POST: 2026-03-23T10:23:35+05:30

”
Arul.2009/FB/#68913

திக்குகளைத் திகைப்பிக்கும் தேன்கடல் வைரமுத்து!

பாரதியார்-
தமிழை எளிமையாக்கினார்

பாவேந்தர்-
தமிழை வலிமையாக்கினார்

கண்ணதாசன்-
இசைக்குள் வைத்து
இனிமை ஆக்கினார்

வைரமுத்து-
நளினம் மிகுந்த
நவீனம் கலந்து
உரையையும் திரையையும் உரைநடை உலகையும்
புதுமை ஆக்கினார்!

எங்கோ படித்த நினைவு:
‘மதுரை ஆவணி வீதியிலும்
வாங்க முடியாத
ஆணிமுத்து
கவிப்பேரரசு வைரமுத்து’ என்று!

அதை அவ்வப்போது
தாம் பெறும் விருதுகளால் நினைவூட்டிக் கொண்டே இருந்த இந்தத் தமிழவர்
இன்று
நிலையானப் பெருமைகளின்
நித்திலப் பேழையாக மிளிர்கிறார்.

பாரதியாரின் கவிதை-
புதுமைப்பித்தனின் கதை-
ரசிகமணியின் கட்டுரை- என்னும்
தமிழ் இலக்கியத்தின்
முக்கடல் சங்கமமாக வாழ்கின்ற இந்த
முத்தமிழ்க் கவியரசர்
திக்குகளைத் திகைப்பிக்கும்
தேன்கடலாகத்காட்சித்தருகிறார்.

சினிமாவில் சிதையாமல்
அரசியலில் நுழையாமல்
இலக்கிய வானில் சிறகடித்து-
செந்தமிழ் மலையின்
சிகரங்களைத் தொட்டுவரும்
ராஜாளிப் பறவை இவர்.

தமிழ்நாட்டில் கவியரங்கம் என்றாலே
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு தான் வரும்.
அதற்கு அடுத்தபடி
கவிப்பேரரசு வைரமுத்து நினைவுதான் வரும்.

மரங்கள் இல்லாத மலை
மலர்கள் இல்லாத பூங்கா
அலைகள் இல்லாத கடல்
அறிஞர்கள் இல்லாத அவை
இனிப்பு இல்லாத விருந்து
இசையில்லாத தமிழ்
வைரமுத்து இல்லாத கவியரங்கம்-
சுவைக்காது என்று
சுவைத்த காதுகள் சொல்வதைச்
சுவைத்திருக்கிறேன் நான்!

நான் கொஞ்சம்
திரும்பிப் பார்க்கிறேன்.

திரைப்படப் பாடல்களுக்காக-
ஆறு குடியரசுத் தலைவர்களிடம்
ஏழு முறை
தேசிய விருது கொண்டவர்
கவிப்பேரரசு வைரமுத்து.

ஒரு கவிஞன் எழுதத் தொடங்கும் போதே
ஒரு ஞானியைப்போல் எழுதுவது அரிதான ஒன்று.

வைரமுத்து தன் பாலகாண்டத்திலேயே
சுந்தர காண்டத்தைப் படைத்தவர்.

அதனால் தான்
அவரது முதல் நூலான
‘வைகறை மேகங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு
அவர் படிக்கிற காலத்திலேயே
ஒரு கல்லூரியில்
பாடமாக வைக்கப்பட்டது.

பேராசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு-
ஒரு மாணவன் பாடப்புத்தகம் எழுதினான்
என்று சொன்னால்-
அது வைரமுத்துவைத் தவிர
வேறு யாராக இருக்க முடியும்?
என்று என் அப்பா ஔவை நடராசன் அவர்கள் அடிக்கடி மேடைகளில் சொல்லியதை நினைவு கூர்கிறேன்.

இவர் 53 ஆண்டுகளாய் கவிதை எழுதுகிறார்.

40 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில்
நின்று நிலைத்துப் பாடல் எழுதுகிறார்.

இந்தச் சாதனையை முறியடிக்க
இனிமேல்தான் ஒருவர்
பிறக்க வேண்டும்.

தீண்ட முடியாத சாதனைகள் கொண்டது-
அவரது தடம்.

எவரும் தாண்ட முடியாத உயரம் கொண்டது-
அவரது இடம்.

வரைய முடியாத வண்ணங்கள் கொண்டது-
அவரது தமிழ்!

இவர்-
கவிஞர் என்ற
கட்டுக்குள் அடங்காதவர்.

பாடலாசிரியர்- என்ற
பார்வைக்குள் ஒடுங்காதவர்.

எழுத்தாளர்- என்ற
எல்லைக்குள் சுருங்காதவர்.

கட்டுரையாளர்- என்று
கட்டிப் போட முடியாதவர்.

எல்லாத் தளங்களிலும்
முத்திரை பதித்த சித்திரை நிலவு இவர்.

ஆனால்….தேயாதவர்.
ஓயாதவர்.

சாதித்தது போதும் என்று சாயாதவர்.

எழுத்தில் எத்தனை அவதாரங்கள் உண்டோ
அத்தனையும் இவருக்கு அத்துபடி.

இவர்
வாய் திறந்தாலே
வாசனைத் தைலம்
பூசிக் கொண்டுதான்
வார்த்தைகள் வெளிவரும்!

அத்தனையிலும்
அசாத்திய ஒளிவரும்!

தங்க நகையில் கடைப்பெயர்
இருப்பதைப் போல,
இவரின் தங்கத் தமிழ் நடையில்-
எப்போதும் இவரின் பெயர் இருக்கும்.

காற்றில் ஒலிக்கும்போதே தெரிந்துவிடும்- இது
வைரமுத்துவின் வண்ணக்கோலம் என்று!

இந்த அங்கீகாரம் பெற்ற
அற்புதக் கவிஞர்-
இவரைத்தவிர வேறு யாருமில்லை.

இவர் தமிழென்னும் படைகொண்டவர்-

தனக்கென்று ஓர் உடை கொண்டவர்-

தனித்துவம் மிகுந்த நடைகொண்டவர்!

நவமணிகளில் வைரமும் முத்தும்
இவரின் பெயரில் இருக்கின்றன!

எஞ்சிய
மரகதமும் பவளமும் மாணிக்கமும்
இவரின்-
வார்த்தைகளில் இருக்கின்றன,
வசனத்தில் இருக்கின்றன!
இவரின் இதயத்திலும் இருக்கின்றன!

‘இராப்பகலா பாட்டெழுதி
இராசகவி’ ஆனவர் இவர்!

தமிழென்னும் கடலுக்குள்
தரைவரைக்கும் போனவர் இவர்!

நாவுக்கு சிக்காத அமுதம் இவர்!

நாசிக்கு சிக்காத வாசம்

இவரால் தமிழுக்கு வழங்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான
ஞானபீட விருது
முடிவன்று.

இன்னுமிவர் பெறப்போகும்
ஏராள விருதுச் சங்கிலியில்
இதுவொரு கண்ணி
என்று
எண்ணி நேரில் 16.3.26 திங்கட்கிழமையன்று அவரின் இல்லத்தில் வாழ்த்தி அப்பாவின் அண்மை வெளியீடான ஔவையின் செந்தமிழ்ப்புதையல் நூலினை வழங்கி மகிழ்ந்தேன்.

வாழிய கவிப்பேரரசு வைரமுத்து!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *