், கோமாளிகளும், பைத்தியக்காரர்களும், பேய் பிசாசுகளும் வந்தாலும், மானிட வாழ்க்கை தான் அவற்றின் மையமாகத் திகழ்கின்றது.
மனித வாழ்வின் மெய்யான உயிர்த்துடிப்புத்தான் மையச் சுழலாய் ஆற்றலுடன் சுழன்று பெருகி அலையடிக்கிறது.
எல்லையற்ற மானுட நேயமே சேக்ஸ்பியர்.
“ஆ ! மனிதன் தான் எப்படிப்பட்ட அற்புதப் படைப்பு!” என்பது தான் சேக்ஸ்பியரின் சிகரமான செய்தி.
இருபது ஆண்டுகள் இடைவிடாத நாடகக் கலைப் பணியில் தளர்ந்துபோன கவிஞர் நோய்வாய்ப்பட்டார்.
அதன் காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பினார்.
1616 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள், 52 – வது வயதில், பிறந்த நாளன்று, மகாகவியின் வாழ்க்கை நாடகத் திரை வீழ்ந்தது.
உலக நாடகக் கலையின் திரை உயர்ந்த நாள் அது !

Add a Comment