POST: 2020-01-02T10:24:44+05:30

**********************************************************************நான் எழுதிய “விளம்பர வீதி” நூலிலிருந்து ஒரு தகவல் தினமணி (24-12-2019) இளைஞர் மணி இதழில்….

**********************************************************************

உலக விளம்பரம் !
=================

ஊரோடும், உலகோடும் மக்கள் இணைந்து வாழ்வதற்குரிய வாய்ப்புகள் இப்போது மிக மிக அதிகமாகிறது. நேற்று அமெரிக்காவில் இருந்து வந்த நண்பர் கூறினார்: அவர் திடீரென்று மதியம் மூன்று மணிக்கு நண்பர் வீட்டிற்குப் போயிருந்தாராம். எதிர்பாராமல் வந்துவிட்டீர்களே என்று சொல்லி, பீங்கான் தட்டில் இரண்டு பிஸ்கட்டுகளும், ஒரு தேநீரும் கொண்டு வந்து வைத்தாராம். அப்போது அவர் சிரித்துக் கொண்டே சொன்னாராம். ”இந்த பீங்கான் சீனாவில் செய்தது, வைத்திருக்கும் பிஸ்கட் டென்மார்க்கைச் சார்ந்தது. இந்த தேநீர்க்குவளை லண்டனில் வாங்கிய பெல்ஜியம் கண்ணாடி! தேயிலைத்தூளோ இலங்கையினுடையது. கலந்த சர்க்கரை ஜாவாவைச் சேர்ந்தது. கலப்பதற்குரிய கரண்டி ஜெர்மனியைச் சார்ந்தது. ஒரு தேநீர் குடிப்பதற்குள் எத்தனை நாடுகள் கலந்துவிட்டன பாருங்கள்” என்றார் அந்த அமெரிக்க நண்பர்.

அந்த அளவுக்கு உள்ளூர்ச் சந்தை மாதிரி உலகச் சந்தை, பன்னாட்டுச் சந்தை, ஆசியாக் கூட்டு, ஐரோப்பிய இணையம் என்றெல்லாம் அங்காடி அகிலம் ஒரு பக்கம் விரிந்து வளர்கிறது.

கோடிக்கணக்கில் விற்பனையாகும் ரீடர்ஸ் டைஜஸ்ட் விளம்பரத்தால் வெற்றிப்பாதை இட்டிருப்பதை யாரும் மறக்க மாட்டார்கள். கோல்கேட் பற்பசையையும், கோகா கோலா சுவையையும் யாரும் மறுப்பதற்கில்லை.

– ‘சில பொருள்கள் உலக விளம்பரங்களைப் பெற்றிருக்கின்றன. இப்படி விளம்பர விவரங்கள் உலகை உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த அளவுக்கு இன்னும் கூட விளம்பரத்தால் விளைகின்ற பயன்களைப் பற்றி இன்னும் முழுமையான அளவுக்கு நம்நாட்டில் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

… ஒரு நிறுவனம் தன்னுடைய செயற்பாடுகளையும், வெற்றிகளையும் ஊரார்க்கு உணர்த்தியே ஆக வேண்டும். மறைவாக நமக்குள்ளேயே பங்கிட்டுக் கொள்வதில் பயனில்லை. திறமான வணிகமெனில் பல நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்று பாரதியின் வரிகளைக் கூட வணிகத்திற்காக வளைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.

ந.அருள் எழுதிய ‘விளம்பர வீதி’ என்ற நூலிலிருந்து…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *