”
Arul.2009/FB/#69021
தமிழ்ச்சான்றோர்கள்
அ.கா.பெருமாள்
அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை
(1902-1981)
திண்டிவனம் நகரசபை சுகாதார ஆய்வாளர் ஒருவர் சங்க இலக்கியங்களுக்கு, குறிப்பாகப் புறநானூற்றுக்கு விரிவான உரை எழுதியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நடந்திருக்கிறது.
பருத்த உடம்பு; சராசரி உயரத்திற்கும் கீழ்; பத்த வெட்டிய தலைமுடி;நெற்றி முழுவதும் ஆட்கொண்ட திருநீறு; தழையத் தழையக் கட்டிய வேட்டி; தூய்மையான ஜிப்பா; இவர் தரையில் அமர்ந்துதான் எழுதுவார்; மூக்கு பேனாதான் பயன்படுத்துவார்; செந்தமிழில் உரையாடுவார்; ஆங்கிலத்திலும் பயிற்சி உடையவர்.
இந்த வருணனை அவ்வை துரைசாமிப் பிள்ளைக்குத்தான்.
பழைய தமிழ் நூல்களுக்கு விரிவான உரை எழுதியவர்களின் பட்டியல் மிக நீண்டதல்ல.
பின்னத்தூரார், உ.வே.சா., வேங்கடசாமி நாட்டார், பெருமழைப்புலவர் சோம சுந்தரனார், சி.வை. தாமோதரம் பிள்ளை எனச் சிலர் உடனே நினைவுக்கு வருவார்கள்.
இந்த வரிசையில் அவ்வை முக்கியமானவர்.
அவ்வை என்ற அடைமொழி இவர் பிறந்த ஊர் என்பது பலரும் அறியாதது.
இன்றைய விழுப்புரம் பகுதி திண்டிவனம் அருகே அவ்வையார் குப்பம் இவரது சொந்த ஊர்.
இச்சிறு ஊரில் சுந்தரம் பிள்ளை என்னும் தமிழ்ப்புலவர் இருந்தார்.
இவர் கருணீகர் குலத்தினர். இவரது மனைவி சந்திரமதி.
சுந்தரம் பிள்ளை மயிலை முருகன் மீது ஒரு சிறு நூல் இயற்றியிருக்கிறார்.
சுந்தரம் பிள்ளை சந்திரமதி தம்பதியருக்கு ஐந்து மக்கள்.
துரைசாமி கடைசியாகப் பிறந்தவர்.
(5-9-1902) துரைசாமி எழுத ஆரம்பித்தபோதே தன் சொந்த ஊரான அவ்வையார்க்குப்பம் ஊரையும் தன் பெயருக்கு முன் சேர்த்துக்கொண்டார்
. நாளடைவில் அவ்வை என்பது இவரது பெயராகிவிட்டது.
அவ்வையின் மனைவி உலகம்மாள் குடும்பத்தை முழுதுமாகக் கவனித்துக்கொண்டார்.
இந்தத் தம்பதிகளுக்கு 11 மக்கள். எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
ஒரு மகன் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில்துணைவேந்தராக இருந்தார். அவர் அவ்வை நடராசன்.
அவ்வையின் ஆரம்பப் பள்ளிப் படிப்பு உள்ளூரில் நடந்தது.
பள்ளி இறுதிப் படிப்பு திண்டிவனம் அமெரிக்கன் உயர்நிலைப் பள்ளியில்.
தொடர்ந்து ஊரிசு கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பு.
இந்தச் சமயத்தில் இவரது தந்தை இறந்தார்.
அதனால் படிப்பு பாதியில் நின்றது.
குடும்பப் பொறுப்பை இவரது அண்ணன் ஏற்றுக்கொண்டாலும் படிப்பு தொடரவில்லை.
இவர் சிறுவயதிலேயே வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை.
திண்டிவனம் நகரசபையில் சுகாதார ஆய்வாளராகப் போனார்.
ஆறு மாதத்துக்கு மேல் அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. வேலையை விட்டுவிட்டார்.
