POST: 2026-01-29T08:58:15+05:30

”
Arul.2009/FB/#6860

ஞானத்தில் தம் பேச்சு;
பிரேமத்தில் சுந்தர தமிழ்ப்பேச்சு!
எங்கே கேட்போம் இனி ?

பெரும்பேராசிரியர் வரிசையில் முதலிடத்தில் வைத்து எண்ணத்தக்க பெருமை வாய்ந்தவர் இலக்கியமாமணி தெ. ஞானசுந்தரம்.
(24.9.1941-25.1.2026)

அவர், ஒருவரைப் பாராட்டினார் எனில், அப்பாராட்டினைப் பெற்றவர், உண்மையில் சிறப்புடைப் பெரும்பண்பு பலவற்றைப் பெற்றவராகவே இருத்தல் வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, வடமொழி, மலையாளம் முதலிய மொழிகளிலுள்ள இலக்கியச் செய்திகளையும் மாண்புற ஆய்ந்து, திண்ணமான எண்ணங்களைக் கொண்ட நுண்மாண் நுழைபுல மிக்க பேரறிஞர் ஆவார்.

பேராசிரியர் ஞானசுந்தரம் சென்னைக்கு வந்த பொழுது வரவேற்று, பச்சையப்பன் கல்லூரியில் இணைவதற்குப் பெரிதும் உதவியவர் நினைவில் வாழும் என் மாமா பேராசிரியர் இரா.குமரவேலன் ஆவார்.

நேர்முகத்திற்குப் பிறகு சைதாப்பேட்டையில் தங்குவதற்கு வாடகை இல்லத்தையும் ஒழுங்கு செய்ததோடு பிறகு மாமா சேத்துப்பட்டினில் தங்கியிருந்த அருணாச்சல கிராமணி தெருவில் தம் வீட்டிற்கு அருகிலேயே பச்சையப்பன் கல்லூரியின் காசாளர் பாஷ்யம் அவர்களுடைய இல்லத்தில் வாடகை ஒப்பந்தமும் செய்து தந்ததெல்லாம் நினைவில் மணக்கும் நிகழ்வுகளாகும்.

எந்தையார் ஔவை நடராசன் 1973 முதல் 1993 காலகட்டங்களில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இலக்கியப் பட்டிமன்றங்கள் பலவற்றிலும் நடுவராக இருந்த அவையங்களில் ஓர் அணித்தலைவராகப் பேராசிரியர் ஞானசுந்தரம் உறுதியாக இருப்பார்.

அப்பா அடிக்கடி சொல்வார்:
“என் பேராசிரியர் மு.வ. அவர்களுக்கு மூன்று மகன்;

என் இனிய நண்பர் பேராசிரியர் சி.பா. அவர்களுக்கும் மூன்று மகன்;

பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் அவர்களுக்கும் மூன்று மகன்;

பேராசிரியர் தி இராசகோபாலன் அவர்களுக்கும் மூன்று மகன்;

தனக்கும் மூன்று மகன் என்று சொல்லிச் சொல்லி மகிழ்வார்.

பேராசிரியர் ஞானசுந்தரம் அவர்களின் புலமை, பொறுமை,
நெறிமாறாமை, பிறரறியாவண்ணம் துன்பத்தைத் தாங்கல்,
அன்பு பிறழாமை முதலிய பண்புகளை அப்பா அடிக்கடி என்னிடம் சொல்லிய சொற்கள் என் நினைவில் நீங்காமல் உள்ளன.

இலக்கியத்தில் எல்லோரும் பயின்றிராத நூல்களையெல்லாம் பயின்றிருந்தார்; வடமொழியில் வன்மை பெற்றார்; செய்யுளமைப்பினில் இனிமை தரக்கூடிய நுண்ணிய இயல்புகளையெல்லாம் பலபடியாக ஆராய்ந்து சில இலக்கணங்களைத் தனக்குள் வகுத்து வைத்திருந்தார்;

பேராசிரியர் ஞானசுந்தரம் அவர்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பன் என்னும் கவிதைச் செங்கரும்பை செவ்வையாகச் சுவைத்த அறிஞர்.

திருமுருகாற்றுப்படையினையும் முல்லைப் பாட்டையும் அடிபிறழாமல் மனப்பாடமாகவே சொல்லும் திறம் வாய்ந்தவர்.

வைணவத் தமிழ் ஆய்வுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் ஒப்படைத்து உயர்ந்தார்.

நூல் நிலையங்களைத் துருவி, பல செய்திகளையும் அறிந்திருந்தார்.

தாம் திரட்டிய நூல்களை உ வே சா. நூலகத்திற்கும், கந்தசாமி நாயடு கல்லூரி நூலகத்துக்கும் உவகையுடன் வழங்கி மகிழ்ந்தார்.

பெரிய புராணத்தின் பெருமைகளைச் சொற்பொழிந்து கொண்டிருந்த பொழுதே நலக்குறைவு மிகுந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தம் இன்னுயிர் நீத்தார்
என்ற செய்தியைக் கேட்டபோது, அப்பா அடிக்கடி சொல்லும் ஆங்கிலத் தொடர் தான் என் நினைவிற்கு வந்தது
I propose to be busy and reading and speaking on stages as long I live என்பதே அத்தொடர்.

அத்தொடருக்கு ஏற்ப, பேராசிரியர் அவர்களின் வாழ்வும் நிறைவாகவே இருந்தது.

இவருடைய கட்டுரையில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு ஓவியமாகும்.

25.9.25 அன்று தினமணியில் தேடினாலும் கிடைக்காத திரவியம் என்ற என் கட்டுரையைப் படித்துவிட்டுத் தலைப்பு மிக அருமை என்று என்னைப் பாராட்டினார்;

தவறாமல் என் புலனத்தில் தீபாவளிக்கும்,
ஆங்கிலப்புத்தாண்டுக்கும், பொங்கலுக்கும் தான் வரைந்த மரபார்ந்த வாழ்த்துக் கவிதைகளை அனுப்பி வைத்ததை எண்ணி நெகிழ்கிறேன்.

பேரறிவும்-பெரும் புலமையும் மிளிர வாழ்ந்தவரைப்
பறிகொடுத்து விட்டோமே!

துயரத்துடன்…

ஔவை அருள்.
29.1.26

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *