”
Arul.2009/FB/#69064
ஷேக்ஸ்பியர் வரிசை 9
மகாகவி ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்
தமிழில்
கவிஞர் புவியரசு
பதிப்புரை
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
— மகாகவி பாரதியார்
அன்புடன் வாசகர்களுக்கு,
அன்று பாரதி பாடியதன் விளைவு தான் இன்று உங்கள் கைகளில் சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’.
பாரதி பாடியதோடு மட்டுமன்றி, தான் பத்திரிகையாசிரியராக இருந்த காலத்தில் ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகையில் இதே ஹாம்லெட் நாடகத்தை (கே.வெங்கட்டராமய்யர் மொழி பெயர்த்தது) தொடராக வெளிவரச் செய்தார் என ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சிரமமான ஒரு பணி.
மூலக்கருத்துச்சிதையாமல், படிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் பொருத்தமான, எளிய வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டு, தெளிந்த நடையோடு இருக்க வேண்டும்.
பாரதியார் கூட மொழிபெயர்ப்பு குறித்து பின்வருமாறு கூறுகிறார்.
“நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு.
அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது.
அப்போது தான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும்.
இல்லாது போனால், நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் “பயனில்லாமல் போகிறது” -என்கிறார்.
அந்த வகையில் சிறந்த தமிழ்ப் புலமையும், நாடகத் துறையிலே தேர்ந்த அனுபவமும் கொண்ட கவிஞர் திரு. புவியரசு அவர்கள் மொழிபெயர்ப்பில் தனது பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.
படிக்கும் போது நம்மால் அதை உணர முடிகிறது.
இதுவரை தமிழில் சேக்ஸ்பியரது படைப்புகள் பலரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன என்றாலும், அவற்றையெல்லாம் விட மொழிபெயர்ப்பிலும், நூல் அமைப்பிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நூல் இவ்வளவு சிறப்பாக வெளிவர முக்கியக் காரணம், மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கவிஞர் புவியரசு அவர்கள்தான்.
கவிஞரிடம் சேக்ஸ்பியரது நாடகங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என நான் கேட்டவுடன், அளவு கடந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும், நூல் ஆக்கத்திலும், அமைப்பிலும் மிகச் சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற அலுவல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நூல் அமைப்பின் ஒவ்வொரு விஷயத்திலும் தனது ஆலோசனைகளை வழங்கி நூலாக்கத்தில் அவர் காட்டிய ஆர்வமும், சிரத்தையும் உண்மையிலேயே என்னைப் பிரமிக்கச் செய்தது.
அவருக்கு எனது முதல் நன்றி.
அடுத்து கவிஞர் புவியரசு அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த, எங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள அருமை நண்பர் திரு. பாரதிசோமு அவர்களுக்கும், அழகிய முறையில் அட்டைப்படம் அமைத்துத் தந்த நண்பர் குரு அவர்களுக்கும், எங்களது விருப்பத்திற்கேற்றபடி மாற்றங்கள் பல செய்து, அவரும் ஆர்வம் எடுத்துக் கொண்டு சிறந்த முறையில் ஒளி அச்சுக்கோர்வை செய்து கொடுத்த நண்பர் மகேஸ்வரன் (கிராபிக் இம்ப்ரசன்) அவர்களுக்கும், சிறப்பாக அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எங்கள் நன்றி.
சேக்ஸ்பியரின் காவியங்களைத் தமிழில் சிறப்பாக வெளியிடும் முயற்சியில் முதலில் வெளிவருவது ஹாம்லெட்.
மேலும் பல அறிஞர்களின் கைவண்ணங்களில் தொடர்ந்து ஜூலியஸ் சீசர், ஒதெல்லோ, மாக்பெத், மன்னன் லியர்.., என வரிசையாக வெளிவர உள்ளன.
மகத்தான வரவேற்பை அளிப்பீர்கள் என நம்புகிறோம்.
உலகப் வாசகர்கள் இதற்குத்தங்களது புகழ் பெற்ற சேக்ஸ்பியரின் ஒப்பற்ற படைப்புகளை தமிழில் வெளியிடுவதில் கற்பகம் புத்தகாலயம் பெருமை கொள்கிறது.
ரா.நல்லதம்பி
கற்பகம் புத்தகாலயம்.

Add a Comment