POST: 2026-03-15T10:56:30+05:30

”
Arul.2009/FB/#68905

மொழிப்போராட்டத் தியாகிகளுக்கு வெண்பா மாலை

தமிழ்நாடு அரசின் ​தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாகப் பல்வேறு இடங்களில் திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

பொதுவாக, இச்சிலைகளின் பீடங்களில் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகவும், சங்கப் புலவர்களின் நினைவுத் தூண்களில் சங்க இலக்கியப் பாடல் வரிகளும் பொறிக்கப்படுவது வழக்கம்.

​அந்த வகையில், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையின் முகப்பில், மொழிப்போராட்டத் தியாகிகளான தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் மார்பளவு சிலைகளை கடந்த சனவரி 25-ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30
மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழா தமிழக வரலாற்றில் ஒரு பெருமிதமான நிகழ்வாக அமைந்தது.

​இச்சிலைகளின் பீடத்தின் இருபுறங்களிலும் மொழிப் போராட்டத்தியாகிகளின் சிறப்பினை பறைசாற்றும் வகையில், செழுமையான கல்வெட்டு வரிகளைப் பொறிக்க வேண்டுமென இந்திய குடிமைப் பணியைச் சார்ந்த உயரதிகாரி ஒருவர் வலியுறுத்திய போது என் முகம் மேலும் பிரகாசமானது.

இதுவரை வேறெங்கும் இல்லாத வகையில், மரபு மாறாத வெண்பா வடிவில் தியாகிகளின் வரலாற்றைப் பொறிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி வடிக்கப்பட்ட பின்வரும் இரு வெண்பாக்களும் மொழிப் போராட்டத்தியாகிகளின் புகழை என்றென்றும் நிலைத்திருக்கும் வண்ணம் சிலைப் பீடத்தில் கல்வெட்டு வரிகளாகவே பொறிக்கப்பட்டுள்ளது.

​தாளமுத்து வாழ்க்கை வரலாறு:

​அழிப்போர்க் கெதிராய் அருந்தமிழ் காக்கும்
மொழிப்போர்க் களமாடி மூண்டே- எழுங்கனலை
நாளமுதாய் உண்டு சிறைகண்டு மாண்டபுகழ்
தாளமுத்தைப் போற்றும் தமிழ்.

​நடராசன் வாழ்க்கை வரலாறு:

​செந்தமிழால் செய்தவுடல் சீறிக் கிளம்பினால்
இந்திவரு மோவிங்கே என்றுரைத்துச் – சிந்தையெலாம்
செந்தீயைப் பூசிச் சிறைசென்று தன்னுயிரைத்
தந்தான் நடராசன் தான்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *