”
Arul.2009/FB/#68974
கேரளத்தமிழ்
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கச் செய்தி இலக்கிய மாதஇதழ்
மே மாத இதழ் (1.5.26-31.5.26)
பக்கம் எண்கள் : 15,16 ,21.
கந்தகக் கவிஞரின் நெருப்புக் குரல்
முனைவர் ந.அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
சென்ற இதழ் தொடர்ச்சி
பதினான்கு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமும் இவர் கவிதைகளில் உள்ளன. நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து முதலியவற்றையும் எழுதியிருக்கிறார். சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றை அகவலிலும், இசைப்பாவிலும் பாடிய முதற்பாவலராக பாவேந்தர் விளங்குகிறார். இவ்வாறு தமிழை முறையாகப் பயின்று, மரபு தவறாது, காலத்திற்கேற்ற புதுமைகளைச் சேர்த்துப் பாடிய தமிழ்க் கவிஞராகப் பாவேந்தர் திகழ்கிறார்.
தமிழ் வளர்ச்சியில் தமக்கெனத் தனி இடத்தைப் பெற்றவர் பாரதிதாசன் என்பது உலகறிந்த உண்மை. இந்திய விடுதலை இயக்க வளர்ச்சியிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது என்பது பலர் அறியாத உண்மை. எண்ணம், செயல், உணவு, உடை, நடை ஆகிய அனைத்திலும் தமிழினம் ஒன்றுபட்டு முன்னேற வேண்டுமெனும் உயிர்த்துடிப்புக் கொண்டவர் பாவேந்தர்.
தமிழர்களெல்லாம் ஒன்றுபட்டு நின்றால் கலையிலும், தொழிலிலும், அறிவிலும், ஆற்றலிலும் ஓங்கி வளர்ந்து உலக மக்களிடையே உயர்ந்த இடத்தைப் பெற வழி ஏற்படும். தமிழர்கள் இவ்வாறு உயர்ந்தனர் என்ற நிலை ஏற்படுவது எந்த நாளோ என்று ஏங்கிய உள்ளம் பாவேந்தருடையது.
தமிழ் தமிழருடைய நலனுக்காகத் தமிழில் பாடிய பெருந்தமிழ்க் கவிஞராகப் பாவேந்தர் பாரதிதாசன் திகழ்கிறார். பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாருக்கு வழங்கியவர், பொதுவுடைமைக் கொள்கைகளைத் திசையெட்டும் பரப்பியவர், சாதிப் போக்குகளைச் சாய்த்தவர் மதக் கொடுமைகளை மாய்த்தவர், தொழிலாளர் துயர் துடைத்தவர், ஒடுங்கப்போர்ப் பாட்டுப் பாடியவர் எனப் பாவேந்தரைப் பல்வகையாகப் பாராட்டப்பட்டாலும், நீரில் அழுத்தினும் மேலெழுந்தே நிற்கும் பந்து போல, அவருடைய அனைத்துக் கருத்துக்களிலும் தமிழுணர்வே மேலோங்கி நிற்கிறது எனக் கூறுவது மிகையாகாது.
இந்தியாவிலேயே மதிப்பிற்குரிய மிக உயர்ந்த இலக்கியப் பரிசு ஞானபீடப்பரிசு. தமிழ்நாட்டில் முதன் முதலாக இவருக்குத்தான் அப்பரிசு பரிந்துரைக்கப்பட்டது. பரிந்துரைத்தவர்கள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், காரைக்குடி கம்பன் அடிப் பொடி சா கணேசன், பன்பொழிப் புலவர் தெ பொ. மீனாட்சி சுந்தரம் ஆகியோர்.
ஆனால் அப்பரிசு முடிவு வெளியாவதற்கு முன்பே பாரதிதாசன் இறந்துவிட்டார். அப்பரிசு வாழும் கவிஞர்களுக்கு வழங்கும் பரிசு. பின்னர் அது மலையாளக் கவிஞர் சங்கர் குரூப்புக்கு 1965 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது என்று கவிஞர் முருகு சுந்தரம் டெல்லி தமிழ் சங்க கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். என் பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமியைக் குறித்து தனிக் கவிதை (“உரைவேந்தை வாயார் வாழ்த்தாத வாய்’) யாத்துள்ளதை தமிழ் கூறு நல்லுலகம் நன்கறியும்.
என் பெற்றோர் இருவரையும் நன்கறிந்த கவிஞர், என் தாயார் மருத்துவர் தாரா நடராசன் குழந்தைகள் நோயியற்பட்ட மேற்படிப்பு மருத்துவம் பயின்றுக்கொண்டிருந்தபோது, பெரிதும் மகிழ்ச்சியடைந்த்தோடு “நண்டும் நத்தையுமாக நம் நாட்டுக் குழந்தைகள் நலிந்து, மெலிந்து நோஞ்சான்களாக இருக்கிறார்களே” என்று அவர் வருந்திக் கூறியதை தாயார் பல நாட்கள் சொல்லியுள்ளார்.
உலகக் காப்பியங்களில் தனித்தொளிரும் ஒரே ஒரு காப்பியம் “குடும்ப விளக்கு” மூன்று தலைமுறைக் கதைத் தொடர் நிகழ்ச்சி. இளையோர் காதல் மனைவாழ்வில் தொடங்கி முதியோர் காதலில் முதிர்ச்சியுற்று முடிகிறது. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பதே உட்கருத்தாகும்.
பாரதிதாசனின் குடும்ப விளக்கு நூல் முழுதும் மனப்பாடம் செய்து கேட்போர் மெய் சிலிர்க்குமாறு மேடையில் உரை நிகழ்த்தி இருக்கிறார் கவிஞர் திருலோக சீதாராம் புதுச்சேரி சென்று வாத்தியார் வீடு என்று கேட்டால் பாரதிதாசன் வீட்டில் தான் கொண்டு போய் விடுவார் ரிக்ஷாக்காரர் என்று தனது நேர்காணல் கட்டுரையில் ஒ.கே. செட்டியார் குறிப்பிடுவார்.
பாரதிக்கும் பாவேந்தருக்கும் பல ஒற்றுமை வேற்றுமைகளைக் காணலாம். பாரதியார் தமிழிடம் தனி விருப்புக் கொண்டாலும் வடமொழியிலும் ஈடுபாடு கொண்டவர். பாவேந்தரோ தமிழும், திராவிட மொழிகளிடமும் மட்டுமே தனியன்பு கொண்டவர். தமிழ் நாட்டின் தனியன்பும் பாரத நாட்டின் ஒருமைப்பாட்டின் பேரார்வம் கொண்டவர் பாரதியார்.
பாரதிதாசனோ தமிழ் பெரு நிலத்தின் மீது பற்றுக் கொண்டவர். மூட நம்பிக்கை வேறு, சமய- மெய்ப்பொருள் நம்பிக்கை வேறு என்னும் பாகுபாடு பாரதியாரிடம் காணப்படுகிறது. பாரதிதாசனிடம் இத்தகைய பாகுபாடு இல்லை. பாரதியார் முதல் இந்திய மறுமலர்ச்சிக் கவிஞர். பாரதிதாசன் முதல் திராவிட மறுமலர்ச்சிக் கவிஞர்.
பாரதி தெய்வ சக்தியைப் பெரிதும் பாடியவர்.
பாரதிதாசன் மனித சக்தியைப் பெரிதும் பாடியவர். பாரதிக்குத் தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள், பாரதிதாசனுக்குத் திராவிடமும் பகுத்தறிவும் இரு கண்கள். பாரதியார் தேசிய இயக்கத்தின் பரிசாகவும், பாரதிதாசன் திராவிட இயக்கத்தின் கொடையாகவும் கொண்டாடப்படுபவர்கள்..
பிரெஞ்சு புரட்சிக்கு விக்டர் யூகோவும் ருசிய புரட்சிக்கு மாயரி கோவாஸ்கியும் எப்படி ஈட்டி முனைகளாக விளங்கினார்களோ, அது போல பாரதிதாசன் திராவிட இயக்கப் புரட்சிக்கு ஈட்டி முனையாக விளங்கினார். 1942 இல் நடைபெற்ற ஆகஸ்ட் போராட்டத்தில் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்களுள் ஒருவரான ஈரோடு கோவிந்தசாமி என்பார் பாரதிதாசன் பாடல்களை இசையோடு பாடியதாகவும் அதனை மற்ற சிறைக் கைதிகள் கேட்டு மகிழ்ந்ததாகவும் ஒரு செய்தி உண்டு.
1942 இல் ஒளவையார் நாடகத்தில் பாவேந்தரின் பாடல் வரியான…
இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பம் தரும்படி வாய்த்த நல்லமுது
பயன்படுத்தியதையும், 1944இல் ஈரோட்டில் பில்ஹெணன் நாடகத்தில் பாவேந்தரின் அருமையான தேன் சொட்டும் கவிதையான
“நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை”
நாடகத்தில் புகழ் பரப்பியதையும், 1964 இல் பாவேந்தர் புதுவையில் அடக்கம் செய்யப்பட்ட போது அவரின் துன்பம் நேர்கையில், உலகப்பன் பாடல்கள் உருக்கமாகப் பாடப்பட்டது. ஆக, முன்னே சொன்ன மூன்று நிகழ்வுகளையும் பாடிப் பரவிய பாடிப் பரவிய பெரும்புகழ் நாடகச் செம்மல் ஔவை தி.க. சண்முகத்தைச் சாரும். பாரதிதாசன் இயல்பாகவே சிறந்த நகைச்சுவையாளர். மேடைகளில் பேசுகின்ற பொழுது நகைச்சுவைபடப் பேசுவாராம்.
சிரிப்பின் பல்வேறு நிலைகளைக் கூர்ந்து அறிந்து நாற்பத்துமூன்று அடைமொழிகளை சிரிப்பில் உள்ளது என எழுதியிருக்கிறார்.
பாரதிதாசன் எழுதிய மகாகவி பாரதியார் திரைப்பட உரையாடல் ஏடுகளை தேடி எடுத்து ஆய்ந்து அறிந்து வரலாற்றுப் பெருநூலாக அவரின் மகன் மன்னர் மன்னன் ”பாட்டுப் பறவைகள்” என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றினை ”பாட்டுக்குள் பாரதிதாசன் என்ற தலைப்பில் பாவேந்தரின் பெயரன் கோ பாரதி நாடக நூலாக எழுதி 2001 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29 தேதியை உலகத் தமிழ் நாள் என்று நியூயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழு பிரகடனம் செய்தது.
1971 ஆம் ஆண்டில் புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான *வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்று தொடங்கும் பாரதிதாசன் பாடல் ஒலி வடிவம் பெற்றது பலராலும் வரவேற்கப் பெற்றது.
மெரினா கடற்கரையில் பாவேந்தருக்கு திருவுருவச் சிலையும், திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியும் தொடங்கி நடைபெறுவது அவரின் பெயர் எந்நாளும் நிலைக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு பாவேந்தரின் படைப்புகளை நாட்டுடமையாக்கி பாவேந்தர் குடும்பத்தாருக்கு பரிவு நிதி அளிக்கப்பட்டது.
பாவேந்தர் பிறந்த வீட்டை புதுவை அரசே விலைக்கு வாங்கி நினைவுச் சின்னமாக்கி நூல் நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறது. பாவேந்தரின் பிறந்த நாளினை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்க் கவிஞர் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றது. புரட்சிக் கவிஞரைக் கற்பதும், கற்பிப்பதும், ஆய்வதும், தமிழரின் அன்றாட வழக்கங்களில் ஒன்றாகிவிட்ட காலத்திற்குச் சான்றாக அவரைக் குறித்து தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் 500க்கு மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் என்பது வரலாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதிப்புச் செம்மல் இளவழகனாரின் அயராத உழைப்பாலும் பெரு முயற்சியாலும் 7921 பக்கங்கள் கொண்ட 25 தொகுதிகளாக “பாவேந்தம்” (காப்பிய இலக்கியம் 9, கதைப் பாடல்கள் 13, கவிதை நாடகங்கள் 7, உரைநடை நாடக இலக்கியம் 44, கதை இலக்கியம் 46, திரை இலக்கியம் 9, பாட்டு இலக்கியம் 11, மடல் இலக்கியம் 1, கட்டுரை இலக்கியம் 14, நாட்டுப் பாடல் இலக்கியம் 6) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
கவிஞராய், நாடகராய், சொற்பொழிவாளராய் இதழாசிரியராய்ப் பன்முகங் கொண்டு ஒருமுக நோக்கில் உறங்காதுழைத்த அப்பேரறிவாற்றலை ஆயும் போது, நமக்குப் பல பொன்னும், மணியும், வைரமும், முத்தும் புதையல் போல கிடைக்கின்றன.
“தமிழ்நாட்டின் தன்மான எழுச்சிக்கும், தமிழர்கள் வாழ்வின் விழிப்புக்கும் திருப்பள்ளி எழுச்சி பாடிய வீர விளக்காகவும் புரட்சிக் கவிஞர் தான் விளங்கினார் புரட்சிக்கவிஞர்
அகன்ற நெற்றியும் அடர்ந்த மீசையும் செம்மாந்த நோக்கும் படைத்த அரிமாவைப் போலவும் செந்தமிழ்ப் பாட்டியரைப் போலவும் இருப்பார்” என்று என் பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் 26.12.1975 ஆம் ஆண்டு கோவையில் புரட்சிக்கவிஞர் திருவுருவப் படத்தினை திறந்தவுடன் பேசிய வரிகளாகும்.

Add a Comment