Arul.2009/FB/#6837
சோலை தமிழினியன் எழுதும் ‘வாசிப்பை நேசிப்போம்’
இலக்கியச்சோலை
சனவரி 2026
பொங்கல் சிறப்பிதழ்
நூல் : உரைவேந்தரின் உரைமாட்சி
ஆசிரியர் :
முனைவர் சோ.ந.கந்தசாமி
வெளியீடு :
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி,
சென்னை – 600 113.
அமெரிக்காவில் வாழும் திருமதி. வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் ‘உரைவேந்தர்’ ஒளவை துரைசாமியாரின் இலக்கிய உரைகளிலும், அவரின் தமிழ்த்தொண்டிலும் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்.
அவர், பேரறிஞர் ‘ஒளவை துரைசாமி அறக்கட்டளையினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டில் அமைத்து, ஆண்டுதோறும் வல்லுநர் ஒருவரை வரவழைத்து, ஒளவை துரைசாமி அவர்களின் நூல்களைப் பற்றிய ஆய்வுரையினை நிகழ்த்தி அதனை, அன்றே நூல் வடிவில் வெளியிடுவதற்கும் வழிவகை செய்து வருகிறார்.
அவ்வாறு, 2022ஆம் ஆண்டில் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள், ‘உரைவேந்தர்’ ஒளவை துரைசாமி அவர்களின் படைப்புகளைத் திறனாய்வு செய்து ‘உரைவேந்தரின் உரைமாட்சி’ என்னும் தலைப்பில் நூலினை வெளிக்கொண்டு வந்து அறக்கட்டளை சார்பில் உரையும் நிகழ்த்தியுள்ளார்.
நூலாசிரியர், பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் மதிப்புக்குரிய அறிஞர், ஆய்வாளர், கல்வியாளர்.
இவர், சங்க இலக்கியம், திருக்குறள், பக்தி இலக்கியம், இலக்கணம், இலக்கியக்கொள்கைகள் போன்ற துறைகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
‘தமிழ் இலக்கியம் என்பது இன்றைய வாழ்க்கையோடும் சமூகத்தோடும் உரையாடும் உயிருள்ள மரபு’ என்ற புரிதலை மாணவர்களிடமும் சான்றோர்களிடமும் விதைத்தவர்.
தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநர், முனைவர் ந. அருள் அவர்கள், ‘உரைவேந்தரின் உரைமாட்சி’ என்னும் நூலுக்கு அழகான வாழ்த்துரை வழங்கி, ‘பன்மொழிப் புலமை யும், பல்துறைப் பேரறிவும் பெற்றவர் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி’ என்று புகழாரம் சூட்டுகின்றார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள் தமது வாழ்த்துரையில், “‘உரைவேந்தரின் உரைமாட்சி’ நூலின் ஆசிரியர் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் முதுபெரும் தமிழறிஞர்.
நன்மாணக்கர் பலரை உருவாக்கியவர், பன்மொழிப்புலமை வாய்க்கப் பெற்றவர், பௌத்த தத்துவ ஆய்வில் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர், தமிழிலும் ஆங்கிலத்திலும் பற்பல ஆய்வு நூல்களை எழுதியவர்.
இவர்தம் நுண்மாண் நுழைபுலத்தினைப்
புலப்படுத் திக்காட்டும் ‘உரைவேந்தரின் உரைமாட்சி’ என்னும் நூலினை யாவரும் கற்றறிந்து பயன்பெற விழைகிறேன்” என்று பெருமிதம் கொள்கிறார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தமது அணிந்துரையில், “ஒளவை துரைசாமியாரின் உரைகளின் மேன்மையை விளக்க எழுதப்பட்டதே ‘உரைவேந்தரின் உரைமாட்சி’ என்னும் நூலாகும்.
இதனைப் படைத்துள்ள பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள் இலக்கியப் புலமை வளம் மிக்க தமிழறிஞர்.
‘உரைவேந்தரின் உரைமாட்சி’ நூலின் வாயிலாக ஒளவை துரைசாமியாரின் உரையின் மாட்சிகளை மிகச் சிறப்பாக, விளக்கமாக, தெளிவாக எடுத்தியம்பியுள்ளார்.
நூலாசிரியர்க்குப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பூரிப்படைகிறார்.
நூலாசிரியர் தமது எழிலான முன்னுரையில், ஒளவை துரைசாமியாரைப் பற்றி எழுதும் போது, “பழுத்த தமிழ்ப் புலமை படைத்த ஒளவை அவர்கள், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில் உடன் பணிபுரிந்த வடமொழிப் பேராசிரியர்களிடம் சமஸ்கிருதம், ‘பாலி’ மொழிகளைக் கற்று மேற்கோள் காட்டும் அளவிற்குப் போதிய புலமை பெற்றிருந்ததாகக் குறித்துள்ளார்.
சமணர்க்குரிய சார்ந்த பிராகிருத மொழியில் அந்நெறி முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 600) எழுதியுள்ள ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்னும் ‘எள்ளல்’ நாடகத்தினை இனிய தமிழாக்கம் செய்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆய்விதழில் 1950இல் வெளியிட்டிருத்தலால், பிராகிருத மொழியிலும் பிள்ளை அவர்கள் புலமை பெற்றிருந்தார் என்பது புலனாகும்” என்று எழுதுகிறார்.
ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன், இதில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘பாலி’ மொழி என்பது புத்தரின் ஆதிகாலத்துப் புனித மொழியாகும்.
புத்தரின் போதனைகள் பாதுகாக்கப்பட்டுள்ள இலக்கிய மொழியும்கூட.
தற்போது, இது பேசப்படும் மொழியன்று என்றாலும், ‘லாவோஸ்’ நாட்டில் புத்த துறவிகள் இதைப் பயின்று வருகின்றனர்.
பிராகிருத மொழி, கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் பல பகுதிகளில் பேசப்பட்டது.
பிராகிருதம் ஒரே மொழியன்று, பல மொழிகளின் குடும்பம்.
அப்படிப்பட்ட அரிய மொழிகளிலும் புலமை பெற்றவராக ஒளவை துரைசாமி பிள்ளை அவர்கள் ஒளிர்கிறார்.
அவர்மட்டுமன்றி அவர் மரபினரும் தொடர்ந்து வாழையடி வாழையாகத் தமிழறிஞர்களாகவே விளங்குகிறார்கள்.
அவர்தம், திருமகனார் முனைவர் ஒளவை நடராசனார் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராக, பாரத் பல்கலைக் கழக வேந்தராகச் சீரார்ந்த பணியாற்றியவர்.
மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, ‘பேரறிஞர் அண்ணா’ விருது உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்ற தமிழறிஞர், நாவன்மையால் நற்றமிழ் வளர்த்தவர்.
‘உரைவேந்தர்’ ஒளவை துரைசாமி அவர்களின், பெயரன் முனைவர் ஒளவை அருள் அவர்கள், இன்று தமிழ் வளர்ச்சித்துறையின் தேர்ந்த இயக்குநராகவும் நாடு போற்றும் நல்ல தமிழறிஞராகவும் திகழ்கிறார்.
ஒளவை துரைசாமி அவர்கள், தமிழ்ப்பேரறிஞர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர்.
பழந்தமிழ் நூல்களை எளிய, தெளிவான உரைகளால் பொதுமக்களிடம் கொண்டு சென்றவர்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் ‘வித்துவான்’ தேர்வில்
(1930ஆம் ஆண்டு) வெற்றி பெற்றவர்.
இவர், திருக்குறளுக்கு விளக்க உரை, சிலப்பதிகாரம், மணிமேகலை, நாலடியார், நான்மணிக்கடிகை, திருவாசகம் போன்ற நூல்களுக்கு உரைகள் எழுதியுள்ளார்.
தமிழின் உரை மரபை வளப்படுத்தியவர்.
அதனால், இராதா தியாகராசனார் தம் ஆசிரியப் பெருந்தகையின் உரைத்தன்மையைப் பாராட்டி ‘உரைவேந்தர்’ எனும் பட்டம் வழங்கி ‘தங்கப்பதக்கம்’ அளித்தார்.
தமிழ் உரையாசிரியர்களின் வரிசையில் ஒளவை துரைசாமி பிள்ளைக்குத் தனி இடம் உண்டு.
‘உரைவேந்தரின் உரைமாட்சி’ என்னும் நூல், ‘ஐங்குறுநூறு’ (மருதம்), ‘நற்றிணை’, ‘மணிமேகலை’ போன்ற செவ்வியல் இலக்கியங்கட்கு ஒளவை துரைசாமி பிள்ளை அவர்கள் வரைந்துள்ள உரைத்திறம் பற்றிய திறனாய்வுப் பேழை.
பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள், தமது சீரார்ந்த மொழிநடையில் திறனாய்வுையைப் பதிவுசெய்துள்ளார்.
ஒவ்வொரு செவ்வியல் இலக்கியங்கட்கும் அறிமுகம், முன்னுரை, அமைப்பு, தொகுப்பு, கூற்று, ஆங்காங்கே பழைய உரை, ஒளவை உரை என வழங்கி வாசகர்கள் வாசித்து, உள்வாங்கும் தன்மையை எளிமைப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக ஆய்வு மாணவர்களுக்குத் தமிழ் விருந்தே படைத்துள்ளார்.
இந்நூலின் முதல் திறனாய்வுக் கட்டுரை ‘ஐங்குறுநூறு’ (மருதம்) உரைத்திறம்’ ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் முதன்முதலில் எழுதிய உரை நூலிது.
எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றினைப் பல்வேறு ஓலைச்சுவடிகளை ஒப்பிட்டு நோக்கி டாக்டர் உ.வே.சா. அவர்கள் 1903இல் வெளியிட்டிருந்தார்.
அதன்பின், தமிழறிஞர்கள் பலர் உரை எழுதியிருக்கின்றார்கள்.
1938இல் உரைவேந்தர் ஒளவை துரைசாமி பிள்ளை ‘ஐங்குறுநூறு (மருதம்) உரைத்திறம்’ படைத்திருந்தார்.
இனி நூலிலிருந்து,
1. ‘ஐங்குறுநூறு மருதம் உரைத்திறம்’
முதற்பாடலின் முதற்பகுதியைக் காண்போம்,
‘வாழி ஆதன் வாழி அவினி!
நெல்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
எனவேட்டோளே யாயே!’
ஔவையின் உரை!
“ஆதன் வாழ்க; அவன் குடியிற் பிறந்த அவினி வாழ்க; நெல்மிக்கு விளைக; பொன் மிக உண்டாகுக என்று தலைவி இல்லறமே நினைத்து ஒழுகினள்”.
அவினி சேரமான்களில் ஒருவன் என்றும் ஆதன் (2) சேர மன்னர் சிலரின் குடிப்பெயர் என்றும் கூறி அகநானூற்றினையும் (216.14), புறநானூற்றினையும் (71.13) மேற்கோள் காட்டினார்.
வேட்டாள் வேட்டோள் என்றாதற்குத் தொல்காப்பிய விதியினையும் (தொல். சொல் 211) எடுத்துரைத்துள்ளார்.
2. நற்றிணை உரைத்திறம்
‘தோளும் அழியும் நாளும் சென்றென ; நீளிடை அத்தம் நோக்கி வாளற்றுக் கண்ணும் காட்சி தெளிவின ; என்நீத்து அறிவும் மயங்கிப் பிறிதா கின்றே : நோயும் பெருகும் : மாலையும் வந்தன்று யாங்கா குவன்கொல் யானே? ஈங்கோ சாதல் அஞ்சேன் ; அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவென் கொல் என் காதலன் எனவே. (397)
‘தோளும் அழியும் என்தோள்களும் மெலிந்து நலம் அழிந்தன ;
நாளும் சென்றன – தலைவர் குறித்த நாள்களும்
கழிந்தன…’
பாடலின் பொருண்மை:
என் தோள்களும் மெலிந்து நலம் அழிந்தன. தலைவர் குறித்த நாள்களும் கழிந்தன.
நீண்ட சுரத்திடையே அவர் வரும் வழியை நோக்கி நோக்கிக் கண்களும் ஒளியிழந்து காணும் திறன் குன்றின.
என் அறிவும் என்னின் நீங்கி மயங்கிச் செயலற்று ஒழிந்தது. காதற் காம நோயும் மிக்கு எழாநின்றது.
மாலைப்போதும் வந்துவிட்டது.
யான் என்னாவேனோ அறியேன். இவ்விடத்து நோய் கைம்மிகின், எய்தும் இறந்து பாட்டுக்கு அஞ்சேனாயினும், இறந்தால் மறு பிறப்பு வேறாகிவிடுமாயின், என் காதலனை மறந்தொழிவேனோ என்று அஞ்சுகின்றேன் (ஆதலால், அவர் பிரிவை ஆற்றியிருப்பேன், நீ கவலற்க) என்றவாறு.
‘தோளும் அழியும் ; நாளும் சென்றன ; அத்தம் நோக்கிக் கண்ணும் வாளற்றுக் காட்சி தவ்வின.
அறிவும் என் நீத்து மயங்கிப் பிறிதாகின்றது.
நோயும் ஏரும், மாலையும் வந்தன்று யாங்காகுவென்கொல் தோழி, ஈங்குச் சாதல் அஞ்சேன் சாவின் பிறப்புப் பிறிதாகுவதாயின், என் காதலனை மறக்குவென் கொல் என அஞ்சுவல் – எனக்கூட்டி வினைமுடிபு செய்க’ என்று சொற்பொருள் இயைபு நோக்கிப் பாடல் தொடர்களைப் பொருள் கொள்ளுதற்கு எளிமையாக ஔவை உரை அமைத்துக் கொடுத்திருத்தல் நோக்கத்தக்கது.
3. மணிமேகலை உரைத்திறம்
4.2. பின்னான்கு காதைகள்
சாத்தனார் மணிமேகலை காப்பியத்தினை முப்பது காதைகளில் பாடினார். காதை தழுவிய பாட்டு, இக்காப்பியத்தின் பதிகம், கதை
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனென்! என்று முப்பது காதையினை ஆறைம்பாட்டு என்று சுட்டியுள்ளது.
காவிரிப்பூம்பட்டினத்து வணிக மரபில் வந்த கோவலனுக்கும் கலைச்செல்வியாகிய மாதவிக்கும் பிறந்தவள் மணிகேமலை, கணவன் கொலையுண்ட பின் மாதவி தன் மகளுடன் போதி சத்துவர் ஆகிய அறவண அடிகளிடம் சரண்புகுந்து உபதேசம் கேட்டுத்துறவுபூண்டாள். அறச்செல்விமணிமேகலையினைப் பெரிதும் விரும்பி இறுதியில் காஞ்சனன் என்னும் விஞ்சையனால் கொலை செய்யப்பட்ட சோழ இளவரசன் உதயகுமரன் இறப்பிற்குத் தன்னைக் காரணம் காட்டி இராசமாதேவி மணிமேகலையைச் சிறைப்படுத்திக் கொடுமைப்படுத்தினள்.
மாதவியின் வேண்டுதலால் அறவண அடிகள் இராசமாதேவியை அணுகி நன்னெறி புகட்டி அவளை விடுவித்தனர். அப்போது, அறவண அடிகள்,
‘அரைசன் தேவியோ டாயிழை நல்லீர் புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் மறுபிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ பிறவறம் கேட்ட பின்னாள் வந்துனக்கு இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும்
முத்தேர் நகையாய்! முன்னுறக் கூறுவல்.’
(. 24.141-146)
என்று கூறி எழுதலும், மணிமேகலையும் மற்றவரும் வணங்கி வழியனுப்பினர்.
நூலின் நிறைவுரையில்…
‘சித்தாந்த கலாநிதி’ என்றும் ‘உரைவேந்தர்’ என்றும் அறிஞர்களால் பாராட்டப்படும் பேரறிஞர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் மணிமேகலை காப்பியத்தின் இறுதிக் காதைகளுக்கு உரை வரைந்திலரேல் அப்பகுதி மூடியே கிடக்கும் என்பதில் ஐயமில்லை.
அவற்றைத் தம் நுண்மாண் நுழைபுலத்தினால் விரிவாகவும் விளக்கமாகவும் ஆராய்ந்து வரைந்திருக்கும் உரைக்களஞ்சியம் யாவர்க்கும் எஞ்ஞான்றும் பயன் நல்குவதாகும்.
மணிமேகலை உரைத்திறம் பற்றிய இந்த இயலில் அவர்தம் உரையின் ஒரு சில பகுதிகள் பற்றிய ஆய்வுதான் மேற்கொள்ளப்பட்டது.
மணிமேகலை காப்பியம் நிலைத்திருக்கும் வரை உரைவேந்தர் ஔவையின் புகழ் ஒளிவீசிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
சான்றோர்களே!
நூலிலிருந்து மூன்று பகுதிகளை வாசித்திருப்பீர்கள்.
நூலின் முழுமையும் வாசித்தால் மகிழ் வீர்கள் என்பது திண்ணம்.
தமிழார்வலர்களுக்கு, குறிப்பாகத் தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு, இக்கட்டுரை மூலம் அடியேன் சொல்லவிரும்புவது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தமிழ் வளர்ச்சித்துறையும் இதுபோன்ற எண்ணற்ற தமிழ்ப் படைப்புகளை நூல்களாக வழங்கியிருக்கின்றன.
‘இலக்கியச்சோலை’ யின் இந்தப்பொங்கல் சிறப்பிதழை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுகொண்டிருக்கும் அங்கேயோ, அல்லது தமிழ் வளர்ச்சித்துறை அலுவலத்திலோ, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலோ இதுபோன்ற எண்ணற்ற நூல்கள் கிடைக்கும். வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

Add a Comment