POST: 2026-05-05T10:27:08+05:30

”
Arul.2009/FB/#68956

ஔவையின் செந்தமிழ்ப் புதையல்
ஆக்கம்… ஔவை அருள்

பக்கம் எண் : 5,6,7.

வெளியீடு :
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்

மகாகவி பாரதியாரின் 144 ஆம் பிறந்தநாள் விழாவில்
21. 2 .2026 அன்று வெளியிடப்பட்டது

அச்சிடோர் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ,
41 – பி , சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ,
அம்பத்தூர் , சென்னை – 600 050 .

424 பக்கங்கள்

ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்,
சென்னை – 600 018, 96000 64311.

நுழைவாயில் ….

எங்கள் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே !

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும் பொழில் பசுமையும் வாய்ந்து இலங்கக்கூடிய தமிழ்நாட்டு இலக்கிய மேடைகளில் சொற்களை நயம்படு கனிகளாக்கி, சிந்தனைகளை நீரோடைகளாக்கி, மொழி நடையைத் தென்றலாக்கி, பைந்தமிழைப் பொலிவோடு நடமாடவிட்டு மக்களை மகிழ்வித்த சொல்வேந்தர் தான் நினைவில் வாழும் பத்மஸ்ரீ ஒளவை நடராசன் ஆவார்.

உரைவேந்தரின் உரை வளத்தை உளத்தால் உண்டு, வாயால் வகைக்கூட்டிச் சுவையாய், நகைச்சுவையாய், சொற்சுவை, பொருட்சுவை, உவமைச்சுவை பொங்கிட, தரணி முழுவதும் சொல்லேருழவராய் உலா வந்த எந்தையார் குறித்துப்பலர் அவர் எழுதவில்லை – எழுதவில்லை என்று குறைப்படுவார்கள்.

ஆனால் அவர் இலக்கிய உலகில் பல அறிஞர்களுக்கும், கவிஞர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், வெளிநாட்டுத் தமிழர்களுக்கும், பற்பல விழா மலர்களுக்கும் வண்ண வண்ண மாலைகளாகத் தன்னுடைய எண்ணக் குவியல்களை முன்னுரைகளாகவும், வாழ்த்துரையாகவும், பாராட்டுரையாகவும், மரபு வழிக்கவி மாலைகளாகவும் அணி செய்திருக்கும் பாங்கினைப் பலர் அறியாமலேயே போய்விட்டார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

அப்பா எழுதிய முன்னுரைகளே ஆயிரக்கணக்கில் உள்ளன.

அவர் மறைந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அவரின் பல நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எங்களுக்குப் புலனத்திலோ, அஞ்சலிலோ அப்பா எழுதிய வாழ்த்துரைகளின் படிகளை அனுப்பிய வண்ணமே உள்ளனர்.

எனக்குத் தெரிந்து முகநூலில் 2010 ஆம் ஆண்டிலேயே நாள்தோறும் தன்னுடைய ஆழமான செறிவார்ந்ந கருத்துகளை எழுத்து மாலைகளாகத் தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதிக்கும் முதல் அறிஞராக நாள்தோறும் பதிவிட்ட சிறப்பும், பெருமையும் ஒளவை நடராசன் அவர்களையே சாரும்.

அதிலும் அப்பா தான் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

இன்று அப்பாதையில் பலர் அவர் பின் வந்துவிட்டார்கள் என்பதுதான் நிலைத்த வரலாறாகும்.

உரையாடும்போதும் தனி நபர்களைப் பற்றிப் பேசுவதை விட, அப்பாவின் சிறந்த பண்பு எதுவென்றால் தன்னைச் சந்திப்பவர்களிடம் நூல்களைப் பற்றியும் கருத்துகளைப் பற்றியும், புதிய எண்ணங்களைப் பற்றியும் பரிமாறும் பழக்கமுடையவராகவே ஓங்கி உயர்ந்தார்.”

குளிர் நிலவாய், வீசும் தென்றலாய், மணக்கும் மல்லிகையாய் அமைந்த அப்பாவின் தேன் தமிழ்ப் பேச்சினைப் பலர் கேட்டு மயங்கி இருந்தாலும் தயங்காமல் நிதிச் செலவினைப் பொருட்படுத்தாமல் அப்பா இருக்கும் பொழுதே ஏன் இன்றும் அவர் மறைந்தும் மறவாமல் ஆண்டுதோறும் பாரதியார் பெருவிழாவில் ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் மாபெரும் தலைவர், நாடு போற்றும் நல்லறிஞர், பத்மபூஷன் ஆர், தியாகராஜன் அவர்களின் ஈத்து உவக்கும் மாண்புடன் அப்பாவின் எண்ணற்ற முன்னுரைகளை, வாழ்த்துரைகளை நூல்வடிவமாக விலை ஏதுமின்றி அச்சிடுவதோடு பலருக்கு வாரி வழங்கும் பாரிவள்ளலாக ஸ்ரீராம் நிறுவனத் தலைவர் ஆர். தியாகராஜன் திகழ்கிறார்.

