POST: 2026-02-19T08:37:22+05:30

”
Arul.2009/FB/#6881

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலைக்கு
மலர் வணக்க நிகழ்ச்சி 19.02.2026

செய்திக்குறிப்பு

தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் (19.02.1855 – 28.04.1942) அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பிப்பிரவரித் திங்கள் 19ஆம் நாளன்று தமிழ்த் தாத்தாவின் திருவுருவச் சிலைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டு வருகிறது.

வான்புகழ் தமிழையும் வங்கக் கடற்காற்றையும் தமிழ் மூச்சுடன் உலகுக்கு உவந்தளித்த மகாமகோபாத்தியாய, மகாவித்துவான் உத்தமதானபுரம் வே. சாமிநாதையர் – டி.லிட் அவர்களின் 172ஆம் பிறந்தநாளான 2026 பிப்ரவரித் திங்கள் 19ஆம் நாளன்று (வியாழக்கிழமை) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் எழுபத்து எட்டு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட திருவுருவச் சிலைக்கு காலை 9.15 மணிக்கு மலர்வணக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திராவிட வித்யாபூஷணம் உ.வே. சாமிநாதையர் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் ஐந்தாண்டுக் காலம் பயின்று தமிழறிஞராக மிளிர்ந்தார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த உ.வே.சா. அவர்கள், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் (1903 – 1919) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

அழிந்து போகும் நிலையில் ஓலைச் சுவடிகளிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றையும் தேடித்தேடி, அச்சிட்டுப் பதிப்பித்தார். அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தார்.

90க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார்.

பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் ஐந்து நூல்கள், சீவகசிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களையும் பல்வகை சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்தார்.

தாம் பதிப்பித்த ஒவ்வொரு நூலிலும் தம் புலமை மாட்சியை முன்னுரையில் தெளிவாகப் புலப்படுத்தினார்.

குறுந்தொகைக்கு உ.வே.சா. உரையெழுதிய பொழுது அவருக்கு வயது எண்பத்திரண்டு. நூறுப் பக்கத்தில் ஆராய்ச்சி முன்னுரை எழுதியிருப்பது பதிப்பிற்கு அணிகலனாகத் திகழ்கிறது.

உ.வே.சா. ஒரு பல்துறைக் களஞ்சியம், உரையாசிரியர், உரைநடை ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், பேராசிரியர், பாடலாசிரியர், இசைக்கலைஞர் எனப்பல பாங்குகளில் தம் தலைமை மாட்சியை நிறுவியவர்.

செந்தமிழ்த் திலகமாய்த் திகழ்ந்த அவரின் நினைவு நீங்காது நிற்க அவர் மறைந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவர் பணியாற்றி ஓய்வு பெற்ற சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தின் வாயிலில் அவரது தமிழ்ப்பணியைப் போற்றும் விதமாக 1948, மார்ச் 7 ஆம் நாளன்று உ.வே.சா. வின் உருவச்சிலை நிறுவப்பட்டது.

அதில் அவர் வாழ்நாளில் பெற்ற பாராட்டுகள் யாவும் குறிக்கப்பட்டதுடன் மகாகவி பாரதியாரின் வாழ்த்துப் பாடலின் இறுதி இரு வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.

உ.வே.சாமிநாதையரின் நினைவினைப் போற்றும் வகையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு உயர் அலுவலர்களும், தமிழறிஞர்களும், பொதுமக்களும் மலர் வணக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான முன்னெடுப்புகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் விழா

அழைப்பிதழ்

நாள்: 19.02.2026, வியாழக்கிழமை

இடம்: அரசு கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை.

“உ.வே.சாமிநாதையர் பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும்!”

10.12.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

கருத்தரங்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து

10.30 – 01.00 பி.ப

தலைமை : தமிழவேள் சிவாலயம் ஜெ.மோகன்

தமிழ் தந்த பெருமை

ஐங்குறுநூற்றில் உவே.சா.வின் உரைத்திறன் – பேராசிரியர்.இரா.பச்சியப்பன்

உ.வே.சா.என்றொரு தமிழ் வரலாறு – முனைவர் .பா.இரவிக்குமார்

உ.வே.சா. இறப்பின்றித் துலங்கும் ஆளுமை – முனைவர் சுடர்விழி

உ.வே.சா.வின் ஏக்கமும் நம்பிக்கையும் – முனைவர்.திருமூலர் முருகன்

உ.வே.சா.வின் கடிதங்கள் – முனைவர் .வா.மு.சே.ஆண்டவர்

உ.வே.சா.வும் வ.உ.சியும் – முனைவர் இரா. வெங்கடேசன்

பட்டிமன்றம்

02.00 பி.ப. – 03.30 பி.ப

தலைப்பு

உ.வே.சா அவர்களின் தன்னிகரற்ற நெடும்புகழ் ஓங்கி இருப்பது தேடி அலைந்த உழைப்பிலா! தேன் தமிழ்ப் பதிப்பிலா!

நடுவர்

முனைவர் சொற்கோ இரா.கருணாநிதி

தேடி அலைந்த உழைப்பிலா!

முனைவர் கா. செல்லதுரை

முனைவர் ச.சௌமியா

திரு செ. மணிகண்டன்

தேன் தமிழ்ப் பதிப்பிலா!

முனைவர் கை.சங்கர்

திரு.சி.உதயக்குமார்

செல்வி மு.ஆமினா

நிறைவு விழா

04.00 பி.ப

வரவேற்புரை

ஔவை அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

வாழ்த்துரை

திரு. வே. இராஜாராமன் இ.ஆ.ப.,

அரசு செயலாளர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் காசோலைகள் வழங்கி விழாப்பேருரை

திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள்

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

விழாச் சிறப்புரை

திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள்,

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள்,

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்

திரு. தங்கராஜ் அவர்கள்,

முதல்வர், அரசுகலைக் கல்லூரி, நந்தனம், சென்னை

நன்றியுரை

திருமதி கு.ப. சத்தியபிரியா,

துணை இயக்குநர் (இ). தமிழ் வளர்ச்சித் துறை

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *