”
Arul.2009/FB/#69037
மறப்பறியேன்!
வடலூர் டாக்டர் செல்வராஜ் அவர்களின் (12.5.1945-22.7.2026) மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ந்தேன்.
அவருடன் ஏற்பட்ட தொடர்பினையும் அவருடைய பணியினையும் நினைக்கும் பொழுது கண்ணீரால் கரைகின்றேன்!
அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் தொட்ட கரமும்
பட்ட பார்வையும், வடலூர் செல்வராஜ் அவர்களை எளிய நிலையிலிருந்து செம்மாந்த படிநிலைக்கு உயர்த்தியது.
வெள்ளுடை நாயகராக எந்நேரமும் மிளிர்ந்தவர்.
உத்தமர் ஓமந்தூராரின் புகழுக்கு அணிகலனாக, அருட்செல்வரின் பெருநிழலில் வடலூரிலுள்ள ஓ.பி.ஆர். நினைவுத் தொடக்கப் பள்ளியிலிருந்து வள்ளலார் குருகுலம் உயர்நிலைப் பள்ளி, பிறகு வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி என நிலை உயர்த்தி, அருட்செல்வரின் நல்லாசியுடன் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி, ஓ.பி.ஆர். கல்வியியற் கல்லூரி, வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளலார் உடற்கல்வியியற் கல்லூரி எனப் பன்மடங்கு உயர்த்தி, சிற்றூர்ப்புற மாணவர்களைப் பெருமளவில் உருவாக்கிய அறிவுத்தந்தையாகச் செல்வராஜ் விளங்கினார் என்பதை நாடறியும்.
சென்னைக்கு வரும் பொழுதெல்லாம் அப்பாவைச் சந்தித்து, தான் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தலைமை தாங்க அழைக்கும் பெருந்தகையாவார்.
”வடலூர் சன்மார்க்க நிலையங்களை நம் சன்மார்க்கக் கருவூலங்களாக வளர்க்கும் பெருந்தகை செல்வராஜ்!”
– என்றுதான் அப்பா அவரைக் கண்டதும் சொல்லும் முதல் வரியாகும்.
அப்பாவிற்குப் பிறகு, தப்பாமல் எளியேனையும் தான் நடத்தும் பள்ளி விழாக்களுக்கு அழைத்துத் தலைமை தாங்க வைத்த பெருமிதத்தையும், ஆதரவு காட்டி அரவணைத்ததையும் என்னவென்று சொல்வது!
தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாகக் கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்தநாளை முன்னிட்டுப் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நிகழ்ச்சிகளை, வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் எழுச்சி வாய்ந்த நிகழ்ச்சியாக நடத்திக் காட்டியதை யாரால் மறக்க முடியும்?
”தைப்பூசம் தவறாதீர்கள்” என்ற வள்ளலாரின் வாய்மொழியை, ஆண்டு தவறாமல் தன்னுடைய கரகரப்பான குரலில் தொலைபேசியில் அழைப்பாரே…
இனி யார் என்னை அப்படிக் கனிவுடன் அழைப்பார்கள்?
22.05.2025 அன்று டாக்டர் செல்வராஜ் அவர்களின் எண்பதாம் பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர் நா. மகாலிங்கம் கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரையில் யான் சொன்னது இன்னும் பசுமையாக உள்ளது:
”இக்கல்விக் குழுமங்களை இணைத்து வள்ளலார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மலர வேண்டும். அதற்கு அனைத்து முயற்சிகளையும் முத்து விழா நாயகர் முன்னின்று செய்ய வேண்டும்”
– என்று சொன்னேன்.
அதற்குள் அவர் முந்திச் சென்றுவிட்டாரே!
பள்ளிக் கல்லூரி மாணவக் கண்மணிகளை வள்ளலார் சிந்தனையில் திளைக்க வைத்துப் பலரை வாழ்வில் உயர்த்திய பண்பாளராக வாழ்ந்ததோடு, தான் நடத்திய சுத்த சன்மார்க்க நிலைய மடல் வாயிலாக அறிஞர்கள் பேசிய உரைகளையெல்லாம் தீந்தமிழில் தட்டச்சு செய்து, வண்ணப் படங்களுடன் வெளியிட்ட மாட்சியினை என்னவென்று பாராட்டுவது!
தூய உள்ளம், துளியும் பிறருக்கு எதிர்ப்பாக இல்லாத தன்மை, வள்ளலார் உருக்கம், ஏழைகள் மீது இரக்கம் – இவை யாவும் அவர் வாழ்வில் நிரம்பி வழிந்தன.
அண்மையில் கூட அவர் மகன் இராஜா சென்னையில் என்னைச் சந்தித்து அளவளாவிய பொழுதும், செல்வராஜ் ஐயாவைக் குறித்துத்தான் அதிகமாகப் பேசினோம்.
அருட்செல்வரின் உன்னத வழியில் சிந்தித்துச் செயல்படும் திரு சங்கர வாணவராயர் திரு செல்வராஜ் அவர்களுக்கு தகுந்த முறையில் வழிகாட்டியதையும் நினைந்து நினைந்து உருகுகிறேன்.
அவரை இழந்து வாடும் திருமதி ஜெயலட்சுமி அம்மாளுக்கும், திரு. ராஜா வெங்கடேசன் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆற்றொணாத் துயரத்துடன்
அருள்

Add a Comment