POST: 2026-05-07T07:25:56+05:30

”
Arul.2009/FB/#68958

தமிழ்த் தொண்டர்த் தொகை

முனைவர் தி அமலோர்

பக்கம் எண் : 236,237,238 .

58 ஔவை துரைசாமி பிள்ளை

ஒளவை துரைசாமிப் பிள்ளை புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம், திருவருட்பா ஆகியவற்றுக்கு உரை எழுதினார்.

இவர் சைவ இலக்கிய வரலாறு, ஔவைத் தமிழ், சேரமன்னர் வரலாறு, சிவஞான போதம் செம்பொருள், தமிழ்த் தாமரை, பெருந்தகைப் பண்டிதர், பரணர், மதுரைக் குமரனார் உள்ளிட்ட முப்பத்து நான்கு நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார்.

தோற்றம் :

ஒளவை துரைசாமிப் பிள்ளை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ஔவையார் குப்பம் என்னும் கிராமத்தில் 1902-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ல் பிறந்தார்.

தந்தையார் பெயர் சுந்தரம் பிள்ளை. தாயார் பெயர் சந்திரமதி அம்மையார்.

கல்வியும் பணியும் :

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவர் தமிழவேள் உமா மகேஸ்வரனார் ஆவார்.

அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை மற்றும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆகியோர்.

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் பயில வேண்டும் என்னும் விருப்பத்துடன் ஒளவை துரைசாமிப் பிள்ளை 1925-ல் தனது 22-வது வயதில் தஞ்சை நோக்கிப் புறப்பட்டார்.

உமா மகேஸ்வரனார் ஔவை துரைசாமிப் பிள்ளையைப் பார்த்தவுடன் அகமகிழ்ந்து இவருக்குத் தமிழ்ச்சங்கப் பள்ளியில் ஆசிரியப் பணி, சங்க நூலகப் பணி இவற்றோடு தொல்காப்பியம் தெய்வச்சிலையார் ஓலைச்சுவடிகளைப் படித்துப் பார்த்து எழுதும் முக்கியப் பணியையும் கொடுத்தார்.

பின்னர் இவர் 1929-ல் வட ஆற்காடு மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

காவேரிப்பாக்கம் செய்யாறு, போளூர், திருவத்திபுரம், திருவோத்தூர், செங்கம் உள்ளிட்ட பல ஊர்களில் தமிழாசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

தமிழ்த் தொண்டு
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்காக இவர் எழுதிய முதல் நூல் ‘சீவகசிந்தாமணி சுருக்கம்’.

அதற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து பல நூல்களை அப்பதிப்பகத்திற்காக எழுதினார்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் கழக ஆராய்ச்சித் துறையில் பணியாற்றியபோது சைவ சமய வரலாறு, ஞானாமிர்தம் உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார்.

காப்பியங்களுக்கும் தொகை நூல்களுக்கும் செம்மையான உரை எழுதி முடித்தார்.

புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம், திருவருட்பா ஆகியவற்றுக்கு உரை எழுதினார்.

மேலும் இவர் சைவ இலக்கிய வரலாறு, ஔவைத் தமிழ், சேரமன்னர் வரலாறு, சிவஞான போதம் செம்பொருள், தமிழ்த் தாமரை, பெருந்தகைப் பண்டிதர், பாணர், மதுரைக் குமரனார் உள்ளிட்ட முப்பத்து நான்கு நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளார்.

பட்டங்களும் சிறப்புகளும் :

ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்களுக்கு மணிவிழா நடைபெற்றபோது (1964) தமிழவேள் பி.டி.ராஜன் மற்றும் பேராசிரியர் வெள்ளை வாரணனார் (75) ஆகியோர் இவருக்கு ‘உரைவேந்தர்’ என்னும் பட்டம் வழங்கினர்.

1980-ல் அன்றைய தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் அன்றைய மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வ.சுப. மாணிக்கனார் (77) முன்னிலையில் ஒளவை துரைசாமிப் பிள்ளைக்குத் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

மதுரையில் 1981-ல் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் நாட்டில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இவருக்கு ரூ.10,000 பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார்.

ஔவை துரைசாமிப் பிள்ளையின் மகன் தான் ஔவை நடராசன் (100).

ஒளவை நடராசன் மகனார் முனைவர் ந.அருள் தற்போது தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநராக உள்ளார்.

மறைவு :

தமிழுக்கும் சைவத்துக்கும் இறுதி மூச்சுவரை தொண்டு செய்த ஔவை துரைசாமிப் பிள்ளை 1981-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ல் தம் 79-ஆம் அகவையில் பொன்னுடம்பு நீத்துப் புகழுடம்பு எய்தினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *