1735439228796

நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!

ஔவை அருள்

செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு.

‘தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து’ என்னும் ஒளவை பிராட்டியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் தொண்டை நாட்டுச் செல்வமெனப் புலவரேறு ந.ரா. முருகவேள் நந்திபுரம் கிராமத்தில், திரு. இராமசாமி முதலியாருக்கும், திருமதி. சிவகாமி அம்மையாருக்கும் இளைய மகனாக 17-11-1924-இல் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், சௌந்தரராசன். தனித்தமிழ் இயக்கம் கண்ட பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகளாரின் மனங்கவர்ந்த நன் மாணவரானதால் ஆசிரியர் போலவே, தம் பெயரையும் முருகவேள் என்று மாற்றிக்கொண்டார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் (1947) பட்டமும், பண்டிதர் (1948) – மதுரை தமிழ் சங்கத்திலும், பி.ஓ.எல் (1951) மற்றும் எம்.ஓ.எல் (1957) பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். 1958-இல் எம்.ஏ. பட்டமும் சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவரது தமிழ்த்திருமணம் தவத்திரு. அழகரடிகள் தலைமையில் 11-07-1947 அன்று நடந்தது. சரசுவதி அம்மையார் வாழ்க்கைத்துணையானார்.

புலவரேறு முருகவேள் 16 ஆண்டுகள் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை உயர் நிலைப்பள்ளி, தாம்பரம் சென்னைக் கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ‘திருக்கோயில்’ இதழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இருபத்து இரண்டரை ஆண்டுகளாகத் (1962 செப்டம்பர் முதல் 1985 மார்ச் வரை) ‘திருக்கோயில்’ திங்களிதழில் இவர் எழுதியதுபோல் இனி யார் எழுத வல்லார்? இதழ் வரலாற்றில் இது பெருங்கொடையன்றோ?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *