”
Arul.2009/FB/#68933
பாரதி காவலர்: சொல்லும்- செயலும்
”என்றுமுள தென்தமிழ்” தந்த எழில்மிகு கவிஞன் பாரதியின் புகழை, திசையெட்டும் பரப்பிய திண்ணிய நெஞ்சம் கொண்டவர் அண்மையில் மறைந்த பாரதி காவலர் கு இராமமூர்த்தி.(1.1.1937-7.4.2026)
பள்ளி மாணவனாக நான் இருந்தபோது எங்கள் இல்லத்துத் தொலைபேசி மணி ஒலிக்கும் போதெல்லாம், அந்த ஒலியின் வழியே ஓர் இலக்கியச் சாரல் வீசும்.
தொலைபேசியை நான் கையில் ஏந்தும் பொழுதே, மறுமுனையில் அமுதத் தமிழில் ஒரு குரல் கேட்கும்:
“பாரதி காவலர் இராமமூர்த்தி பேசுகிறேன்”.
அந்த ஒரு சொல்லிலேயே பாரதியின் மீதான அவரது பற்றும், பாசமும் தெறிக்கும்.
உடனே நான் அப்பாவிடம் கொடுத்து விடுவேன்.
காலையில் தொலைபேசி உரையாடல்; மாலையில் இலக்கியக் கூடல் – இதுவே அவர்களின் வாழ்வியல் இலக்கணமாகத் திகழ்ந்தது.
பாரதி எனும் பெருங்கடலை அலசுவதில் அவருக்கு அயர்வே இருந்ததில்லை.
80-களின் தொடக்கத்தில், தமிழகத்தின் அறிவுச் சூழலில் ‘பாரதி காவலர்’, ‘பாரதி அடிப்பொடி’ எனும் பெயர்கள் வெறும் விருதுப் பெயர்களாக மட்டும் இருக்கவில்லை; அவை பாரதி பணியின் ஆணிவேர்களாகவும் பெரும் பட்டப் பெயர்களாகத் திகழ்ந்தன.
”தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!”
என்ற வரிகளை மெய்ப்பிக்கும் வண்ணம், ஊர் ஊராகச் சென்று பாரதி புகழ் பரப்பியவர் அவர்.
‘எங்கெங்கு காணினும் பாரதியே’ என்று வாழ்ந்த அந்தப் பெருமகனாருக்கு, தமிழ்நாடு அரசு 15.1.2013 அன்று ‘பாரதியார் விருது’ வழங்கிப் பெருமை சேர்த்த பொழுது, என் தந்தை ஔவை நடராசன் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
‘தகுதி தகுதியைக் கண்டறிந்து கொண்ட தருணம்’ என்று கூறி அவரைப் பெரிதும் புகழ்ந்தார்.
பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் ந. சஞ்சீவி ஆகியோரிடம் தமிழ் இலக்கியங்களை பாரதி காவலர் இராமமூர்த்தி அவர்கள் கற்றுத் தேர்ந்தவர் ஆவார்.
இவர் 30க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும்,
2 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.
பாரதியார் தொடர்பான சொற்பொழிவுகள் பலவற்றை நிகழ்த்தியிருப்பதுடன் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
பாரதிப் பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்குத் துணை செய்துள்ளார்.
1953இல் நாமக்கல் கவிஞரின் வாழ்த்துரையுடன் பாரதி இளைஞர் சங்கம் தொடங்கி 1992 வரை தலைவராக இருந்துள்ளார்.
1963 முதல் 1984 வரை பாரதி விழாவினை ஆண்டுதோறும் நடத்திய பெருமைக்குரியவராவார்.
இமயமலை அடிவாரத்திலும், கங்கைக் கரையிலும், உதகமண்டலத்திலுள்ள தொட்டபெட்டாவிலும் அரசு உதவியுடன் பாரதியின் கவிதைகளைச் சலவைக் கல்லில் நிலையாகப் பொறித்த பெருமைக்கு சொந்தக்காரர்.
பாரதியின் புகழ் பரப்பும் பணிக்காகப் பல்வேறு அமைப்புகள் இவரைப் பாராட்டிச் சிறப்பித்துள்ளன.
மகாகவி பாரதியாரின் 107 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு 1.12.1988 ஆம் ஆண்டில் ஸ்ரீராம் நிறுவனம் வாயிலாக பாரதியின் சிந்தனைச் செல்வம் என்ற ஓர் அருமையான நூலினை அவரும் அவரின் துணைவியார் திருமதி கங்கா இராமமூர்த்தி இணைந்து பதிப்பித்தார்கள்.
1988 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற பத்தாம் உலகக் கவிஞர் மாநாட்டில் பாரதி காவலர் இராமமூர்த்தி அவர்கள் பாரதியார் அவர்களைக் குறித்து அருமையான ஆங்கிலத்தில் உரையாற்றியதை அந்நாட்களில் டாக்டர் கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ், நீதியரசர் மோகன் ஆகியோர் வாழ்த்திப் பாராட்டியதை அப்பா அடிக்கடி சொல்லி மகிழ்வார்.
அவர் அண்ணாநகர் இல்லத்திற்குப் பலமுறை வருகை புரிந்ததும், எந்தையார் அவரின் அபிராமபுரம் இல்லத்திற்குச் சென்று வந்ததும், அவர்தம் நட்பின் செழுமையை தெள்ளத்தெளிவாக உணர்த்தும்.
ஆண்டுதோறும் மார்கழித் திங்களில் வரும் பாரதி விழாக்களில் அப்பா உரையாற்றும் பொழுது, ஒரு நயமான ஒப்பீட்டை முன் வைப்பார்:
”சைவ நெறி தழைக்கத் தேவார மூவர் தொண்டாற்றியதைப் போல,
பாரதி எனும் தேசிய நெறி தழைக்க பாரதி அடிப்பொடி மணி, பாரதி காவலர் இராமமூர்த்தி, தமிழ்ச்செம்மல் சிவகுமார் ஆகிய இம்மூவரும் இணைந்து செயலாற்றி வருகிறார்கள்.
அந்த மூவர் பணி பக்தி பரப்ப;
இந்த மூவர் பணி பாரதி புகழ் பரப்ப!”
என்று வாழ்த்திய வரிகள்
இன்றும் என் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.
பாரதி காவலர் அவர்கள் தம் 90 ஆம் அகவையில் பொன்னுடம்பு நீத்துப் புகழுடம்பு எய்திவிட்டாலும், அவர் ஏற்றி வைத்த பாரதி எனும் சுடர் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் ஒளிவீசும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
”காற்றிலேறி எவ்விடத்தும் செல்க” என பாரதி சொன்னது போல, பாரதி காவலர் இராமமூர்த்தி அவர்களின் புகழ் எங்கும் நிறைந்திருக்கும்!
ஔவை அருள்
12.4.26

Add a Comment