”
Arul.2009/FB/#68938
இலக்கியச்சோலை – ஏப்ரல் 2026
மேடை மின்னல்கள்
புலவர்க்கரசன் பொன்னரசன்
பக்கம் எண் :57
நாடு போற்றும் நல்லறிஞர் பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களைப்பற்றி
கட்டுரை பின்வருமாறு:
முத்தமிழ் ஆய்வுமன்ற எட்டாம் ஆண்டு மலர் 08-12-1992 அன்று வெளியிடப்பட்டது.
அந்த மலரில் உரைவேந்தர் ஒளவை நடராசன் அவர்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் கவிஞர்கள் பலர் எழுதிய வெண்பாக்கள் தொகுப்பு இடம்பெற்றிருந்தது.
அந்த வெண்பாக்களுள் வெண்பாவும் என்னுடைய என்னுடைய துணைவியார்
செந்தமிழரசி புலவர் சந்திரா அவர்கள் எழுதிய வெண்பாவும் இடம் பெற்றிருந்தன.
வழக்கம் போல மலர் வெளியான பின்னர் ஒருநாள் அந்த மலருக்குரிய ‘மலர் மணம் ஆய்வு’க்கூட்டம் நடத்தப் பெற்றது.
அறிஞர்கள் பலர் கவிதை, கட்டுரைகளின் குறை, நிறைகளை அலசி ஆய்ந்தார்கள், உரைகளை வீசி உயரப்பாய்ந்தார்கள்.
கவிஞர் ஒருவர் எழுந்து, “இம்மலரில் இடம் பெற்றுள்ள ஔவை நடராசனார் அவர்களைப் போற்றும் வெண்பாக்களுள் புலவர் சந்திரா புனைந்துள்ள,
““பேசும் திறன்பெருகும் பீடுமிகும் நல்லெண்ணம் வீசும் எழுத்தாற்றல் மேவிவரும் – மாசெல்லாம் அற்ற தமிழ்வளரும் ஔவை நடராசர் நற்பெயரைச் சொன்னால் நமக்கு’
என்னும் வெண்பாவில் குற்றம் இருக்கிறது” என்று திருவிளையாடல் புராணப் புலவர் நக்கீரனைப் போலக் கணை தொடுத்தார்.
அந்த நிகழ்ச்சிக்குப் புலவர் திருமதி. சந்திரா வாராமையால், அங்கிருந்த நான் புலவர் சந்திரா : அவர்கள் சார்பாக
, “யாப்பிலக்கணப் பிழையா? சொற்குற்றமா? பொருட் குற்றமா? என்ன? குற்றம் கண்டீர்?” என்று இறைவன் பாடலை ஏந்தி வந்த தருமிபோலக் கேட்டேன்.
அதற்கு அந்தக் கவிஞர், “யாப்பிலக்கணப் பிழையோ? சொற்குற்றமோ? இருந்தால் மன்னித்து விடலாம் திருத்திக்கொள்ளலாம்.
இப்பாடலில் பொருள் குற்றம் அல்லவா பூதம் போல் என்றார். எழுந்துள்ளது”
நான்,“பொருள் குற்றம் என்ன? புகலுங்கள்” என்றேன்.
அப்போது அவர், “ஒளவை நடராசனார் பேரறிஞர் என்பதில் ஐயமில்லை, பத்மஸ்ரீ அவர்தம் சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலம், அவர் எழுதிய நூல்களைப் படிப்பதன் மூலம், அவருடன் பலநாள் உரையாடுவதன் மூலம் நம் தமிழறிவு வளரும்” என்று கூறினால் நம்பமுடியும்.
ஆனால், அவர் பெயரைக் கூறியவுடனே நல்ல தமிழாற்றல் நமக்கு வரும் என்று பாடல் தெரிவித்துள்ள கருத்து நம்பும்படியாக இல்லையே.
பெயர் கூறியவுடன் தமிழறிவு தானேவரும் என்றால் ஒளவை நடராசர் பெயர் என்ன மந்திரமா?
அப்படியே மந்திரமாக இருந்தாலும் மந்திரத்தால் மாங்காய் கூட விழாது ; கல் வீசினால்தான் மாங்காய் விழும் விழாமலும் போகலாம்.
அவர் பெயராகிய சொல் வீசினால் தமிழறிவு மாங்காய் உடனே கிடைத்துவிடும் என்று கூறியது ஏற்க இயலாது.
இந்தப் பொருள் குற்றத்தைப் புறக்கணிக்க முடியாது” என்று, “கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்னும் பொருள் அமைந்த பாடலைக் குற்ற முடைய பாடல்” என்று நக்கீரன் முழங்கியதைப்போல, இன்றைய நக்கீரராகிய அந்தக் கவிஞர், “தமிழறிவை அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் எந்தப் பெயருக்கும் கிடையாது” என்று ஆர்ப்பரித்தார்.
நான் எழுந்து, “புலவர் திருமதி. சந்திரா பாடலில் குற்றம் இல்லை என்பதற்கான விளக்கத்தை நான் தர விரம்பினேன்.
அனுமதி தாருங்கள்” என்றேன்.
“சரி, விளக்கம் கூறுங்கள் பார்ப்போம்” என்று புதிய நக்கீரர் கம்பீரமாகச் சொன்னார்.
நான் விளக்கவுரையைத் தொடங்கினேன்.
“ஒளவை நடராசன் அவர்கள் பெயரைச் சொல்பவருக்கு அந்தப் பெயரே எழுத்து முதலாகிய ஐந்து இலக்கணங்களிலும் பழுத்த தமிழ்ப் புலமை பாலிக்கும்” என்று மேடையில் உரையாற்றும்போது குறிப்பிட்டால் இருப்பவர்கள் நான் உளறிக் கொட்டுவதாக எண்ணுவார்கள். அவையில்
நண்பர்களுடன் உரையாடும் போது, “நண்பர்களே! நீங்கள் ஒளவை நடராசன் என்னும் பெயரைச் சொல்லுங்கள் சொன்னால் உங்களுக்குத் தமிழ் இலக்கண இலக்கிய அறிவு முழுமையாக உண்டாகும்” என்றால் கேட்பவர்கள் என் கூற்றை ஏற்கமாட்டார்கள்.
ஆனால், இதே கருத்தைக் கவிதையில் கூறினால் அந்தக் கருத்து, படிப்பவர்களால் வரவேற்கப்படும்.
அது கவிதைக்கான விதி விலக்கு, இவ்வாறு கூறக் கவிஞர்களுக்கு உரிமை உண்டு.
உதாரணமாகத் திரிகூட இராசப்பக் கவிராயர் என்னும் கவிஞர் தாம் இயற்றிய ‘குற்றாலக் குறவஞ்சி’ என்னும் சிற்றிலக்கியத்தில், குற்றாலத்தில் உள்ள ‘தேனருவி’ என்னும் அருவி நீரானது மேலிருந்து கீழே விழும்போது அது மிகமிக உயரத்தில் வானத்தின் வழியாக ஒழுகும். வான மண்டலத்தில் சூரியன் அந்த வழியாகச் செல்லும்போது சூரியனின் தேர்க்கால் (தேரின் சக்கரம்) பரி (குதிரை)களின் கால்கள் ஆகியவை அந்த நீரில் பட்டு அவை வழுக்கு கின்றன என்று கூறியுள்ளார்.
(சூரிய பகவான் ஒற்றைச் சக்கரம் உள்ள, ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற தேரில் அமர்ந்து உலகைச் சுற்றி வருகிறார் என்பது புராணம் சார்ந்தவர்களின் நம்பிக்கை) இந்தக்கருத்துக்குரிய கவிதையைச் சொல்கிறேன்.
தேனருவித் திரை எழும்பி வானின்வழி ஒழுகும் செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்” என்று நான் பாடலை முடித்தவுடன் இன்றைய நக்கீரர் எழுத்தார்.
“நீங்கள் கூறிய இலக்கிய வரிகள் கவிராயரின் கற்பனைத் திறனைக் கூட்டுகிறது.
இதனை உயர்வுநவிற்சி அணி’ என்றும் சொல்வார்கள்.
இந்த வருணனைக் கவிதையை ஒரு பெயரை உச்சரித்தலே மெச்சும் தமிழறிவு மேலோங்கும் என்னும் அந்தக் கவிதையுடனே ஒப்பிடாதீர்கள்!” என்றார்.
உடனே நான், “சரி! சரி! உங்களுக்கு மலரில் இடம்பெற்றுள்ள வெண்பாவுக்கு நேரான ஒப்புமை கொண்ட ஒரு பாடலைக் கூறுகிறேன் கேளுங்கள்.
குறள் வெண்பா வடிவில் அமைந்த தனிப் பாடல், அந்தப் பாடலை மருத்துவத்துறையினரும் தமிழறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
அந்தக் குறள் வெண்பாவைக் கூறுகிறேன்.
நீர் கருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்பார்த்ம் பேர் உரைக்கிற் போமே பிணி
இதன்பொருள் இயம்புகிறேன் கேளுங்கள்.
தண்ணீரை நன்றாகக் காய்ச்சிக் குடிக்கவேண் டும்.
அவ்வாறு நீர் கொதிக்கவைக்கும்போது அதன் அளவு குறையும் அதனால், ‘நீர் சுருக்கி’ எனக் கவிதை கூறுகிறது.
மோரைக் கெட்டியாகச் சாப்பிடக்கூடாது மோரில் அதிகமாக நீரைக் கலந்து மோரைப் பெருக்கிப் பின் அருந்த வேண்டும்.
அடுத்து நெய்யை விழுதாக உண்ணாமல் அதனை உருக்கி எண்ணெய்போல் ஆக்கி உணவில் சேர்ந்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உண்பது உடலுக்கு நல்லது, நோய் வாராமல் காக்கும் வந்த நோய்களைப் போக்கும் என்பதுதான் அதன் கருத்து.
ஆனால், இந்தக் குறள் வெண்பாவில் நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய் உருக்கி உண்டால் நோய் நீங்கும் என்று கூறவில்லை.
அவ்வாறு உண்பவர்களின் பெயரை உரைத்தாலே பிணிபோகும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆக, பழம்பாலில் பெயர் சொன்னால் நோய் நீங்கும்போது இன்றைய பாடலில் பெயர் சொன்னால் தமிழறிவு ஓங்கக் கூடாதா?
பண்டைய தனிப்பாடலைத் தமிழுலகம் சரி என ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆதலால், இந்த வெண்பாவையும் இந்த அறிஞர் அவை ஏற்றுக் கொள்வதுதானே? சரி” என்றேன்.
உடனே, அவையில் அந்த கைத்தட்டல் மிகப் பலமாக எழுந்தது; அறிஞர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
அப்போது அவையில் இருந்த புதிய நக்கீரரும் எழுந்து நின்று கைத்தட்டினார்.
இந்தப் புதிய திருவிளையாடலில் எழுதித் தந்தவர் வாராமலே,
கவிதையை ஏந்திச் சென்ற தருமியாகிய நானே வாதாடி வென்றேன்.
இத்தகைய நிகழ்வுகளால் பண்டைக் காலத்தில் தமிழ் வளர்த்த முச்சங்கங்களைப் போல இன்றைய முத்தமிழ் ஆய்வு மன்றமும் பணிகளால் ஒளிர்கிறது ;
புகழுடன் மிளிர்கிறது.

Add a Comment