POST: 2021-06-18T12:29:25+05:30

நிர்மலா சுரேஷ் – நினைவுத்துயர் !
(18.6.1950-27.5.2021)

கவிஞர் நிர்மலா சுரேஷ் மறைந்த நினைவுத் துயரம் நேற்றுத்தான் தெரிந்தது.

நிமிர்ந்த தோற்றமும் –
நேர்கொண்ட பார்வையும் –
திமிர்ந்த கல்வித்தெரிவும்
கொண்ட திருமதி நிர்மலா சென்னைக்கு வந்ததும் கம்பர் கழக விழாவில் தான் முதலில் பேசினார் .

பட்டிமண்டபக் கொடி பட்டொளி வீசிப் பறந்த அந்த ஆண்டுகளில் அவர் எங்களோடு முதன்மைப் பங்கு கொண்டார் .

ஹைகூ கவிதையை முதலில் ஆராய்ந்த புலமையாளர் .

மொழியும் வாழ்வும் அவர் எழுதிய அரிய நூலாகும் .

பேரறிஞர் அண்ணாவின் திருச்சி நண்பராகப் பேராசிரியர் இருதயராஜ் திகழ்ந்தார் ,அவர் திருமகளாரான திருமதி நிர்மலா சுரேஷுக்கு இயல்பான இனப்பற்றும் எழுச்சியும் மிளிர்ந்ததால் சென்னைக்கு வந்து அரசியலில் தலைப்பட்டார் .

தேர்தலிலும் நின்றார் .வென்றாரில்லை .

நண்பர் பக்தவத்சலமும் நானும் திருவான்மியூரிலிருந்த அவர்கள் இல்லத்தில் விருந்துண்டோம் .

அப்பப்பா ! அதிதீவிர சைவம் சமைக்க ஓர் ஐயரைத் தேடிப்பிடித்தேன் என்று புன்னகைத்தார் .

இன்றுதான் எங்கள் இல்லத்துக்கு ஐயர் ஒருவர் வந்தார் .

வாழ்வில் அவர் தொட்ட துறைகளில் எழுவதும் விழுவதுமாக இருந்தார் !

பிறகு கனடாவில் குடியுரிமை பெற்றுச் சென்றார் .

பத்தாண்டுகளுக்கு முன்னர் சென்னை வந்து மகன் திருமணம் நடத்தினார் .

உங்கள் வருகையை ஆர்வத்தோடு எதிர்பார்த்தபடியிருந்தேன் என்று பொங்கும் பரிவோடு உடலண்சு திருமணப் பூங்காவில் நெகிழ்ந்து பேசினார் .

கனடாவில் திருமதி நிர்மலா சுரேஷ் மறைந்த செய்தியைக் கவியரசர் ஏர்வாடியார் எழுதிய பிறகு தான் தெரிந்தது .

நண்பர் சுரேஷ் அவர்கட்கு என் ஆழ்ந்த இரங்கல் .

கவியரசி நிர்மலா அவர்களைப் போல மகளிர் பலர் நிமிர்ந்து வாழத் துணிய வேண்டும் .

நிர்மலாவின் நற்புகழ் தமிழக ஆய்வுலகில் என்றும் நின்று நிலவும் !

துயரத்தோடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *