”
Arul.2009/FB/#6898
செய்தி வெளியீடு எண்: 608
நாள் : 06.03.2026
செய்தி வெளியீடு
தமிழ்ப் பெருமாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு
மலர் வணக்கம் நிகழ்ச்சி 08.03.2026 (ஞாயிற்றுக்கிழமை)
ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும்.
‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பது போல ஔவை முதல் அறிவெல்லாம் என்று அறிவுக்கே உரிய பெயராக ஒளவையார் ஆண், பெண், இளைஞர், முதியர் ஆகிய எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார்.
அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப்புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் ஔவையார். உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெண்மையர் திலகமாகப் பெருமை கொண்டவர் ஔவையார் ஆவார்.
மக்கட் சமுதாயம் சிறக்க மாண்புமிகு நீதிநெறிக் கருத்துக்களை வழங்கி உலகம் உள்ளளவும் தமிழின் பெருமையை நிலை நிறுத்திச் சென்றுள்ள புலவராக ஔவையார் திகழ்ந்து வருகிறார். இத்தகைய ஒளவைப் பெருமாட்டிக்குச் செய்யப்படும் சிறப்பு தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் செய்யப்படும் சிறப்பாகும்.
உலக மகளிர் நாளான 08.03.2026 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மேயர், துணை மேயர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Add a Comment