============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 268)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..
(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 15)
******************************************************************
2. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு மாநாடுகளைவிட, இம் மாநாட்டில் 23 நாடுகளிலிருந்து பேராளர்களாகவும், பார்வையாளர்களாகவும் 1101 அறிஞர்கள் கலந்துகொண்டனர். தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள் நேர்த்தியாகக் கட்டி முடிக்கப்பட்ட பெரியதொரு மாநாட்டு அரங்கத்தில் ஆய்வரங்க நிகழ்ச்சிகள் தொடங்கியது அனைவராலும் பாராட்டப்பட்ட சிறப்பம்சமாகும்.
3. இம்மாநாட்டினையொட்டி, தஞ்சை நகர மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான இருப்பூர்தி மேம்பாலம், புறவழிச்சாலை, இருவழி இருப்பூர்திக் கீழ்ப்பாலம், புதிய பேருந்து நிலையம் போன்றவை போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டதுடன், மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான மக்கள் சிரமமின்றி வந்து கலந்துகொள்ளும் வகையில் தஞ்சை நகரின் மேம்பாட்டுத் திட்டங்களாகச் சாலைச் சீரமைப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டன.
4. தஞ்சை நகர மக்களின் வீட்டுவசதித் தேவைகளை ஓரளவிற்கு நிறைவு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட 867 வீடுகளில் மாநாட்டிற்கு வந்த பேராளர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் சிறப்பாகச் செய்து தரப்பட்டன. இம்மாநாட்டினையொட்டி, தஞ்சை அரண்மனையின் நான்கு புராதனக் கட்டடங்களைப் புதுப்பிக்கும் பணி இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையால் மேற்கொள்ளப்பட்டு, அவை புதுப்பொலிவுடன் மிளிர்கின்றன. தஞ்சை பெரிய கோயில் நிலையொளி விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு, இரவிலும் தன் எழில்மிகு கட்டடவமைப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம் பொலிவு பெற்று விளங்குகிறது. இம்மாநாட்டின் நினைவாகத் தஞ்சை நகரில் கட்டப்பட்டுள்ள இராசராசன் மணிமண்டபம், நினைவுக் கோபுரம், அலங்காரத் தோரண வாயில்கள் ஆகியவை என்றென்றும் தமிழக வரலாற்றில் நிலைபெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
Add a Comment