அவ்வைக்குச் சிறுவயதிலிருந்தே தமிழில் ஈடுபாடுண்டு.
இதற்கு முக்கியக் காரணம் கோவிந்தசாமிச் செட்டியாரின் நட்பு.
பள்ளிப் பருவத்திலேயே ஏடுகளைப் படித்துப் புரிந்துகொள்ளும்நுட்பத்தை வளர்த்துக்கொண்டார்.
நகரசபை வேலையை விட்டதும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் வேலைக்குப் போனார் (1924).
கரந்தையில் நூலகப் பணி; ஏட்டிலிருந்து பாடல்களைப் பெயர்த்தெழுதும் பணி.
பிற்காலத்தில் நல்ல உரையாசிரியராக ஆவதற்கு இது பயிற்சி என்று ஒரு கட்டுரையில் கூறுகிறார் அவ்வை.
நூலகத்தில் பணிபுரிந்த நான்கு ஆண்டுகளிலும் (1924 – 1928) தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டார்.
இந்தக் காலங்களில் சென்னைப் பல்கலைக்கழகம் வழி வித்துவான் தேர்வுக்கும் படித்துத் தேறினார்.
வித்துவான் படிப்பு முடிந்ததும் அரசு பள்ளியில் வேலை கிடைத்தது.
காவேரிப்பாக்கம், செய்யாறு, திருவத்திபுரம், செங்கம் எனப் பல கிராமங்களில் (1929 – 41) பணி. தலைமை ஆசிரியராகவும் ஆனார்.
அவ்வை பள்ளியில் பணிபுரிந்த நாட்களில் படிப்பு, எழுத்து என்று தீவிரமாய் இருந்தார்.
சைவ சமயம் பற்றி உரையாற்றவும் சென்றார்.
தி.மு. கழக ஆட்சியில் சபாநாயகராக இருந்த புலவர் க. கோவிந்தன் இவருடைய மாணவர்.
இந்தத் தொடர்பு கடைசிவரை நீடித்தது.
அவ்வை தன் 40 வயதிலேயே தமிழறிஞர் என்ற அடையாளத்தைப் பெற்றுவிட்டார்.
1941இல் பள்ளிக்கூட வேலையிலிருந்து விலகினார்.
திருப்பதி வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு அழைப்பின் பேரில் சென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எட்டு ஆண்டுகள். (1945 – 51).
இதன் பின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த் துறையின் தலைவரானார்.
ஓய்வுபெற்றபின் மதுரையில் வேரூன்றிக்கொண்டார்.
அவ்வை உரையாசிரியராக மட்டும் இயங்கவில்லை. உரைநடை, ஆராய்ச்சி, நாடகம், இலக்கணம், வரலாறு, சைவசித்தாந்தம் எனப் பலதுறைகளில் எழுதியவர்.
Introduction to the Study of Thiruvalluvar என்ற ஆங்கில நூலையும் எழுதியிருக்கிறார்.
மகேந்திர பல்லவனின் மத்தவிலாசப் பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இவரது புதுநெறித் தமிழ் இலக்கணம் முக்கியமான நூல்.
அவ்வை உரை எழுதிய நூல்கள் நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு, மணிமேகலை
(இறுதி 4 காதைகள்), திருவோத்தூர் தேவாரத் திரட்டுப் பதிகம்,திருவருட்பா ஆகியன.
இவை தவிர ஞானாமிர்தம், மூலமும் பழைய உரையும், சிவஞான மூலம் பழைய உரை, யசோதர காவியம் உரை, தமிழ் நாவலர் சரிதை உரை, திருமால் போற்றித் திருப்பதிக உரை, ஞான உரை போன்றவற்றையும் பதிப்பித்திருக்கிறார்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய காவியங்களின் சுருக்கம், சேர மன்னர் வரலாறு, வரலாற்றுக் கட்டுரைகள் என்பவற்றையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் போன்ற இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் நூல் வடிவில் வரவில்லை.
ஊர்ப்பெயர்கள் குறித்து எழுதிய கட்டுரைகளும் சேகரிக்கப்படவில்லை.
அவ்வையின் நூல்களில் புறநானூற்று உரை முக்கியமானது, இதன் முதல் பகுதி இவர் அண்ணாமலைப் பல்கலையில் பணிபுரிந்தபோது வெளிவந்தது (1947). இரண்டாம் பகுதி 1951இல் வந்தது. அதன் பிறகு பத்துக்கு மேல் பதிப்புகள் வந்துவிட்டன.
இந்த உரைக்குத் தனி ஆய்வு நெறி முறை உண்டு. ஒவ்வொரு பாட்டிலும் முன்னுரை, பாடியவர், பாடப்பட்டவர் வரலாறு, அடைப்புக்குறிக்குள் பழைய உரை, பாடல் வரிகளுக்கு வரிக்கு வரி விளக்கம், ஊர்ப்பெயர்க் குறிப்பு, கல்வெட்டுச் சான்றுகள் என விரிவாக இவரது உரை அமைந்துள்ளது.
உ.வே.சா.வின் புறநானூற்று ஆய்வுப் பதிப்பில் 269-400 பாடல்களுக்குப் பழைய உரை கிடைக்கவில்லை என்கிறார்.
அவ்வை நுட்பமாய் ஆராய்ந்து இப்பாடல்களுக்கு உரை எழுதியிருக்கிறார்.
உ.வே.சா.வின் பதிப்பு மாணவர்களுக்கு கடினம். அவ்வை உரை எளிமையானது.
பழைய உரையில் இல்லாத விளக்கம் இவரிடம் உண்டு.
ஒரு இடத்தில் “எனக்குக் கிடைத்த பாடபேதம் இல்லாத புறநானூற்று ஏடு என் உரை சிறப்பாக அமையக் காரணமாயிற்று” என்கிறார்.
உ.வே.சா.வின் பதிற்றுப்பத்து வெளியாகி (1904) 46 ஆண்டுகள் கழித்து அவ்வையின் உரை வந்தது.
இந்த உரைக்கு வெங்கடாசலம் பிள்ளையின் உரையும் இரண்டு ஓலைச்சுவடிகளும் உதவியதாக அவ்வை குறிப்பிடுகிறார்.
இதில் பதிகங்களுக்கு உரை எழுதவில்லை. ஆனால் இந்நூலின் பதிகம் பற்றி சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய கட்டுரையையும், பழைய பதிக உரைக் குறிப்பையும் சேர்த்திருக்கிறார். இந்த உரையில் தெ.பொ.மீ.யின் ஆங்கில முகவுரையும் உண்டு.
அவ்வை செய்யாறு பள்ளியில் வேலை பார்த்த போது ஐங்குறுநூறு நூலைப் பதிப்பிக்க முயற்சிசெய்தார். ஆனால் அது நடக்கவில்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது ஐங்குறுநூறு நூலை வெளியிட்டார்.
பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை ஒருமுறை அவ்வை துரைசாமிப் பிள்ளையிடம் நற்றிணை நூலின் ஏட்டைக் கொடுத்து உரையுடன் பதிப்பிக்கச் சொல்லியிருக்கிறார்.
அவ்வை பின்னத்தூராரின் உரையை முதலாகக் கொண்டு புதிய உரை எழுதியிருக்கிறார்.
இது வரிக்கு வரியாக அமைந்த உரை.
அவ்வை அவர்கள் சூளாமணி, யசோதரகாவியம் இரண்டிற்கும் உரை எழுதியிருக்கிறார்.
யசோதர காவியத்திற்குப் பழைய உரை இல்லை. அவ்வையே புதிய உரை தந்தார்.
வேங்கடசாமி நாட்டார் பதிப்பித்த மணிமேகலையில் இறுதி 4 காதைகளுக்கு இவர் எழுதிய உரையே உள்ளது.
இந்தக் காலங்களில் பவுத்த தத்துவங்களை விரிவாகப் படித்திருக்கிறார்.
சிவஞான போதத்திற்கு முன்பு எழுதப்பட்ட ஞானாமிர்தம் உரை கடினமானது; வாகீசமுனிவரின் உரையும் உண்டு.
இந்நூலுக்கு அவ்வை உரை எழுதினார். கருமுத்துத் தியாகராஜச் செட்டியார் உதவியால் இந்நூல் வந்தது (1951).
இவரின் சிவஞான மாபாடிய உரை மாணவர் பதிப்பாக வந்தது (1953).
இதில் மாதவ சிவஞான சுவாமிகள் பற்றிய குறிப்பு உண்டு.
அவ்வை அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது செய்த பெரும் முயற்சியில் திருவருட்பா வந்தது. ஆறு திருமுறைகள்; 5818 பக்கங்கள். பொள்ளாச்சி மகாலிங்கம் நூலின் முயற்சிக்கு உதவினார்.
அவ்வையின் சைவ இலக்கிய வரலாறு கி.பி. 7 – கி.பி. 10ஆம் நூற்றாண்டுக் காலகட்ட சைவ இலக்கியங்களை விவரிப்பது. இது மிகுந்த உழைப்பில் எழுதப்பட்டது. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட இலக்கியங்களையும் எழுதத் திட்டமிட்டிருந்தார்.
அண்ணாமலையிலிருந்து மதுரைக்குக் குடிபெயர்ந்ததால் அது நடக்கவில்லை.
தமிழ் நாவலர் சரிதை என்ற நூல் தமிழ்ப் புலவர்கள் பற்றிய பல தொன்மங்களுக்குக் காரணமானது.
இறையனார் முதலாக அந்தகக்கவி வீரராகவ முதலியார் வரையுள்ள 51 புலவர்கள் பற்றிய கதைகள் இதில் உள்ளன.
இது வித்துவான் படிப்பு பாடத்திட்டத்தில் இருந்தது.
அவ்வை இந்நூலைப் பாடம் நடத்தினார். அதற்காகச் சேகரித்த குறிப்புகளை விரித்து நூலாக்கினார்.
ஒரு வகையில் தமிழ்ப் புலவர்களின் வரலாற்று நூல் இது. இதிலுள்ள சில விஷயங்களை நம்ப முடியாவிட்டாலும் இதில் அவ்வையின் உழைப்பு அதிகம்.
அவ்வையின் உரை நூல்களில் பொதுத்தன்மை உண்டு.
ஒருபாடலுக்கு உரை கூறுமுன் சூழலை விளக்குவதும் உண்டு (புறம் எண் 212). சிவஞானபோத உரையில் மெய்கண்டாரின் தந்தை அச்சுதக்களப்பாளன் என்று கூறும் பழைய கருத்தை மறுக்கிறார்; தன் கருத்துக்குச் சான்று தருகிறார்.
அவ்வை சிறந்த பேச்சாளர்.
வட ஆர்க்காடு திருவத்திபுரத்தில் அவ்வைத் தமிழகம் என்ற அமைப்பை நிறுவி அதில் தொடர் சொற்பொழிவாற்றினார்.
1938இல் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். இதனால் பல இடங்களுக்குப் பணிமாறிச் செல்ல வேண்டி வந்தது.
கருமுத்து தியாகராஜச் செட்டியாரின் மனைவி ராதா தியாகராஜன் ஔவைக்கு மதுரையில் பெரும் பாராட்டு விழா எடுத்திருக்கிறார். (1964)
உரைவேந்தர் என்னும் பட்டமும்; தங்கப் பதக்கமும் பெற்றார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவரை தமிழ்ப் பேரவைச் செம்மல் (1980) என அழைத்தது.
தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டியது.
ஐந்தாம் உலகத் தமிழர் மாநாட்டில் பொற்கிழி பெற்றார் (1981).
பாரதிதாசன் இவரை
நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞர்
மேலுக்குச் சொல்லவில்லை; வேர்ப் பலா’
தோலுக்குள் உள்ள சுவை கொடுக்கும் உண்மை உழைப்பால்
அள்ளக்குறையாத ஆறு
என்கிறார்.
அவ்வை 3-4-1981இல் அமரரானார். அவரது சமாதி மதுரையில் உள்ளது

Add a Comment