”
Arul.2009/FB/#68973
கேரளத்தமிழ்
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கச் செய்தி இலக்கிய மாதஇதழ்
ஏப்ரல் மாத இதழ் (1.4.26-30.4.26)
பக்கம் எண்கள் : 15,16 .
கந்தகக் கவிஞரின் நெருப்புக் குரல்
முனைவர் ந.அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
என்னைப் போன்றவர்களெல்லாம் இளம் பருவத்தில் பள்ளியில் படிக்கத் தொடங்கிய போதே மொழி, இனம், நாடு, புதுமை வேட்கை என்ற பல இயல்புகளை அறிந்துகொள்வதற்கும் அதனால் உணர்ச்சிப் பொங்குகின்ற எழுச்சி இளைஞர்களாக மாறியதற்குக் காரணம் புரட்சிக் கவிஞரின் நெருப்பு வரிகள் தான்.
தமிழியக்கம் முழுவதையும் மனனமாகச் சொல்லுகின்ற ஒரு பழக்கத்தையே என் நண்பர்கள் வைத்துக் கொண்டார்கள்.
நாங்கள் ஒருவருக்கொருவர் பிரியும் போதெல்லாம் நினைவு வரிகளாக
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என்று தான் பேசி மகிழ்வோம்.
தேசியத் திலகம் பாரதியாரின் பாசறையில் வளர்ந்தவர் தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
பாரதியாரும், பாரதிதாசனும் ஒரே நிலையில் வளர்ந்தாலும் தன்மானத் தழலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டவர் புரட்சிக் கவிஞர், அந்த தழலில் புடம் போட்ட தங்கமாகத்தான் அவர் ஒளிர்ந்தார் மிளிர்ந்தார்.
பாரதியார் என்னுடைய வழிகாட்டி என்பதை வாழ்வில் மறக்கமாட்டேன் என்று கூறியவர் தான் சாதி ஒழிப்பு, வடமொழி எதிர்ப்பு இவற்றை வேரோடு அறுத்தெரிய வேண்டும் என்று வேங்கையைப் போல் சீறினார்.
அண்ணல் காந்தியடிகளையும், நேரு பெருமகனாரையும் ஒரு வகையில் பாரதியார், பாரதிதாசனுக்கு ஒப்பிடலாம்.
அண்ணல் காந்தியடிகள் சத்தியமே கடவுள் என்றார்.
நேரு கடவுளே இல்லை என்றார்.
அண்ணல் காந்தியடிகள் கதர் அணிவது பொருளாதாரத்தை வளர்க்கும் என்றார்.
கதர் உடுப்பதனால் காசு செலவாகுமே தவிர பொருளாதாரம் பாழாகும் என்றார் நேரு.
வேளாண்மை வளர்க்க வேண்டும் என்றார் காந்தி.
பெருந்தொழில்கள் வளர வேண்டும் என்றார் நேரு.
பழமை பாராட்டத்தக்கது என்றார் காந்தி
பழமையைப் புதுக்க வேண்டும் என்றார் நேரு.
அன்றாடம் பிரார்த்தனைக் கூட்டத்தில் தான் நான் இருப்பேன் என்றார் காந்தி,
பிரார்த்தனைக் கூட்டத்திலேயே அவர் வாழ்வு முடிந்தது.
ஒரு நாளும் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வராதவர் நேரு.
ஆனால் காந்தியடிகள் தனக்குக் கால் கை பிடித்த நந்தாவையோ, ஆசார்ய கிருபளானியையோ அடிக்கடி ஆலோசனைக்கு அழைக்கும் வல்லபாய் பட்டேலையோ தனக்கு வாரிசாகக் கூறவில்லை.
நேருவைத்தான் வாரிசு என்றார்.
நேருவும் காந்தியடிகளைத்தான் நிகரற்ற தலைவர் என்றார்.
இந்த அடிப்படையில் பாரதியாரையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டால் காந்தியடிகளை நீங்கள் வெறுக்க மாட்டீர்கள்.
நேரு வாழ்க என்று சொல்ல மறுக்கமாட்டீர்கள்.
பாரதியார் கருத்துக்கள் அந்த நாளுக்கு வேண்டியவை.
சீர்திருத்த விதைகளை சில இடங்களில் மட்டுமே தூவினார்.
இதிகாசங்களைப் போற்றினார் .
பாவேந்தரோ நெருப்பு தீவட்டியாக சுழன்று பழமை பதுங்கியிருக்கிற இடங்களையெல்லாம் சுட்டுப் பொசுக்கினார்.
இந்த வகையில் புரட்சிக் கவிஞர் இளைஞர்கள் மனத்தை ஈர்த்ததோடு இயக்கத்தின் போர்வாளாக தாடியில்லாத பெரியாராக தழல் வரிகளைக் கொட்டிய தன்மானப் பேரொளியாக விளங்கினார்.
உலகில், சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்.
சிலர் கவிஞர்களாக ஆக்கப்படுகிறார்கள்.
சிலர் கவிஞர்களாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் முதல்வகையைச் சேர்ந்தவராகவும் கவிஞராகவே பிறந்தவரும் ஆவார்.
பாரதியார் என்னும் வேரிலிருந்து புறப்பட்ட ஆலமரமாக விளங்கியவர் பாரதிதாசன்.
ஆனால் பாரதிதாசன் தமது தனிப்பட்ட ஆளுமை காரணமாக வித்தியாசமாக கிளை விரித்ததோடு தாமே தமது எண்ணற்ற விழுதுகளையும் தமிழ் மண்ணில் ஊன்றி மாபெரும் கருத்துப்புரட்சிக்குக் கால் கோள் இட்டவர்.
அவரது புகழ் வட்டம் தேசிய இயக்கத்தில் தொடங்கி, சுயமரியாதை இயக்கத்தில் மலர்ந்து, பொதுவுடமை இயக்கத்திற்கு உரமாகி, நாளுக்கு நாள் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் மனிதம் பாடும், மாநிலமெங்கும் தகத்தகாயமாய்ச் சுடர் விட்டு, விரிந்து, பரந்து, உயர்ந்து, வளர்ந்து, சிறகு விரித்தது.
அடக்கப்பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் சுரண்டப் பட்டவர்களையும் பாடுபொருளாக மையப்படுத்தியவர்களுள் பாரதிதாசன் மூத்தவர் முன்னோடியானவர்.
பாரதிதாசன் பரம்பரை என, ஒரு தலைமுறையே அவரை அடியொற்றி உருவானது பின்னாளில் தலையெடுத்த வானம்பாடிகளுக்கும் அவரே முதலெழுத்தும் தலையெழுத்தும் ஆனார்.
“அதிர்ந்ததிந்தப்பூமி பாவேந்தர் நடையில் என்றால், அவரது அழகு தமிழ் நடையையும் சேர்த்தே சொன்னேன்”
எனக் கவியரசு கண்ணதாசன் வியந்தது போல், ஆண்மையின் வடிவமாய் நிற்பவை பாவேந்தரின் எழுத்துக்கள்.
புரட்சிக்கவிஞர் தமது 11ஆம் வயதிலேயே கவிதை இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.
அவர் தமிழ் இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும் முறையாகவும், முழுமையாகவும் இலக்கண – இலக்கியப் பேராசிரியர்களிடம் கற்றுத் தேர்ந்தவர்.
பல ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாரதிதாசன் தமிழைப் பிழையில்லாமல் எழுதவேண்டும் என்பதில் கண்டிப்பானவர்.
தாம் உயிருடன் இருந்தவரை தமது நூல்களின் பிழைகளைக் கவிஞரே திருத்துவாராம்.
தமிழில் பிழையாக எழுதுபவரை எள்ளி நகையாடி எழுதிய குறிப்பு “எனக்கு வந்த அஞ்சல் அட்டையில் இருந்தன பத்து வரிகள், அதில் இருந்தன நூறு பிழைகள்” என்று சுட்டிக்காட்டுவார்.
பாரதிதாசனார் தமிழின் நரம்பறிந்து கற்றவர்.
தமிழிலக்கணத்தை இன்பமாகக் கற்பித்தவர் என பேராசிரியர் தெ.பொ.மீ குறிப்பிடுவது உண்மையாகும்.
மணிமேகலை, பெருங்கதைக்குப் பிறகு முற்றிலும் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட நூல் பாவேந்தரின் “இருண்ட வீடு” என்னும் சிறு காப்பியமாகும்.
தமிழிலக்கியத்திலேயே இணைக்குறள் ஆசிரியப்பாவில் இருப்பது கவிஞருடைய “காதலா கடமையா?” எனும் நூல்.
நளவெண்பாவிற்குப் பிறகு சிறந்த வெண்பா நூலாகத் தென்படுவது பாவேந்தரின் “மணிமேகலை வெண்பா”.
எண்சீர் விருத்தத்தில் “பாண்டியன் பரிசும்”, “கண்ணகி புரட்சிக் காப்பியமும்” அமைந்துள்ளன.
“அழகின் சிரிப்பு” அறுசீர் விருத்தத்தில் ஆன நூலாகத் திகழ்கிறது.
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்திற்குப் பிறகு இயற்றப்பட்ட ஒரே நூலாக “ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது” காணப்படுகிறது.
@பாவும் பாவினமும் சிந்தும் கலந்து அவருடைய “தமிழச்சியின் கத்தி” எழுதப்பட்டுள்ளது.
அடுத்த இதழில் தொடரும்…

Add a Comment