POST: 2026-04-25T13:09:58+05:30

”
Arul.2009/FB/#68946

சிங்கப்பூர் வானில் கவிமாலை சூட்டிய கலைமகன்

​சிங்கப்பூர் கடலோரம் வீசும் காற்றில் தமிழ் மணம் கமழச் செய்தவர்;

கடல் கடந்து சென்ற தமிழறிஞர்களைக் கனிவோடு வரவேற்று, அவர்களுக்கு விருந்தளித்துப் பாராட்டுவதையே தன் வாழ்வின் விழுமியமாகக் கொண்டவர்;

பண்பாளர் திலகம் மாசிலாமணி அன்பழகன் அவர்கள்
(21.1.1943-22.4.2026) மறைவெய்திய செய்தி, தமிழ் கூறும் நல்லுலகின் நெஞ்சில் பேரிடியாக இறங்கியுள்ளது.

​கடந்த 2015-ஆம் ஆண்டில், யாம் அரசுப் பயணமாகச் சிங்கப்பூர் சென்றிருந்த வேளையில், எங்களை இன்முகத்தோடு வரவேற்றதோடு மட்டுமல்லாமல், நற்றமிழின் சுவை ததும்பும் இலக்கியக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, அரசு அலுவலர்களைப் பெருமைப்படுத்திய அந்தப் பெருஞ்செம்மலின் முகம் இன்றும் என் கண்முன்னே நிழலாடுகிறது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பு இயக்குநராக யான் பணியாற்றிய காலத்தில்,

14.10.2023 அன்று மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் உள்ள அரங்கத்தில்
புதுமைத்தேனீ மா அன்பழகன் அவர்களின் செம்பியன் மாதேவி என்ற வரலாற்றுப் புனைவு நூலினை தலைமை தாங்கி வெளியிட்டேன். அந்நிகழ்வில் பேராசிரியர் சாலமன் பாப்பையா, எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், ஓவியர் முத்துக் கிருட்டினன் மற்றும் பதிப்பாளர் வேதியப்பன் கலந்து கொண்டு வாழ்த்தியது இன்னும் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் 12.1.2024 அன்று அயலகத் தமிழர் நாளினை முன்னிட்டு நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மண்டபத்தில் ‘உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது’ வழங்கிப் போற்றப்பட்டபோது, இரண்டு இலட்சம் ரூபாய்ப் பொற்கிழியை அவர் கைகளில் ஏந்திக் கவிஞர் மாசிலாமணி அன்பழகன் நின்ற அந்த நிமிடம், தமிழன்னையின் அணிகலன்களில் மற்றுமொரு வைரம் ஒளிர்ந்தது போன்ற பெருமிதத்தை விதைத்தது.

​நாகை மண்ணின் ஆயக்காரன்புலம் தந்த அந்தத் தங்கமகன்,

தன் தாய் செல்லம்மாள் – தந்தை மாசிலாமணி ஆகியோரின் பெயருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், ‘கவிமாலை’ என்ற அமைப்பைச் சிங்கப்பூரில் செதுக்கி எடுத்தார்.

2008 முதல் 2017 வரை அந்த அமைப்பிற்குத் தலைமையேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்த அந்தப் படைப்பாளி, தானும் 35-க்கும் மேற்பட்ட காவியங்களைப் படைத்துத் தமிழுக்கு மகுடம் சூட்டினார்.

​’அலை தரும் காற்று’ முதல் ‘டுரியானுள் பலாச்சுளை’ வரை அவர் வடித்த எழுத்துக்கள்,
இன்று சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பூண்டி புஷ்பம் கல்லூரி எனப் பல கல்விச் சாலைகளில் மாணவர்களின் சிந்தனையைச் சீர்படுத்தும் பாடநூல்களாகத் திகழ்கின்றன.

‘கவிப்பேரொளி’, ‘கவிமாமணி’ எனப் பல விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தமிழ்த் துருவ நட்சத்திரம், மறைந்தாலும் அவரது படைப்புகள் தமிழுலகத்திற்கு பாடமாகவே வாழும்; அவ்வண்ணமே
கவிமாலைக் காப்பாளரின் உடலும் மருத்துவ ஆராய்ச்சிக்காக நன்கொடையாக வழங்கப்பட்டு மருத்துவ மாணவர்களுக்கான பாடமாகத்துலங்கும்

அவரை இழந்து வாடும்
திருமதி திலகவதி அன்பழகன் அவர்களுக்கும் மற்றும் அவரின் மைந்தர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *