”
Arul.2009/FB/#68909
பசுமைப்புகலிடமான முதுமலை
வனத்தின் அமைதி கவிஞனின் வரிகளை விட ஆழமானது.
இயற்கையின் உயர்வும், விரிவும் மனிதர்களை எந்நாளும் வியக்க வைக்கிறது.
ஆரவாரமான நகர வாழ்க்கையின் இரைச்சல்களிலிருந்து விடுபட்டு, அந்த அடர்ந்த கானகத்தில் மரங்கள் பல்லாயிரம் கைகளாக உயர்த்திப் பெருமிதமான வரவேற்பினை அளித்தபோது, ஆழ்ந்த அமைதி தழுவியது.
உலகக் கவலைகள் ஏதுமின்றி, அழகிய புள்ளிமான்கள் ஆங்காங்கே அமைதியாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன.
‘அழகு என்பது அணிகலன்களில் இல்லை; பசுமையில்தான் இருக்கிறது’ என்பதை அந்த ஆயிரம் பொட்டு வைத்த, தோகை விரித்த வண்ண மயில்கள் சொல்லாமல் சொல்லின.
மரக்கிளைகளுக்கிடையே, மனிதனின் மூதாதையர்களான குரங்குகள் தங்களின் குறும்புத்தனமான ஆட்டங்களைக் காட்டின.
மரங்களின் உச்சியில், வானவில்லின் வண்ணங்களைக் களவாடிக்கொண்டதைப் போல அணில்கள் கூட்டமாகக் காட்சி தந்தன.
வனத்தின் ஆழத்தில், கருமையான மலையைப் போலக் காட்டெருமைகள் இயல்பாக வலம் வந்தன.
அடர்ந்த புதர்களுக்கு இடையே, கம்பீரமாக, அழகிய வரிகளுடன் புலியின் வால் மட்டுமே தெரிந்தது.
கால் மணி நேரம் காத்திருந்தும் புலியின் பார்வை கிட்டவில்லை.
கடந்து போன யானைகளை மலைத்துப் பார்த்துவிட்டு, சிற்றுலாவாக இயற்கையின் செழிப்பான எழிலார்ந்த உதகமண்டலத்திற்கு 8.3.26 வெள்ளிக்கிழமையன்று இரவு திரும்பினேன்.

Add a Comment