”
Arul.2009/FB/#69014
மொழிபெயர்ப்பால் உயர்ந்த கீர்த்தி!
அறிவிற் சிறந்த மொழியாக்கத் தொண்டு செய்தவரும், பழுத்த பழமாய் 95 அகவை நிரம்பியவருமான, கோவையில் வாழ்ந்த எழுத்தாளர் கவிஞர் புவியரசு (3.11.1931 – 30.6.2026) அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது.
முதுமை என்பது காலம் செல்லச் செல்லக் கனிந்து பழுத்து, இறுதியில் காம்பிலிருந்து உதிரச் செய்து விடுகிறது.
அந்த வகையில் தான், எழுத்தாளர்
சு. ஜெகந்நாதன் என்கிற கவிஞர் புவியரசு மறைந்தார்.
திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேராதீனத்தின் அருட்தொண்டராகவும்,
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியின் தலைமாணாக்கராகவும்
அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்தவர்.
‘கையொப்பம்’ (கவிதை – 2006), ‘புரட்சிக்காரன்’ (மொழிபெயர்ப்பு – 2009) ஆகிய நூல்களுக்காக இரண்டு முறை சாகித்திய அகாதெமி விருதுகளைப் பெற்ற செம்மலாவார்.
கவிஞரின் கையெழுத்து முத்து முத்தாக இருப்பதோடு, மொழிபெயர்ப்பு செய்வதில் வாசகர்களுக்குப் புரியும்படியாக வார்த்தைகளையும், கருத்துகளையும் அழகுபடுத்தி எழுதும் திறம் வாய்ந்தவர் என்பது பலதரப்பட்ட எழுத்தாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.
தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டத்தின் வாயிலாக 3.5.2023 அன்று வழங்கப்பட்ட, கோவை கணபதி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் அவரைச் சந்தித்த பொழுது, தாத்தாவைப் பற்றியும் அப்பாவைக் குறித்தும் அவர் பெருமிதமாகப் பேசியதை நினைந்து உருகுகிறேன்.
அப்பொழுது அவரிடம், “என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்காக, 1994 ஆம் ஆண்டிலேயே தாங்கள் தமிழில் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மேற்கோளாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்” என்று தெரிவித்த பொழுது மகிழ்ந்து புன்முறுவல் பூத்தார்.
பள்ளி நாட்களில் படித்த ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் ஆங்கிலப் புதினங்களைத் தமிழாக்கம் செய்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1952 ஆம் ஆண்டு முதல் எண்பதுக்கும் மேற்பட்ட சிறந்த படைப்புகளைப் படைத்த பெருமைக்குரியவர்.
உலகம் போற்றும் கலீல் ஜிப்ரான்
(ஞானக் களஞ்சியம்)
உமர் கய்யாம், தஸ்தயேவ்ஸ்கி
(கரம சோவ் சகோதரர்கள்) இரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஓஷோ ஆகியோரின் படைப்புகளையும்
இந்திய பிறமொழிக் கவிதைகளை கவிதைக்கென்ன வேலி என்ற தலைப்பில் எளிய தமிழில் அமுத ஊற்றாக மொழிபெயர்த்ததையும்
அதே நிலா என்ற தலைப்பில்
சங்க இலக்கியக் கதைகளை எழுதியவைகளை யார் மறக்க முடியும்?
கவிஞர் புவியரசு எழுதிய ‘முக்கூடல்’ எனும் நூல், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களின் புதுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றுள்ளது.
நிறை வாழ்வு வாழ்ந்தவரின் பொன்னுடல் மறைந்தாலும், புகழ் பூத்த அவரின் பல நூல்கள் நாம் அனைவரும்
படித்து மகிழத்தக்க வகையில் என்றென்றும் நிலைத்து நின்று அவரது நினைவைப் போற்றும்.
வானம்பாடிகளின் தாய்ப்பறவையான எழுத்தாளர் புவியரசு அவர்களை இழந்து வாடும் மகள்களான திருமதி மலர்விழி, திருமதி பாக்கியலட்சுமி மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Add a Comment