POST: 2026-03-13T09:33:59+05:30

”
Arul.2009/FB/#68903

கல்வெட்டு வரிகள்

மாமேதை காரல் மார்க்சு எழுதிய மூலதனத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பிறகு அதன் தொடர்ச்சியாக நினைவில் வாழும்
தொழிலதிபர் அருசங்கர் அவர்களின் ஒருங்கிணைப்பில்
157 அக்ரகார சாலை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள பருப்பு ஆலையின் வளாகத்தில் அன்னை கலை இலக்கிய மன்றம் சார்பாக மூலதனத்தின் மொழிபெயர்ப்பு நூலுக்கான ஆய்வுக்கூட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மாலையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற புலவர் வீரமணி அவர்களும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தோழர் தியாகு ஆய்வுரை நிகழ்த்த எந்தையார் ஔவை நடராசன் அவர்கள் தலைமை தாங்கி உரை நிகழ்த்தியது என் நினைவில் பசுமையாகவுள்ளது.

அவரின் தலைமையுரையில்:

மூலதனம் ஒரு பொருளாதார நூல் மட்டுமல்ல, அது முதலாளித்துவச் சமூகத்தின் எல்லா உறவுகளையும், கூறுகளையும் பகுப்பாய்வு செய்கிறது என்று சொன்னதோடு இலக்கிய நயம் நிறைந்த பேரிலக்கியமாகும்.

முழுமையான கலைப் படைப்பு என்று விஞ்சி சொன்ன சொற்கள் மின்னல் கீற்றுகளாக நினைவில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.

அப்போதுதான் அப்பா ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களையும் எப்படி காரல் மார்க்சு தோய்ந்து படித்திருக்கிறார் என்று சில மேற்கோள்களையும் கோடிட்டு காட்டினார்.

கூட்டத்திற்குப் பிறகு என்னை தொடர்ந்து DAS Capital ஆங்கில நூலினை வரிக்கு வரி உரக்கப் படிக்கச் சொல்லி கேட்டார்.

அந்த நினைவு அடுக்குகளோடு
கடந்த பிப்ரவரி திங்கள் 6.2.26 வெள்ளிக்கிழமை காலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருத்கரங்களால் சென்னை அருங்காட்சியகத்தில் மாமேதை காரல் மார்க்சின் திருவுருவச்சிலை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு மார்க்சின் நினைவாக கண் கவர் கண்காட்சியினைக் கண்டு மகிழ்ந்தேன்.

திருவுருவச் சிலையின் பீடத்தில் மாமேதையின் வாழ்வுச்சுருக்கத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்வதற்குரிய அருமையான வாய்ப்பு கிட்டியதை எண்ணி நெகிழ்ந்தேன்.

கல்வெட்டு வரியின் தமிழாக்கம் பின்வருமாறு

கார்ல் மார்க்ஸ்
(1818-1883)

கார்ல் மார்க்ஸ்,

1818-ம் ஆண்டு
மே 5-அன்று பிரஷ்யாவின் டிரையர் நகரில் பிறந்தார்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சிறந்த தத்துவ மேதையாகவும், பொருளாதார வல்லுநராகவும் புரட்சிகர சிந்தனையாளராகவும் திகழ்ந்த இவரது கருத்துக்கள் உலகின் அரசியல் பொருளாதார போக்கையே மாற்றியமைத்தன.

முதலாளித்துவ விமர்சகரான இவர்,வர்க்கப் போராட்டமே வரலாற்றின் இயக்குசக்தி என்பதை உலகுக்கு உணர்த்தியதுடன் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற கருதுகோளை உருவாக்கினார்.

1848-ல் பிரெட்ரிச் ஏங்கல்சுடன் இணைந்து பொதுவுடைமைச் சித்தாந்தத்தை வெளியிட்டதுடன், சுரண்டலை ஒழிக்க பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கு உரக்க குரல் கொடுத்தார்.

இவரின் டாஸ் கேபிடல்’ என்ற ஆகச்சிறந்த படைப்பு முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்து ஆய்வு செய்ததுடன் அதன் எதிர்கால வீழ்ச்சியையும் கணித்தது.

மார்க்ஸின் கோட்பாடுகள் உலகளாவிய சோசலிச இயக்கங்கள், புரட்சிகள் மற்றும் வர்க்கப் பாகுபாடற்ற சமூக அமைப்பிற்கு ஊக்கமளித்ததுடன், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகநீதி கொள்கைகளில் நீடித்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

உலக அரசியல் மற்றும் வர்க்கப் போராட்ட வரலாற்றில் தனியிடம் பெற்றுத்திகழும்
கார்ல் மார்க்ஸ் 1883-ம் ஆண்டு மார்ச் 14-ம் நாள் இயற்கை எய்தினார்

KARL MARX
(1818-1883)

Karl Marx, the German philosopher, economist and revolutionary thinker was born in Trier, Prussia on the 5th of May 1818 and his ideas have reshaped the world.

A critique of capitalism, exposing class struggle as the driving force of history, he developed the concept of historical materialism.

Co-authoring the Communist Manifesto with Friedrich Engels in 1848, he called for proletarian unity to overthrow exploitation.

His magnum opus,
Das Kapital, analyzed capitalism’s contradictions and predicted its eventual collapse.

Marx’s theories inspired global socialist movements, revolutions and the pursuit of a classless society, leaving an enduring legacy on politics, economics and social justice.

Karl Marx left this world on 14th March, 1883.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *