POST: 2023-04-22T13:13:59+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !

பதிவுத் துறைத் தலைவர் அலுவலகத்தில் ஆட்சிமொழிச் செயலாக்க ஆய்வு குறித்து அரசு அலுவலர்கள் மத்தியில் 20.04.2023
வியாழக்கிழமையன்று,காலை 11.30மணிக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஒளவை அருள் அவர்களின் உரை வருமாறு…

அனைவரையும் இன்றைய காலைப்பொழுதில் உங்களையெல்லாம் காண்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

தமிழ் வளர்ச்சித் துறை நடத்துகின்ற ஆய்வுக்கூட்டம் என்பது, மிக நுட்பமான ஆய்வுக்கூட்டமாகும்.

ஆய்வுக்கூட்டத்தின் வாயிலாக எங்கெல்லாம், எப்படியெல்லாம் தமிழ் வழியில் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஆய்வு செய்வது தான் எங்களுடைய தலையாய நோக்கமாகும்.

பத்திரப்பதிவு அலுவலகம் வாயிலாக 86 விழுக்காடு தமிழில் தான் அனைத்துப் பணிகளையும் நீங்கள் செய்துகொண்டிருப்பது மிகவும் வரவேற்க்கத்தக்க, பாராட்டத்தக்க நிகழ்வாகும்.

எப்போதுமே எல்லோரும் வீட்டிலிருக்கும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் எல்லோருடைய வேட்கையும் நூற்றுக்கு நூறு எடுக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள்,

அதேபோலத்தான் தமிழ் வளர்ச்சித்துறையும் அந்த இலக்கை நோக்கிப் போகவேண்டும் என்பதுதான் எங்களுடைய விழைவு.

ஆனால், எனக்கு நன்றாக புரிகிறது, எங்கெல்லாம் ஆங்கிலம் வலியுறுத்தப்படுகிறது என்பதை நாம் நன்றாகத் தெரிந்துகொள்கின்றோம்.

சான்றாக வழக்கு மன்றங்களில் ஆங்கிலம் தான் அவர்கள் கேட்பதும் வழக்கறிஞர்கள் கேட்பதும்,

பலர் தங்களுடைய கடிதங்களையெல்லாம் எங்களுக்கு ஆங்கிலத்திலேயே வடிவமைத்துத் தந்து விடுங்கள் என்று கேட்பதை நாம் கண்கூடகப் பார்த்துக்கொண்டு தான் வருகின்றோம்.

நாம் ஆங்கிலத்தை தவிர்க்கவேண்டும் என்று நினைத்தாலும் பல இடங்களில் ஆங்கிலத்தினுடைய தேவையும் அதிகமாக சில இடங்களில் வருகிறது.

இன்றைக்கு நீங்கள் எல்லோரும் வருகைப்பதிவேட்டின் ஆளறி குறியீட்டைத்தான் பயன்படுத்தினாலும் எங்களுடைய அலுவலர்கள் கேட்டபொழுது உங்களுடைய ஒப்பம் தானாகவே தமிழில்தான் அமைந்ததைக் காணும்பொழுது மகிழ்ச்சி அடைகின்றேன்.

எனக்கு ஒரு விழைவு, பொதுப்பணித்துறை ஆய்வுக் கூட்டத்திற்கு சென்றபொழுது பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளரிடம் கேட்டுக்கொண்டேன்.

அதேக்கருத்தைத்தான் இன்று உங்கள் பத்திரப்பதிவுத்துறையில் வலியுறுத்த விரும்புகிறேன்.

உங்களுடைய ஆளுகைக்குள் இருக்கின்ற பற்றுச்சீட்டுக்களையெல்லாம் தமிழில் தான் வழங்க வேண்டும் என்று நீங்கள் கேட்டுக்கொண்டால், தனியார் அன்பர்கள் பலர் அதற்கு உடன்படுவார்கள் என்பது என்னுடைய ஆய்ந்த முடிவாகும்.

பற்றுச்சீட்டுகளை தமிழில் தாருங்கள் என்றும், நீங்கள் தமிழில் தந்தால் உடனுக்குடன் ஐந்து நாட்களுக்குள் காசோலை வழங்கப்படும் என்றெல்லாம் நாம் அவர்களிடம் சொன்னால் ஒரு மறுமலர்ச்சி உருவாகுமென்பதுதான் என் எண்ணம்.

தலைமைப்பொறியாளரிடம் சொன்னபொழுது மிகவும் மகிழ்ந்தார்.

அவர் சொன்னார் இது மிக நல்ல வாய்ப்பு நாங்கள் அதை கட்டமைக்கிறோம் என்று கூறினார்.

தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்து நாங்கள் உங்களுக்கு உதவியாக இருப்போம் என்பதையும் நான் இந்த இடத்தில் உறுதி அளிக்கிறேன்.

சான்றாக நாங்கள் சாலை மேம்பாட்டுத் துறைக்குச் சென்றபொழுது அவர்கள் எங்களிடம் சொன்னார்கள் ஆங்கிலத்திலேயேத்தான் நாங்கள் பயிற்சிகள் வழங்கிக்கொண்டிருக்கிறோம்,

பயிற்சிக்கு வருகின்ற பொறியாளர்களுக்கு தமிழிலேயே பயிற்சி வழங்க வேண்டும் என்று கேட்டபொழுதும் நாங்கள் அதற்கு பயிற்றுநர்களையும் அனுப்பி வைப்போம் என்று கூறியதை இங்கே குறிப்பிட விழைகிறேன்.

நீங்கள் 86 விழுக்காடு பெற்றிருப்பதற்காகவே மகிழ்கிறேன்.

நீங்கள் 86 விழுக்காடு பெற்றிருப்பதற்கு உங்களையெல்லாம் பாராட்டுகிறேன்.

எங்களுடைய விழைவு உங்களுடைய விழைவும் நூற்றுக்கு நூறு பெறவேண்டும் என்பதுதான் நம்முடைய இலக்கு அதற்கு நீங்கள் அனைவரும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.

நன்றி!

வணக்கம்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *