”
Arul.2009/FB/#69028
மருத்துவ மாமணி தாரா நடராசன் பிறந்த நாள்
ஒளி 15.7.1932-
நிழல் 14.8.2020
எங்கள் அமுத ஊற்றான அம்மாவின்
தொண்ணூற்று நான்காம் பிறந்த நாள்
எங்கள் தாயே!
எங்கள் நல்வாழ்வே!
ஒளியின் ஒளியே! அம்மா! அம்மா
தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா!
பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க_
நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும் அம்மா! அம்மா! அம்மா!
அன்பாய்க் கசிந்(து) உருகிய பத்தரை மாற்றுப் பொன்னொத்த மங்காப் புன்னகை சிந்தும்
எங்கள் அன்னையைப் பணிந்து வணங்குகிறோம்…
கண்ணன்,
அருள்,
பரதன்.
அருளின் கட்டுரை
மருத்துவமாமணி தாரா நடராசன் –
அம்மாவை நினைக்காத பொழுதில்லை.
நான் பிறந்து வளர்ந்து 52 ஆண்டுகள் வரை என் ஒவ்வொரு நிலையையும், நினைப்பையும் துல்லியமாக அறிந்தவர் என் அம்மா தான்.
அவருடன் இருந்த நாட்கள் என் வாழ்வின் பொற்காலங்களாகும்.
பிறந்து சில ஆண்டுகளிலேயே நினைவில் வாழும் மணிமேகலை அத்தையின் அரவணைப்பில் இருப்பதற்கு ஏற்பாடுகளைப் பெற்றோர் இருவரும் செய்து, அண்ணன் கண்ணனுடன் இலங்கை சென்று வந்ததை பலமுறை அத்தை சொல்லக் கேட்டுள்ளேன்.
வள்ளியம்மாள் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவனாகப் பயிலும்போதே, அம்மாவின் திறமான கரங்கள் வாயிலாகக் குறத்தி வேடமணிய வைத்து, பெண்ணாகவே புனைவு செய்து மாறுவேடப் போட்டியில் மேடையேற்றியும், மேடையில் மூன்று முறை “நான் ஒரு குறத்தி” என்று சொல்லித் திரும்பியதைப் பலமுறை சொல்லி மகிழ்ந்துள்ளார்.
பள்ளியில் என்ன படித்தாய் ?
எப்பாடத்தில் என்ன சந்தேகம் ?
என்று அம்மா வினவிய பொழுதுதான், வகுப்பில் என் அருகில் அமர்ந்திருந்த இரு பெண் தோழிகள் தொடர்ந்து சண்டையிட்டுப் பேசியதைச் சொல்லி, பாடம் பற்றிய குறிப்பு தெரியவில்லை என்பதை அறிந்து வருத்தப்பட்டு அம்மா எடுத்த சிறந்த முடிவு தான், சேத்துப்பட்டு கிறித்தவ ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் எங்கள் மூவரையும் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை சேர்த்ததாகும் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.
1980 ஆம் ஆண்டு அம்மா ஆறு திங்களுக்கு லிபியா நாட்டிற்குச் சென்றபொழுது, அவர்கள் அருகில் இல்லாமையால் அழுது குரல் பதிவுகள் அஞ்சல் வாயிலாக அனுப்பியது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
அடிக்கடி என் அம்மாவிடம் நான் சொல்லும் பாட்டு வரிகள்:
“எனக்கென மனக்கவலை என் தாய்க்கன்றோ
தினம் தினம் என் கவலை”
அம்மா மகப்பேறு மருத்துவர், சிறந்த நிர்வாகி, அருமையாக கார் ஓட்டுவார். கூர்ந்து ஒருமுறை பார்த்தால் விமானமே ஓட்டக்கூடிய துணிவுடையவராவார்.
ஆயிரம் பணிகள் இருந்தாலும் எங்கள் மூவரைக் குறித்து விழிப்பான பார்வையுண்டு.
செல்வத்தில் இல்லை செழிப்பு ! என் மக்கட் செல்வங்களைச் செயல் வீரர்களாக்குவதில் தான் என் உழைப்பு ! என்று எப்போதும் கூறும் என் தாய்க்கு இணையாருமில்லை !
மிதிவண்டி, விசைவண்டி, மகிழுந்து பழக வைத்தார். அம்மாவே எனக்குப் பழக்கிக்காட்டினார். தட்டிக்கொடுத்துத் தட்டச்சு வகுப்பிற்கு அனுப்பினார். நறுக்கென்று பேசியதை நன்றாக எழுதி வைத்துக்கொள்ள சுருக்கெழுத்துக் கற்கச் சொன்னார்.
அனைத்தும் பயில ஆசிரியத் தாயாக இருந்து என்னை ஆளாக்கினார். இந்தியைப் பயிலவும், இசைக்கலை படிக்கவும் விளையாட்டை விரும்பவும், என்னோடு ஓடி விளையாடிய ஒப்பற்ற தோழியாகவும், அம்மா துள்ளி வலம் வந்த நாட்களை எண்ணியெண்ணி நெகிழ்கிறேன்.
மூச்சடக்கி நீச்சல் பழக முறையாக அனுப்பி வைத்தார். தகுதியோடு வாழக் கற்றுத்தந்தார். அத்தனை வகுப்புகளுக்கும் அனுப்பிவைத்த அருந்தாயாகவே மிளிர்ந்தார்.
அம்மாவுக்கு யான் ஆங்கில இலக்கியம் விவேகாநந்தர் கல்லூரியில் படிக்க வேண்டுமென்று அம்மா விரும்பினார்கள். அதற்கு மாறாக தமிழிலக்கியம் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து படித்த போது வியந்தார்.
நான் பேசும் கூட்டங்களுக்கு “அம்மா வருகிறேன்” என்று சொன்ன பொழுதெல்லாம் தவிர்த்தேன். அச்செயல் என்னை இன்றும் உறுத்துகிறது. ஆனால், பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் நாங்கள் இருவரும் பள்ளி விழா ஒன்றில் தலைமை தாங்கி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிய நிகழ்ச்சி மறக்க முடியாத நினைவாகும்.
அம்மாவிடம் அப்பா சொன்னார் மூவரும் காதல் மணம் தான் செய்வார்கள். அதிலும் உறுதியாக அருள் தான் செய்வதற்குத் தூண்டுகோலாக அமைவான் என்றார்; ஆனால் அம்மா உறுதியாக எனக்கு அருளை நன்கு தெரியும், நான் பார்க்கும் பெண்ணைத்தான் அருள் மணமுடிப்பான் என்றார்கள். தாய் சொல்லைத் தட்டாமல் அம்மா பார்த்த வாணியை தான் மணந்தேன். அப்பொழுது அப்பா வியந்தார்.
எங்களின் வீடு தாயின் பெயர் கொண்ட, தண்ணிலவு பொழியும் தாரகை இல்லமாகும்.
தாரா அம்மா அன்பைப் பொழியும் அறிவுப் பல்கலைக்கழகமாவார்.
அருஞ்சுவை உணவு, சிறந்த உடை, பெருமிதமான உறைவிடம் என அம்மா வாரி வழங்கிய நினைவுகள் பொன்னிழைகளாக நீங்காமல் நிழலாடுகின்றன.
மணிவிளக்கான அருந்தெய்வமான அம்மாவின் 94 ஆம் பிறந்தநாளான இன்று(15.7.2026) அவர்களை நினைந்து வழிபடுகிறேன்.

Add a Comment