Arul.2009/FB/#6850
விதை முளைத்த அதே மண்ணில்… இன்று விழுதாய் வந்து வணங்கிய தருணம்!
காலம் எத்தனையோ வியக்க வைக்கிற, அதே சமயம் மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்களை நமக்காகச் சேமித்து வைத்திருக்கிறது.
அப்படியொரு நெகிழ்வான தருணம் கடந்த ஆண்டு 06.11.2025 அன்று அண்ணாமலை நகர், இராணி சீதையாச்சி மேல்நிலைப் பள்ளியில் எனக்கு வாய்த்தது.
இது வெறும் பள்ளிக்கூடம் மட்டுமல்ல; என் தந்தை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் மேனாள் அரசு செயலருமான மூதறிஞர் ஔவை நடராசன் அவர்கள் தம் இளமைக்காலத்தில் அகரம் பழகி, அறிவுத் தாகம் தீர்த்த கல்வித் தாய்வீடு.
எந்த மைதானத்தில் என் தந்தை சிறுவனாய் ஓடியாடித் திரிந்தாரோ, எந்த வகுப்பறைகளில் அமர்ந்து நாளைய தமிழிலக்கியத் தியாகமாய் தன்னைச் செதுக்கிக் கொண்டாரோ, அதே பள்ளிக்கு , தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக, சிறப்பு விருந்தினராகச் சென்று உரை நிகழ்த்தும் பேறு எனக்குக் கிடைத்தது.
“தந்தை மகற்காற்றும் நன்றி” என்பதை விட, ஒரு தந்தை பயின்ற பள்ளி, அவர் மகனை அழைத்துச் சிறப்பிக்கிறது என்பது, அந்தத் தந்தைக்குச் செய்யும் மிகப்பெரிய மதிப்பாகவே யான் கருதுகிறேன்.
அவர் வகித்த உயர்ந்த பொறுப்புகளின் நிழலிலும், அவர் விட்டுச் சென்ற தமிழ்ப்பணியின் தொடர்ச்சியாகவும், பள்ளியின் மேடையில் நின்றபோது, அதிசயமானதோர் உணர்வும், இனம் புரியாத ஒரு நிறைவும் என்னை ஆட்கொண்டன.
காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது… ஆனால், நினைவுகள் மட்டும் அப்படியே உறைந்து கிடக்கின்றன.
அப்பாவின் மூச்சுக்காற்றுக் கலந்த இந்த வளாகத்தில், இலக்கிய மன்றச் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழ் ஆர்வலர்களிடையே உரையாடியது, என் வாழ்வின் பொன்னேடுகளில் பதிக்கப்பட்ட நிகழ்வாகும்
இச்சிறப்புமிகு வாய்ப்பினை நல்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் முதுமுனைவர் அரங்க பாரி அவர்களுக்கும் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. பேர்லின் வில்லியம்ஸ் அவர்களுக்கும், உதவித் தலைமையாசிரியர் மற்றும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
வேர்கள் ஊன்றிய மண்ணில், விழுதுகள் வந்து வணங்கிய தருணம் இது!
நெகிழ்வுடன்……
. அருள்,

Add a Comment