POST: 2026-03-07T08:52:23+05:30

”
Arul.2009/FB/#6897

செய்தி வெளியீடு எண்: 592

நாள்: 05.03.2026

செய்தி வெளியீடு

கனவு இல்லத் திட்டத்தின் கீழ் மூன்று எழுத்தாளர்களுக்கு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கி,

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆக்கங்களை எளிய தமிழில் மக்கள் பதிப்பாக மொழிபெயர்த்து மூன்றாம் கட்டமாக 73 தொகுதிகளை வெளியிட்டு,

நினைவில் வாழும் தமிழறிஞர்கள் திரு. வே.ஆனைமுத்து மற்றும்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கி
நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை குடும்பத்தினருக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 4.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கனவு இல்லத் திட்டத்தின் கீழ்,
முனைவர் திருமதி தாயம்மாள் அறவாணன்,
திரு. பொன்னீலன் (எ) பக்தவத்சலம் பி.எஸ்.கே. மற்றும் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகிய மூன்று எழுத்தாளர்களுக்கும்
4 கோடியே 58 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்புக்கான ஆவணங்களை வழங்கினார்.

மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆக்கங்களை எளிய தமிழில் மக்கள் பதிப்பாக மொழிபெயர்த்து மூன்றாம் கட்டமாக 73 தொகுதிகளை வெளியிட்டு,

நினைவில் வாழும் தமிழறிஞர்கள் திரு. வே.ஆனைமுத்து மற்றும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை குடும்பத்தினருக்கு வழங்கினார்.

கனவு இல்லத் திட்டத்தின் கீழ் மூன்று எழுத்தாளர்களுக்கு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குதல்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது (தலைசிறந்த தமிழ்ப் படைப்பிற்கு), தொல்காப்பியர் விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, உலகளாவிய நோபல் விருது பெற்ற விருதாளர்களுக்குக் கனவு இல்லத் திட்டம் வாயிலாக உயர் வருவாய்ப் பிரிவினருக்கான குடியிருப்பு வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 3.06.2021 அன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2021-2022ஆம் நிதியாண்டில்
கவிஞர் புவியரசு (எ)
சு. ஜகன்னாதன்,
முனைவர் கு. மோகனராசு,
கவிஞர் ஈரோடு தமிழன்பன் (எ)
ந. செகதீசன்,
திரு. பூ. மாணிக்கவாசகம்,
திரு. வெ. அண்ணாமலை,
முனைவர்
இ. சுந்தரமூர்த்தி,
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், திரு. சோ. தர்மராஜ்,
முனைவர் மா. இராமலிங்கம் ஆகிய 9 அறிஞர்களுக்கும்,

2022-2023ஆம் நிதியாண்டில் முனைவர் பொன். கோதண்டராமன், திரு. சு.வெங்கடேசன்,
முனைவர் ப. மருதநாயகம்,
முனைவர் இரா. கலைக்கோவன், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், திரு. கா. ராஜன்,
திரு.ஆர்.என். ஜோடிகுரூஸ்,
திரு.சி. கல்யாணசுந்தரம்
ஆகிய 8 அறிஞர்களுக்கும்,

2023-24ஆம் நிதியாண்டில்
திரு. நாஞ்சில் நாடன் (எ) சுப்ரமணியம் கணபதி,
திரு.இந்திரா பார்த்தசாரதி, முனைவர் க. இராமசாமி
ஆகிய 3 அறிஞர்களுக்கும்,

2024-25ஆம் நிதியாண்டில் எழுத்தாளர் தேவிபாரதி (எ) ந. ராஜசேகரன்,
திருமதி சி.எஸ். இலட்சுமி (எ) அம்பை ஆகிய இருவருக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது.

தற்போது 2025-26 ஆம் நிதியாண்டிற்கு 2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற
முனைவர் திருமதி தாயம்மாள் அறவாணன்,
1994ஆம் ஆண்டிற்கான
“புதிய தரிசனங்கள்” எனும் நூலிற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற
திரு. பொன்னீலன் (எ) பக்தவத்சலம் பி.எஸ்.கே.,
2024-ஆம் ஆண்டு “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” எனும் நூலிற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி
ஆகிய 3 அறிஞர்களுக்கு
4 கோடியே 58 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்புக்கான ஆவணங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் வழங்கினார்.

இதுவரை மொத்தம் 25 எழுத்தாளர்களுக்கு 29 கோடியே 64 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கனவு இல்லம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில்
மக்கள் பதிப்பாக மொழிபெயர்த்து மூன்றாம் கட்டமாக 73 தொகுதிகள் வெளியிடுதல்

“இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும், முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

இதற்காக அரசால் ஐந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்” என மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் 2023-2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு,

அந்த அறிவிப்பை தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக மூன்று ஆண்டுகளில் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மொழிபெயர்ப்பட்டு 10 தொகுதிகளை முதல் கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 13.01.2025 அன்று வெளியிடப்பட்டன.

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, 17 தொகுதிகள் 14.8.2025 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக, அம்பேத்கர் நடத்திய மராத்தி இதழ்களில் வெளிவந்த கடிதங்கள், அறிக்கைகள் மற்றும் பல பயனுள்ள பனுவல்கள் தற்போது மராத்தியிலிருந்து நேரடியாக தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் செம்மையாகவும் விரைவாகவும் நடந்தேறி அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மொத்தம் உள்ள 100 தொகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 27 தொகுதிகள் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது எஞ்சியுள்ள 73 தொகுதிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.

நினைவில் வாழும் தமிழறிஞர்கள் திரு. வே.ஆனைமுத்து மற்றும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கி நூலுரிமைத் தொகை வழங்குதல்

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு
இதுவரை 195 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு
15.82 கோடி ரூபாய் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது,

இதில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 139 தமிழறிஞர்களுக்கு 9.71 கோடி நூலுரிமைத் தொகையும்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் 37 அறிஞர்களின் 1802 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு 4.25 கோடி ரூபாய் நூலுரிமைத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்து நூல்களும் நூலுரிமைத்தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தமிழறிஞர் திரு. வே.ஆனைமுத்து

திரு.வே.ஆனைமுத்து அவர்கள் அன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெரம்பலூர் வட்டம், முருகன்குடி எனும் சிற்றூரில் 21.06.1925இல் பிறந்தார்.

தந்தை பெரியாரின் தன்மான இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் 1952 முதல் தந்தை பெரியார் நடத்திய பெரும்பாலான கூட்டங்களில் பங்குகொண்டார்.

11.01.1957இல் ‘குறள்முரசு’ எனும் கிழமை இதழைத் தொடங்கினார்.

1957இல் நடைபெற்ற அரசியல் சட்ட எதிர்ப்புக் கிளர்ச்சியில் பங்குகொண்டு 18 திங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றார்.

1973-இல் திருச்சியில் பாவேந்தர் அச்சகத்தை நிறுவினார்.

1974-இல் சிந்தனையாளன் எனும் கிழமை இதழையும் 1976-இல் பெரியார் சம உரிமைக் கழகம் என்ற புதிய இயக்கத்தையும் தொடங்கினார்.

1979-இல் அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், மலைவாழ் மக்கள், மதச் சிறுபான்மையினர் பேரவை மற்றும் பெரியார் சம உரிமைக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவினை தில்லி மாநகரில் நடத்திய பெருமைக்குரியவர்.

இவரின் தொகுப்பு நூலான ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்
’ 20 தொகுதிகளாக மொத்தம் 9,300 பக்கங்களையும் திரு. வே. ஆனைமுத்து அவர்களின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் தொகுத்து வெளியிடப்பட்ட ‘ஆனைமுத்து கருத்துக் கருவூலம்
’ 16 தொகுதிகளாக மொத்தம் 5,700 பக்கங்களையும் கொண்டுள்ளன.

இத்தகைய சிறப்பினைப் பெற்ற திரு.வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு நேர்வாக அவரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களான
திருமதி அரி.தமிழ்ச்செல்வி, திரு.ஆ.பன்னீர்செல்வம், திரு.ஆ.வெற்றி,
திரு.ஆ.வீரமணி,
திருமதி ஆ.அருள்மொழி,
திரு. ஆ.கோவேந்தன்
ஆகியோருக்கு நூலுரிமைத்தொகை 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்ற ஊரில் 28.09.1933 அன்று பிறந்தார்.

ஈரோடு தமிழன்பன் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், சிறுகதைகள், புதினம், நாடகம், கட்டுரைகள், திறனாய்வு /ஆராய்ச்சி நூல்கள், மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட 135 நூல்கள் எழுதியுள்ளார்.

ஈரோட்டில் மதரசா இசுலாமிய உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர், சென்னைப் புதுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

1990-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பாரதிதாசன் விருதையும் 2004-இல் “வணக்கம் வள்ளுவ” என்னும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருதையும் பெற்றவர்.

கவிஞர், சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர், செய்தி வாசிப்பாளர், அரிமாநோக்கு இதழாசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.

மேலும், இவர் தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இத்தகைய சிறப்பினைப் பெற்ற ஈரோடு தமிழன்பன் (ந. ஜெகதீசன்) அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு அவரின் வாழ்க்கைத் துணையான திருமதி தி.பா.சாந்தகுமாரி அவர்களுக்கு நூலுரிமைத்தொகை 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன்,
தலைமைச் செயலாளர்
திரு.நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன் இ.ஆ.ப,
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள்,
வல்லுநர் குழு உறுப்பினர்கள் – புலவர் செந்தலை ந. கவுதமன், பேராசிரியர் வீ. அரசு,
முனைவர் மு. வளர்மதி,
திரு. அ.மதிவாணன்,
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த திரு சிவக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
••••••••••••••••

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *