Arul.2009/FB/#6848
திராவிடப் பல்கலைக்கழகத்தில்
ஓர் இனிய சந்திப்பு!
இந்தியாவிலேயே ஒரு மொழிக் குடும்பத்திற்காகச் செயற்படும் ஒரே பல்கலைக்கழகம் என்ற தனிப்பெருமைக்குரியதும்,
ஆந்திர மாநிலம் குப்பத்தில் அமைந்துள்ளதுமான திராவிடப் பல்கலைக்கழகத்திற்குக் கடந்த ஆண்டு (24.10.2025) வெள்ளிக்கிழமையன்று சென்று வந்தேன்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம். துரைசாமி அவர்கள் அவரது அலுவலகத்தில் என்னை வரவேற்றுச் சிறப்பித்ததைத் தொடர்ந்து, தமிழ்த்துறையில் முதுகலை (M.A.) வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி செல்வி. விஜயலட்சுமிக்கு, மேனாள் ஐ.ஏ.எஸ் அலுவலர் திரு. செல்லப்பா அவர்கள் பெயரில் வழங்கப்படும் ரூ. 13,000/-க்கான காசோலையை வழங்கிப் பாராட்டினேன்.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்துறை மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகையில், 1997ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் பேருதவியோடும், ஆந்திர மேனாள் முதல்வர் திரு. என்.டி.ராமராவ், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம், திரு. காசிப் பாண்டியன் மற்றும் திரு. சூ. செல்லப்பா ஆகியோரின் பெரு முயற்சியாலும் தென்னக மாநிலங்களின் கூட்டுழைப்பில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகளுக்கும், வரலாறு, பண்பாட்டிற்கும் அருந்தொண்டாற்றி, தற்போது 27 ஆண்டுகளை நிறைவு செய்து 28ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் மகத்தான பணியை நினைவுகூர்ந்ததோடு தமிழ்நாடு அரசு, தமிழ் பயில்வதற்காக வழங்கிவரும் உதவித்தொகைகள் பற்றியும் தமிழ்க் கல்வியின் மகத்துவத்தைப் பற்றியும் மொழியின் மாண்பைப் பற்றியும் மாணவ மாணவிகள் முன்பு பேசினேன்.
இந்நிகழ்வில், பதிவாளர் பேராசிரியர் கிரண் குமார், கல்விப்புல முதன்மையர் பேராசிரியர் சியாமளா மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் திரு. விஷ்ணு குமார், திரு. பத்மநாபன், திரு. கணேஷ் மூர்த்தி, திரு. மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
நிறைவாக, தமிழ்நாடு அரசு நம் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் அவர்களுக்குச் சரியாகச் சென்றடைகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டேன்.

Add a Comment