அவர்களுக்கு ஒளவை தலைமுறையினர் தலை பணிந்து வணங்குகிறோம்.

ஸ்ரீராம் நிறுவனத்தின் ஒப்பற்ற தலைவர் ஓங்கு புகழுடன் பல்லாண்டு பல்லாண்டு நலமுற சிறப்புற்று வாழ்ந்திட உள்ளங்குளிரத் தமிழ் உலகம் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.

எடுத்தது கண்டனர் – இற்றது கேட்டனர் என்ற வரிகளுக்கு ஏற்பச் சுழலும் பம்பரம் என்று அப்பாவால் போற்றப்பட்ட ஸ்ரீராம் நிறுவனத்தின் செயல் திலகம் திரு. ஜி. சுந்தரேசன் ஆவார்.

‘இம் : என்னும் முன்னே எழுநூறும் – எண்ணூறும், அம் – என்றால் ஆயிரமாகப் பணிச் செம்மலாக என்னைத் தொடர்ந்து வழி நடத்தி வருகிறார்.

ஆண்டு தவறாமல் பாரதியார் விழாவினைப் பெருவிழாவாக நாடு போற்றும் நல்லறிஞர்களை வரவழைத்து, நாவூறும் தமிழுக்கு அணிகலன்களைப் பூட்டி மகிழும் திரு. ஜி. சுந்தரேசன் அவர்களுக்கும் எங்கள் நன்றி மலர்களை மகிழ்ந்து வழங்குகிறோம்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய் நூல்களைத் தேடித் தேடிப் படிக்கும் அப்பாவின் நூலகமே அதற்குச் சாட்சியாகும்.

அப்பாவுடன் மிக நெருக்கமாக எட்டாண்டுகளாக அவரின் இறுதி நாள் வரை தனி உதவியாளராகப் பணியாற்றியதோடு கடந்த மூன்றாண்டுகளாக எனக்குப் பல நிலைகளில் உதவி வரும் பொன்னேரி பிரதாப் நல்லியல்புகளின் உறைவிடமாக அப்பாவின் பல வாயுரைக் கட்டுரைகளை தட்டச்சுச் செய்ததோடு திருத்தும் திறம் வாய்ந்தவராக வளர்ந்து இன்று இப்புதையலைத் தேடித் தொகுத்து நூலாக்கம் செய்வதில் அவருடைய பங்கு மகத்தானது.

கடந்த பத்தாண்டுகளாக ஸ்ரீராம் குழுமம் நடத்தும் பாரதியார் விழாவை ஒரு தனி மனிதனாகப் பிரதாப் நின்று நிர்வகித்து வெற்றியடையச் செய்வதை அக்குழுமத்தின் தலைவர் பத்மபூஷன் திரு.ஆர். தியாகராஜன் அவர்கள் அப்பாவிடமும் என்னிடமும் உயர்ந்து பாராட்டுவதுண்டு.

அவரின் விடாத முயற்சியால் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வாயிலாக இந்த அருமையான புதையல் வெளியிடப்பட உள்ளது. அச்சுக்கு உதவிய இனிய நண்பர்களுக்கு என் வாழ்த்து என்றும் உரியது.

இந்நூலுக்கு மதிப்புரையாகச் சிறந்த முறையில் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ப. இரவிக்குமார் வழங்கியிருப்பதற்கு யான் நன்றிக் கடமைப்பட்டுள்ளேன்.

அப்பா மீது தனிப் பரிவு கொண்டவர் முனைவர் ப. இரவிக்குமார், அப்பாவின் மறைவுச் செய்தி கேட்டவுடன் தன் மாணவர்களுடன் பயணத்திலிருந்த நண்பர் இரவிக்குமார் உடனே 15 நிமிடத்திற்கு இரங்கலுரை ஆற்றியதைக் கேள்விப்பட்டு உருகினேன்.

அப்பாவுக்குப் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் மீது எப்போதும் ஓர் உயர்நிலைக் கருத்து உண்டு. அதற்குக் காரணம் முனைவர் க. வேங்கடசுப்பிரமணியம் ஆவார்.

மதிப்புரையினை ஆய்வுரையாக வழங்கிய முனைவர் இரவிக்குமார் அவர்களுக்கு என் நன்றி என்றும் உள.

ஒளவை பெற்ற ஞானம் அனைவருக்கும் கிடைத்த புதையல். கிடைத்த புதையல் தமிழுக்குக் கிடைத்த தனிப்புதையல்.

தண்டமிழ்ப்புதையல், புத்துணர்வு ஊட்டும் புலமைப்புதையல், ஒளவையின் செந்தமிழ்ப் புதையல்,

இரு கரம் நீட்டி,
இப்புதையலை வரவேற்று மகிழும்
என்பதில் ஐயமில்லை.

மலைப்பூட்டும்
தமிழ் மாமலை எங்கள் அப்பா !

நின்ற சொல்லர்
நீடு தோன்றினியர்
என்றும் எங்கள் நெஞ்சம் பிரிகிலரே.

சென்னை 08.02.2026

ஒளவை கண்ணன்
ஒளவை அருள்
ஒளவை பரதன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *