POST: 2021-09-14T09:45:35+05:30

முரசொலி- 9.11.2021
பக்கம் 11

பேரறிஞர் மு வ வுக்குச் சிலை – அருட்செல்வர் நா .ம வுக்கு அரங்கம்

அடுக்கடுக்கான புது அறிவிப்புகள்

அலைஅலையாய்ப் புது வெள்ளம் !!

புலவர் உலகம் போற்றி மகிழ்கிறது .

ஒளவை நடராசன் பாராட்டுரை

நிதித்தொடர் அவைக் கூட்டங்களில் முதல்வர் எழுந்து நின்றாலேயே மாமழை பொழிகிறது !,

மக்களுக்குக் காதில் மகிழ்ச்சித்தேன் வழிகிறது .ஒன்றா இரண்டா !

பச்சையப்பர் கல்லூரிக்குப் படியேறிப் படிக்கச் சென்ற நாளிலே மு வ வைப் பார்த்தல் போதும் என்று தான் நாங்கள் மாமதுரையிலிருந்து முதுகலை பயில வந்தோம் !

ஆசிரியர் மு வரதராசனாரை யான் நீண்ட காலமாக அறிவேன்.

அவரை யான் முதன் முதலாக பார்த்தபோது அவர்தம் மலர்ந்த விழியும், கூரிய மூக்கும் ,பரந்த நெற்றியும், நீண்ட முகமும், நிமிர்ந்த பிடரியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன .

ஆசிரியர் வரதராசனார் பெருங்கலைஞராய் நாட்டை நல்வழியில் ஒம்புந் தொண்டராவார் என்று யான் நினைத்தது உண்டு.

அந் நினைவு பழுதுபடவில்லை !

அவர் இயற்றியுள்ள நூல்கள் நாட்டை நல்வழியில் ஓம்பி வருதல் கண்கூடு என்று தமிழ்த் தென்றல் திரு. வி. க , அறுபதாண்டுகளுக்கு முன்னர் மு.வ அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குப் படம்பிடித்துக் காட்டினார்.

அஞ்சன மேனி ,
உயர்ந்த தோற்றம் ,
கலை மிளிரும் கண்கள் ,
கனிவின் நிறைகுடம் ,
வாய்மையின் உறைவிடம்
– என்ற நிலையில் மு வ எங்கள் எதிரில் வகுப்பெடுக்க வந்தார் .

அந்நாளில் தமிழ்ப் படிக்கும் ஆர்வம் இளைஞர்பால் எழுந்ததே அறிவுக்கடல் மு வ வின் எழுத்தால் தான் .

மு வ வின் கதை நூல்கள் இல்லாத கரங்கள் – கரங்கள் அல்ல மரங்கள் என்று சொல்லி மகிழ்ந்தோம் .

மு வ எழுதிய நூல்களில் வரும் பெயர்களை ஆர்வலர் பலர் தம் மக்களுக்குச் சூட்டி மகிழ்ந்தனர் .

பாரி முனை என்று அவர் அழைத்த பெயர் இன்றும் அவரை வாழ்த்துகிறது

.அண்ணல் க த திருநாவுக்கரசு உருகி உருகி எழுதிய ஒரு நூல் அறிஞர் அறவாழி என்பதாகும் .

பேராசிரியர் மு வ என்ற பெயரைக் கூடச் சொல்லாத பணிவு .அறிஞர் மு வ படைத்த புதினங்களில் உலாவரும் புகழ்ப்பெரியாரின் பெயர் அறவாழி !

அந்தப் பெயரையே தம் நூலுக்குச் சூட்டினார் .

பேரறிஞர் அண்ணாவும் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் பச்சையப்பர் கல்லூரிக்கு வரும்போதெல்லாம் இது மு வ கல்லூரி தானே என்று முகமலர அகமலர வினவுவார்கள் .

அண்மையில் தலைமைச் செயலாளர் மு வ வின்
மொழி நூல் ,
மொழி வரலாறு
நூல்களைக் கேட்டார் என்று என் மகன் முனைவர் அருள் கூறினார் .

.அறுபதாண்டுகளுக்கு முன்பே எழுதிய நூல்கள் அவை .

இன்றும் புதுமையானவை .

நம் தமிழக முதல்வர் ஒப்பற்ற பொது நலப் பணிகள் ஆயிரம் ஆற்றுவதற்கு நடுவில் கட்சி ,கருத்து ,கசப்பு ,இனிப்பு வேறுபாடின்றிச் சான்றோர்களுக்குப் புகழ் சூட்டி வருவது அளவிறந்த பாராட்டைத் தருவதாகும் .

பேரறிஞர் மு வ சிலை திறப்பு – அருட்செல்வர் அரங்கம் – தலைவர் பி சுப்புராயனுக்குச் சிலை போன்ற எண்ணற்ற செயல்களை நிறைவேற்ற ஆணையிட்டுள்ளார்

முதல்வர் .

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் என்ற திருக்குறளின் நேர்வடிவம் ,
நெஞ்சைக்கவரும் தோற்றம் , நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் ,
நின்ற சொல்லர் நீடு தோன்றினியர் என்று தமிழக முதல்வரைப் புலவருலகம் போற்றி வாழ்த்துகிறது .

எங்கள் பேராசிரியருக்குச் சிலை என்று கேட்டு என் மனம் எக்களிக்கிறது .

தமிழுக்குத் தகும் உயர்வளிக்கத் தலைவன் தோன்றினான் என்று தமிழ்நாடே பாராட்டுகிறது .

அன்போடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *