தினமணி 23.3.24
சனிக்கிழமை
பக்கம் 7
புலவோர் போற்றுதும்!
சங்க காலம் தமிழிலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்பெறும் பெற்றி வாய்ந்ததாகும்.
அறிஞர் பூர்ணலிங்கம் பிள்னை காதலும், போரும் பழந்தமிழ் இலக்கியத்தின் பிரிவாகவும் சமயமும்,தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும்,
அறிவியலும், மானிடவியலும் இக்கால இலக்கியங்களின் போக்காகவும் இலங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கியங்கள் மிகப் பழமையவாயினும் இன்றும் நடைமுறையில் ஆளுமை உடையனவாய் இலங்குகின்றன.
அருஞ்சொல் எனக் கருதுபவை இன்றும் வட்டார வழக்காய்ச் சிற்றூர்களில் புழக்கத்திலிருக்கின்றன.
உழவர் இருவர் பேருந்து நிலையத்தில் தங்கியிருந்தபோது மெதுவாகத் தொடங்கிய மழை வலுக்கத் தொடங்கியது.
அப்பொழுது ஒருவர் மற்றவரை நோக்கி வரவர மழை உறைக்குதே’ என்றார்.
உறைக்குதே என்ற சொல்லைக் கேட்டதும் நான் வியந்து போனேன்.
எனக்கு
உறைப்புழி ஒலைபோல, ‘கதமுறை சிதறி என்ற
சங்க இலக்கியத் தொடர்கள் நினைவுக்கு வந்தன.
பெருந்துளியாக விரைந்து விழுதலை உறை என்ற சொல்லால் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் வழங்குதலைக் கண்டேன்.
குறிஞ்சிப் பாட்டிலே
அன்னாய் வாழி வேண்டன்னை எனத்தோழி தொடங்குவதும் எய்யா மையலை நீயும் வருந்துதி என உரைப்பதும் செப்பலான்றி சில் சினவா நீமே எனக் கூறுவதும் அப்படியே பேச்சு நடையை ஒட்டி அமைதலைக் காணலாம்.
சொல்லாட்சி, வடிவம் நாகரிகமாக உணர்த்துதல் முதலிய கூறுகளினால் இலக்கியம் இன்றும் வாழ்கிறது.
நல்லூர் நத்தத்தனார் ஒய்மா நாட்டை ஆண்டுகொண்டிருந்த நல்லிய கோடனைப் பாராட்டி பாணாற்றுப்படை ஒன்றை பாடியுள்ளார்.
இதுவே சிறுபாணாற்றுப்படையாகும்.
நல்லிய கோடன் ஓவியக் குடியில் பிறந்தவன், இவன் ஆண்ட ஒய்மா நாடு ஐவகை நிலமும் அமையப்பெற்ற நாடாகும் .
மாவிளங்கை தற்போதைய திண்டிவனத்தினை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான்.
கிழக்கு கடற்கரை சாலையில் இடைக்கழி நாட்டு நெடுஞ்சாலையில் நல்லூர் நத்தத்தனார் நினைவுத் தூண் 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக நிறுவப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் வாழ்ந்ததாகக் கருதப்படுபவர் மாசாத்தியார் என்னும் பெண்பாற் புலவர்.
இவர் பாடல் கனாக குறுந்தொகையில் ஐந்தும்
(126 139 186 220 275) புறநானூற்றில் ஒன்றும் 229 அகநானூற்றில் இரண்டும் (324,384) காணக்கிடைத்துள்ளன.
சங்கப் பெரும் புலவர்கள் ஒக்கூர் மாசாத்தியார்,மாசாத்தனார் ஆகியோரின் புகழைப் போற்றும் வகையில் சிவகங்கை
மாவட்டம் ஓக்கூரில் 1992-ம் ஆண்டு இவ்விரு புலவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.
மாங்குடி கிழார்,
மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சிப்புலவர் என்ற பெயர்கள் எல்லாம் ஒரு புலவரையே குறிப்பனவாம்.
புலவனும் போர்வல்லவனுமாய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தன் நாட்டை மாங்குடி மருதனார் பாடுவதை பெருமைக்குரியதாக மதித்தான்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் 1992 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.
சங்கத்தமிழ் பாக்கள் அவை எழுந்த காலத்திலேயே மக்களால் போற்றி வரவேற்கப்பட்டன எனலாம்.
ஏனெனில் பல அரசுகள் எழுந்த தமிழ்நாட்டில் மதுரை மாநகரம் சங்கம் வளர்த்த தலையாய நகரமாய் துலங்கியது.
ஆண்டு தோறும் புத்தம் புதிய கவிதைகளை தமிழ் நாடு எங்கிலும் வாழ்ந்த கவிஞர்கள் இயற்றிக்கொண்டு வந்து மதுரை மாநகரில் இளவேனிற் காலத்து நிலாக்கால இரவுகளில் பொதுமக்கள் பலரும் கூடிய அவையில் அரங்கேற்றம் செய்வர்.
பொருள் தேடச் சென்ற தலைவன் தான் திரட்ட நினைத்த அளவுப்பொருள் சேர்க்க முடியாமற் போய்விடினுங்கூட, புத்தம் புதுக் கவிதைகள் அரங்கேறும் அவ்விளவேனிற் காலத்தின் நிலவெரிக்கும் இனிய இராப்போதில் மதுரைக்கு வந்து கவிச்சுவையில் திளைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான் எனக் கலித்தொகையிற் காணப்படுகின்றது.
சங்க காலத்து அரசர்களும் புலவர் பெருமக்களால் பாடல்வழிப் புகழப்படுவதனைப் பெரும்போறாகக் கருதினர் என்பதனை தலையாலங்காலத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் வஞ்சினக் கூற்றாலறியலாம்.
குறிஞ்சிப்பாட்டிலே அன்னாய் வாழி வேண்டன்னை’ எனத் தோழி தொடங்குவதும், ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’ என உரைப்பதும், செப்ப லான்றிசின் சினவா தீமே எனக் கூறுவதும் அப்படியே பேச்சு நடையை ஒட்டி அமைதலைக் காணலாம்.
சொல்லாட்சி, வடிவம், நாகரிகமாக உணர்த்துதல் முதலிய கூறுகளினால் சங்க இலக்கியம் இன்றும் வாழ்கிறது.
மதுரை பாண்டியர்க்கும் உரண்டை சோழர்க்கும் தலைநகரங்களாய் அமைந்து சிறப்புற்றதே போல் சேரர்க்குத் தலைநகராய் அமைந்து சிறப்புற்ற நகரம் கருவூர்.
சோழ பாண்டிய தலைநகரங்கள் எவ்வாறு புலவர் பலரின் பிறப்பிடமாய்ப் பெருமையுற்றனவோ, அவ்வாறே கருவூரும் புலவர் பலரைப் பெற்றுப் பெருமையுற்றுது .
புலவர் பெருமக்கள் பன்னிருவர் கருவூர்க்கண் பிறந்து வாழ்ந்திருந்தனர்.
கிமு மூன்றாம் நூற்றாண்டில் கவின் மிகுந்த கருவூரில் சங்க காலத்தில் பெரும் புலவர்களான
கருவூர் ஓதஞானியார்,
கருவூர்க் கிழார்,
கருவூர்க் கண்ணம்பாளனார், கருவூர்க் கதப்பின்னை, கருவூர்க் கதப்பின்னைச் சாத்தனார்,
கருவூர்க் கலிங்கத்தார், கருவூர்க் கோசனார்,
கருவூர்ச் சேரமான் சாத்தனார், கருவூர் நன்மார்பனார்,
கருவூர்ப் பவுத்திரனார், கருவூர்ப் பூதஞ்சாத்தனார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்
ஆகிய பன்னிரு புலவர் பெருமக்கள் வாழ்ந்த நினைவைப் போற்றும் வகையில் 1996- ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக நினைவுத்தூண் நிறுவப்பட்டுள்ளது.
கணியன் பூங்குன்றன் என்ற இப்பெயர் இவர்க்குத் தொழிலாலும் ஊராலும் வந்ததாம் .
இவர் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டியென இப்போது வழங்கும் ஊரினராவர்.
மகிபாலன்பட்டிக்கு அருகில் உள்ள கோயிற் கல்வெட்டுக்கள், அவ்வூரை பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம் எனக் குறிக்கின்றன.
புனல் செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாடு எனவும்,
புனல் ஒழுகப் புள்ளிரியும் பூங்குன்றநாடு எனவும் இந்நாடு புலவர்களால் போற்றப்பட்டுள்ளது.
இவர் பாட்டாக நமக்கு கிடைத்தன இரண்டே எனினும் அவ்விரண்டும் மக்கள் வாழ்க்கையை மாண்புடையதாக்குதற்கும் உயரிய கருத்துக்கள் பலவற்றை உட்கொண்டு விளங்குகின்றன.
அவனிவாழ் மக்களெல்லாம் ஒற்றுமையாக வாழ்ந்து சிறக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையை
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் ஒற்றை வரியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச்சங்க காலத்தில் பாடி வைத்ததை அறிந்து உலகமே தமிழனின் பெருமையினை இன்றும்
பேசுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையும் உருசிய நாட்டு அரசும் தம் நிறுவனங்களில் பூங்குன்றனாரின் ஒற்றை வரியை எழுதிப் போற்றி பாராட்டுகின்றன.
இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுவாயிலில் உள்ள தோரண வாயிலிலும் இப்பாடல் வரி எழுதப்பட்டுள்ளது.
தற்போதைய சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில் 2004-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக நினைவுத் தூண் அமையப்பெற்றுள்ளது.
சங்கப்புலவர்களான மாறோக்கத்து நம்பலத்தனார். மாறோக்கத்து நப்பசலையார், மாறோக்கத்து முன்னிநாட்டு நல்லூர்
காவிதிரியார் மகன் புல்லங்காடனார்,
வெறிபாடிய காமக்கண்ணியார். மூன்றுறையரையனார்
ஆகிய ஆறு சங்கப்புலவர்களையும் இணைத்து ஒரு நினைவுத்தூணினை தூத்துக்குடி மாவட்டம் ஏறல் பகுதியிலும் நாமக்கல் மாவட்டம்
கொல்லிமலையில் ஓரிக்கு நினைவுத் தூணும்,
திருச்சிராப்பள்ளியில் சங்ககால நாற்பது நல்லிசைப் பெண்பாற்புலவர்களையும் சேர்த்து நினைவுத்தூணும்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் திரனிச் சிற்றூரில் நக்கீரருக்கு நினைவுத்தூணும்,
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு நினைவுத்தானும்
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக நிறுவப்பட உள்ளது.
சங்கப் புலவர்களுள் முடி மணியாக விளங்கும் நல்லிசைப் புலவர் கபிலர் ஆவார்.
கபிலரின் புலமையை சங்கப் புலவர்கள் பெயர் சூட்டி பாராட்டியுள்ளனர்.
தமிழகத்தின் தாவரவியலில் 99 பூக்களின் பெயர்களைத் தொடுத்தப்பெருமை கபிலரின் குறிஞ்சிப் பாட்டின் சிறப்பாகும்.
வேர்ட்ஸ்வொர்த்க்கு கூட இவ்வளவு பூக்களை எண்ண முடியுமா என்றுத் தெரியவில்லை.
வள்ளல் பாரியின் தோழராகவும் பாரி மகளிரின் காவலராகவும் கபிலர் திகழ்ந்தார் என்பதை நாடறியும்.
பாரியின் பரம்பு மலையின் வரம்பில்லாத அன்பைப்பாடும் கபிலர் பாட்டு நலம் ஈடற்றதாகும்.
473 சங்கப் புலவர்களில் முதன்மையாகக் கருதப்படுபவர் கபிலர் .
இவர் 214 சங்கப் பாடல்களை இயற்றியுள்ளார்.
பாரி மன்னரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த இவர் திருக்கோவிலூர் மண்ணில் தான் பாரி மகளிருக்கு மன்னன் மலையமானுக்கும் திருமணம் செய்து நட்பின் மாண்பினை உணர்த்தினார்.
இரண்டாம் நூற்றாண்டின் மாபெரும் புலவராகிய கபிலரின் நினைவாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் வட்டத்தில் கபிலர் குன்றுக்கு அருகில் 2024-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக கபிலர் நினைவுத்தூண் நிறுவப் பெற்றள்ளது.
கட்டுரையாளர்
முனைவர் ஔவை அருள்
இயக்குதர்
தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழக அரசு

Add a Comment