POST: 2026-05-01T07:36:23+05:30

”
Arul.2009/FB/#68952

ஔவையின் செந்தமிழ்ப் புதையல்

ஆக்கம்… ஔவை அருள்

பக்கம் எண் : 9,10,11,12,13,

வெளியீடு
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்

மகாகவி பாரதியாரின் 144 ஆம் பிறந்தநாள் விழாவில்
21. 2 .2026 அன்று வெளியிடப்பட்டது

அச்சிடோர்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ,
41 – பி , சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ,
அம்பத்தூர் , சென்னை – 600 050 .

424 பக்கங்கள்

ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்,
சென்னை – 600 018, 96000 64311.

ஔவை நடராசன் – தமிழ் அறிவு மரபின் ஆணிவேர் !

தமிழ் இலக்கிய உலகில் இன்று கந்தர்வனையும், என்.ஆர்.தாசனையும் கோபிகிருஷ்ணனையும் எண்ணிப் பார்ப்பவர்கள் குறைவு.

கவிதையுலகிலும் தணிகைச் செல்வன், நீலமணி, வித்யாஷங்கர் போன்ற பல கவிஞர்களை இன்று யாரும் நினைவு கூர்வதில்லை.

புலமை மரபிலும் இந்த வரலாற்றுப்பிழை தொடர்வதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

தமிழ்ப் புலமை மரபில் உரைவேந்தராகத் திகழ்ந்த
ஔவை சு. துரைசாமிப்பிள்ளையின் திருமகனார் எனப் போற்றப்படும் பேரறிஞர் ஔவை நடராசனுக்கும் இதுதான் நேர்ந்தது.

இதன் பொருள், மேற்சுட்டப்பட்ட இலக்கியவாதிகளுக்கு நிகரானவர் ஔவை நடராசன் என்பதல்ல ?

அறிவுலகிலும் ஆய்வறிஞர்கள் தமிழ் உலகில் நினைவு கூரப்படுவதில்லை என்பதைப் பதிவு செய்வதற்கே.

திண்டிவனத்தின் அருகில் ஓர் எளிய கிராமத்தில் பிறந்து, தமிழ் பயின்று, இலக்கியங்களில் ஆழங்கால்பட்டு, அதன்பிறகு பேராசிரியராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து அதிகார மையத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ஔவை நடராசன் என்பதாக வரலாறு அவரைப் பதிவு செய்யக்கூடும்.

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் துணை இயக்குநர், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறைச் செயலாளர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இவை யாவும் அவர் வகித்த பதவிகள்.

ஆனால், ஔவை நடராசனின் மறுபக்கம் என்பது வேறு;

அனுதினமும் அவர் இலக்கியங்களையே சுவாசித்தார்.

பேரறிஞர் அண்ணாவைப் போல் சிந்தித்தார்.

பாரதியார், பாரதிதாசன், சுரதா, கண்ணதாசன், அப்துல்ரகுமான், மீரா, நா.காமராசன், வைரமுத்து போன்ற கவிஞர்களை எழுத்தெண்ணிப் படித்து வியந்தார்.

சங்க இலக்கியம் அவர் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கம்.

திராவிட இயக்கத்தின் எழுச்சி பல அறிஞர்களை மேடைப் பேச்சாளர்களாக்கியது.

விரல்வழியே வாழ்வதைக் காட்டிலும், குரல்வழியே தமிழைக் கொண்டு சென்று, வெகுசன மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள வேண்டும் என்று எண்ணிய சிந்தனையாளர்கள் பலர்.

இலக்கியம், கலை, பண்பாடு, தத்துவம், வரலாறு, உலகச் சிந்தனை, இசங்கள் என்று பலவற்றிலும் ஆழங்கால்பட்ட ஔவை நாடராசனும் பேச்சுக்கலையைத் தேர்ந்தெடுத்தார்.

பல நூறு நூல்களை எழுதக்கூடிய ஆற்றல் அவருக்குள் இருந்தது.

ஆனால், அவர் அதைச் செய்யவில்லை.

இதை எவ்வாறு எடுத்துக்கொள்வது ?

இதனைத் தமிழ் வரலாற்றில் நேர்ந்த விபத்து என்பதா ? நிகழ்வு என்பதா ?

நிறைய நூல்களை எழுதாமலேயே தானே ஒரு நூலகமாய்த் திகழ்ந்த அதிசயம் தான் ஔவை நடராசன். அவர் ஆற்றிய உரைகள் யாவும் காற்றில் பதிந்த கல்வெட்டுகள்.

ஒரு முறை வார்த்தை சித்தர் வலம்புரி ஜான், ஔவை நடராசன் அவர்களை குறித்து சொன்ன வரிகள் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

இந்த மேற்கோளும் நான் கல்லூரியில் படிக்கும் பொழுது படித்தது அவர் வாழும் போதே தெரிவித்த கருத்து கானல் நீராகவே போனது எண்ணி இப்பொழுது மிகவும் வருந்துகிறேன்.

“ டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் ஒரு மேடை மின்னல்.

கண்ணை கூச வைக்கிற கருத்தொளி அவருக்குச் சொந்தம்.

அவரது நா நாட்டியம் வெறும் சொற்கோலம் அல்ல; வெற்றிப் பெறப் போகிற தமிழ் வரலாறு.

அவர் பேசுகிறவைகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒரு நாகரிக நாட்டிற்கான நல்ல அறிகுறிகளில் அது ஒன்று.

பூவாடை போர்த்துப் பூந்தமிழுக்குப் பொட்டிட்டுப் பார்க்கின்ற அவரது விரலும் வித்தக நாவும் தமிழர் பெற்ற தலைமுறைச் சொத்துக்கள்.

அவரை ஒரு முறை கேட்டால் இருபது நூல்களைப் புரட்டிப் படித்த புல்லரிப்பு உண்டாகும்.

அவரை வாழ்த்தாமல் விடுவது நாவிற்கு நல்லதல்ல ” என்று குறிப்பிட்டார்.

ஔவை நடராசன் எழுதிய அணிந்துரைகளும், முன்னுரைகளும் முனைவர் பட்ட ஆய்விற்கான செறிவும் நுட்பமும் நிறைந்தவை.

பிரான்சில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா, பேரா. க. பஞ்சாங்கம், மொழிபெயர்ப்பாளர் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர், தனித்தமிழ் ஆர்வலர் புதுவை சீனு. தமிழ்மணி போன்றவர்களுடன் ஒவ்வொரு வருடமும் நான் ஔவையைச் சந்தித்த பொழுதுகள் மறக்க முடியாதவை.

எஸ்.பொ. என்னும் பொன்னுத்துரையின் எழுத்துகளை ஆர்வமுடன் விவாதிப்பார்.

பஞ்சாங்கத்துடன் அவருடைய உரையாடல் கைலாசபதி குறித்ததாகவோ, கா.சிவத்தம்பி குறித்ததாகவோ இருக்கும்.

‘கண்ணில் என்ன கார்காலம்’ என்றெழுதிய வைரமுத்துவின் கவிதை அடர்த்தி எத்தகையது என்பதை ஔவை பேசப் பேச, கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

‘ஔவையின் செந்தமிழ்ப் புதையல்’ என்னும் இப்பெருநூலைக் கொண்டுவருவதன் மூலம், தமிழ் வரலாற்றிற்கு மாபெரும் பங்களிப்பைச் செய்திருப்பதாக ஔவை அருளை இனம் காண்கிறேன். .

பல்வேறு கவிதை நூல்களுக்கும், கட்டுரை நூல்களுக்கும் ஔவை நடராசன் அவர்கள் தந்த அணிந்துரைகள் தான் இத்தொகுப்பு.

திராவிடக் கட்சிகள் ஆண்ட காலகட்டத்தின் பண்பாடு, திறனாய்வு, கலை, அரசியல் குறித்த வரலாற்றுத் தடம் என்று இந்த நூலை மதிப்பீடு செய்யலாம்.

ஔவை நடராசனின் ஆழ்ந்த தனித்தமிழ்ப் புலமையின் வரலாற்றுச் சாட்சி இந்த நூல்.

சங்க இலக்கியம்,திருக்குறள், பக்தி இலக்கியம், கம்பராமாயணம், உரையாசிரியர்கள், காரைக்கால் அம்மையார், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன் குறித்தெல்லாம் ஆய்வு நோக்கில் ஔவை நாடராசனின் பதிவுகளைத் தொகுத்துப் பார்ப்பதற்கு இந்த நூல் உதவும்.

கவிதைகளை ரசிப்பதில் டி.கே.சி.யாகவும், ஒப்பிலக்கியத் திறனாய்வை மேற்கொள்வதில்
க. கைலாசபதியாகவும், வரலாற்று நூல்களை மதிப்பிடுவதில் குடவாயில் பாலசுப்பிரமணியன் போலவும் திகழ்பவர் ஔவை நடராசன் என்பதை வெற்றுப் புகழுரையாக வாசகர்கள் கருதிவிடக்கூடாது.

பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுத்தெண்ணிப் படித்த ஔவை நடராசனுக்கு ஒப்பிலக்கியம், திறனாய்வு, வரலாறு, சிற்பக்கலை, மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது என்பதை வலியுறுத்தவே இதைப் பதிவு செய்கிறேன்.

அதற்கு சான்றாக நூலின் அட்டைப்படமே நான் இப்பொழுது சொன்ன கருத்திற்கு அடித்தளமாக இயல்பாகவே அமைகிறது.

இன்று திறனாய்வுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்த பேரா.க.பஞ்சாங்கத்தின் முனைவர் பட்ட ஆய்விற்கு வித்திட்டவர் ஔவை நடராசன் தான் என்பதைப் பஞ்சு அடிக்கடி நினைவுகூர்வதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

‘சீன தேசத்தில் சில நாட்கள்’
( பக்கம் எண்: 36 ) என்னும் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் மாசேதுங், டெங்ஜியோ பிங், கன்பூசியஸ், தாவோ போன்றவர்களை நினைவுகூர்வதுடன்.

சீன எழுத்துகள், சீனச் சொற்கள் முதலியவற்றை சுவாரசியமான மொழிநடையில் எழுதியுள்ளார்.

‘சிந்தனைப் பண்ணையில் பாரதி’ (பக்கம் எண்: 332) என்னும் நூலுக்கு எழுதிய அணிந்துரையில், தமிழில் ஒப்பாய்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து ஔவை நடராசன் வைத்துள்ள விமர்சனம் தமிழ் ஆய்வுலகிற்கு இன்றும் பொருந்துவது.

“இத்தகு ஒப்பீடுகளில் பொதுவாகக் காணப்படும் குறைபாடு?
பாரதியின் ‘ஆழ்ந்திருக்கும் கவியுளம்’ சுட்டிக்காட்டப்படாது வேறொரு இலக்கியத்தைச் சுவீகரித்துக்கொள்ளும் ஒப்பீட்டுப் பண்டிதரின் ஒட்டு வேலைகள் தான் வெளிப்படுகின்றன என்பதாகும்.

வால்ட் விட்மனின் நகரத்தைப் படித்துவிட்டு பாரதியும் கட்டுரை புனைந்ததுபோல் ஒட்டிக் காட்டப்படுகிறதே தவிர, அது எழுதப்படுவதற்கு எது உண்மையான ‘தூண்டுகோல்’ஆக இருந்தது என்பதை இவர்களால் காணமுடிவதில்லை.

இதற்கு ஒப்பீட்டாய்வாளரின் குறை என்பதைவிட, ஒப்பிடுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முறையில், எடுத்துக்கொள்ளும் ‘உரைகல்’லில்தான் குறை இருக்கிறது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது” என்பதைப் பதிவு செய்யும் ஔவை, ‘பாரதியின் ஆங்கில அறிவு என்பது ஓர் அறிவுஜீவியினால் ஆர்வத்துடன் சேகரிக்கப்பட்ட உலகளாவிய ஞானம்’ என்று மதிப்பீடு செய்துள்ளார்.

டாக்டர் எம்.எஸ்.சாந்தா ஞானதேசிகனின் ‘காரைக்காலம்மையாரும் அக்கமாதேவியும்’ (பக்கம் எண்: 190) என்னும் ஒப்பாய்வு நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில்,

“ஒன்றேகாண் கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளாம் அது” என்னும் அம்மையின் பாடலுடன்,“வேறு என்னிடம் என்ன உள்ளதென்று யானொன்று அறியேனப்பா” என்னும் அக்கமாதேவியின் பாடலை ஒப்பிட்டுள்ளார்.

‘சங்க இலக்கிய கால வரையறைக் கருத்தாய்வு’ (பக்கம் எண்: 122) என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரை அற்புதத்திலும் அற்புதமானது.

சி.வை. தாமோதரனார். வி. கனகசபைப்பிள்ளை, து.அ. கோபிநாதராவ், பரிதிமாற்கலைஞர் போன்ற அறிஞர்களை மேற்கோள் காட்டியுள்ளார்.

‘மக்கள் தாமே ஆறறிவுயிரே’ என்னும் நூற்பாவிற்குப் பேராசிரியரின் உரை என்ன என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்.

‘மின்மினிகளால் ஒரு கடிதம்’ என்னும் அப்துல்ரகுமானின் நூல் தான் தமிழில் முதல் கஜல் கவிதைத்தொகுப்பு என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்.

இதுதான் ஔவை நடராசனின் தனிச்சிறப்பு.

ஔவை நடராசனின் நேர்காணல்களையும் (பக்கம் எண்: 367) தொகுத்ததற்காக அருளுக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்றி கூற வேண்டும்.

மொழி, பண்பாடு, அறிவியல், அரசியல், உலக நாடுகளில் நடைபெறும் மாற்றங்கள் குறித்த பண்பாட்டு ஆவணங்கள் இந்த நேர்காணல்கள்.

கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய
மூன்று முதலமைச்சர்களுடன் ஔவை எவ்வாறு பணிபுரிந்தார் என்பதை அறிந்துகொள்ளவும் இத்தொகுப்பு நூல் அவசியம்.

பல்லாண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவிற்கு ஔவை நடராசன் அவர்கள் சென்று வந்தபோது அரசுப்பணியாளர் ஒருவர் ஔவையைக் குறித்து அருமையாக ஆங்கிலத்தில் கவிதை புனைந்ததைக் கண்டு புல்லரித்துப் போனேன். (பக்கம் எண்: 371)

பட்டிமன்றப் பேச்சாளர், மேனாள் துணைவேந்தர் என்ற பொதுப்புத்தி சார்ந்த பார்வையை மாற்றி, திறனாய்வறிஞர்,ஒப்பற்ற சிந்தனையாளர், தமிழ்ச் சிந்தனை மரபின் இழைகளைக் கோத்த பண்பாட்டுக் காவலராக ஔவை நடராசனை அறிமுகம் செய்கிறது இந்த நூல்.

வரலாற்றின் சுவடுகளைத் தேடித் தொகுப்பது எளிமையானதல்ல; இந்தத் தொகுப்பு கிடைக்காமல் போயிருந்தால், ஔவை நடராசன் என்றொரு தமிழ்க் கடலின் வரலாறு அடுத்த தலைமுறைக்குத் தெரியாமல் போயிருக்கும்.

தமிழ் அறிஞர் உலகின் சார்பில், இந்நூலைத் தொகுத்த ஔவை அருளுக்கும், அவருக்கு பெருமளவில் உதவி செய்த பிரதாப்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையாகவே ஒரு நேர்முக உதவியாளர் கல்லூரியில் ஒரு முதுகலைப் பட்டதாரி மாணவராக மலர்ந்தவர், தமிழ் இலக்கிய உலகில் ஓர் ஆய்வாளர் செய்ய வேண்டிய நிரல்பட தொகுக்கும் பணிக்கு பிரதாப் தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதை தமிழ்ப்பேராசிரியராகிய நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

ஒரு உதவியாளரைக் கொண்டு இவ்வளவு பக்கங்களை கொண்ட நூலை அருள் திறம்பட பதிப்பித்துள்ளார் என்றால் ஏன் இவர் முனைவர் பட்ட ஆய்வாளராக முனையவில்லை என்பது மிக வருத்தமாக உள்ளது, பல்கலைக்கழகங்களுக்கு தான் இழப்பு என்று சொன்னால் மிகையாகாது.

புதுச்சேரி
05.02.2026
பெருகும் அன்புடன்
பேரா .பா .இரவிக்குமார்
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்
புதுவைப் பல்கலைக்கழகம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *