தினமணி- 17.12.2022.
பக்கம் எண் -8
சுருங்கிப் போனதோ சுருக்கெழுத்துமுறை
முனைவர் ஔவை அருள்
ஓவியம், சிற்பம், கவிதை, ஆடல், பாடல் முதலியன நுண்கலைகளாகும்.
தையல், ஒப்பனை, சமையல் என்பன பயன்கலை களாகும். சுருக்கெழுத்து என்பது நுண் கலையாகவும் பயன் கலையாகவும் விளங்குகிறது.
வாழ்க்கையில் உயரிய பணிகளைப் பெற, இக்கலைப் பயிற்சி பெரிதும் உதவும்.
இதன் இன்றியமையாமை பல நிலைகளில்
விளங்கும்.
பழங்காலத்தில் புலவர்கள் தம்முடைய பாடல்களை வாய்மொழியாகச் சொல்லச் சொல்ல, அதே விரைவோடு அவற்றை அப்படியே எழுதி நல்கும் கலையில் கைதேர்ந்தவர்கள் பலர் இருந்துள்ளனர்.
இவர்கள் கையாண்ட முறைமையை நாம் இப்போது அறியமுடியவில்லை.
பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்திச் சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்யும் சுருக்கெழுத்து முறைமை கிரேக்க மொழியில் தான் தொடங்கப் பெற்றதாகும்.
‘ஸ்டெனோ’ என்றால் குறுகிய அல்லது சுருக்கிய என்பதும்;கிராபி’ என்றால் எழுதுதல் என்பதும் பொருளாகும்.
கிரேக்க வரலாற்று ஆசிரியர் ‘ஜினோபோன்’ கிரேக்கச் சுருக்கெழுத்து முறைமையினைக் கண் டுபிடித்தவர் என்றும், தத்துவ ஞானி சாக்ரடீசின் நினைவுக் குறிப்புகளைச் சுருக்கெழுத்தில் வரைந்தவர் என்றும் புகழப்பெறுகிறார்.
கிறித்து பிறப்பதற்கு முன் கி.மு. 63-ஆம் ஆண்டில் ‘சூறாவளிச் சொற்பொழிவாளர்’ என்று போற்றப்படும், சிசரோவின்
இல்லத்தில் பணியாற்றிய ‘மார்க்கஸ் துலியஸ் தைரோ’ என்பவர் தான் முதன் முதலாக இலத்தீன் மொழியில் சுருக்கெழுத்து முறைமையையும், அகராதியையும் படைத்தவர் என்றும், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இம்முறை நீடித்தது என்றும் தெரிகிறது.
மன்னர் ஜூலியஸ் சீசர் புகழ் பெற்ற சுருக்கெழுத்தாளர் என்பதும்,புகழ்பெற்ற ஆங்கிலப் பேரறிஞர் பெர்னாட் ஷா தன்னுடைய நாடகங்களைச் சுருக்கெழுத்திலேயே எழு தினார் என்பதும், ஆங்கில எழுத்தாளர் ‘சாமுவேல் பெப்பிஸ்’ தன்னுடைய நாள்குறிப்பினை சுருக்கெழுத்தில் எழுதினார்
என்பதும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
மேலை நாடுகளில், ஆங்கில மொழிக்கு 1786-இல் சாமுவேல் டெய்லர் சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்தார்.
இம்முறை பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீசு, இத்தாலி, ஜெர்மன் மொழிகளிலும் பின்பற்றப்பட்டு, இதைத் தழுவி வில்லியம் ஆர் டின்ஸ்,1823-இல் சுருக்கெழுத்து முறையை நூலாக வெளியிட்டார்.
ஒலி அடிப்படையிலான ஒரு முறையை, ‘சர் ஐசக் பிட்மென்’ 1837-இல் கண்டுபிடித்து வெளியிட்டார்.
விக்டோரியா அரசியார் ‘சுருக்கெழுத்தின் கலங்கரை விளக்கம்’ என்று புகழ்ந்து பாராட்டிப் பட்டங்களை வழங்கி பிட்மென்னை பெருமைப்படுத்தினார்.
ஜே.எம். ஸ்லோவான் 1882- லும்,
ஜான் ராபர்ட் க்ரெக் 1888- லும் சுருக்கெழுத்து முறைமைகளைக் கண்டுபிடித்தவர்களாவார்கள்.
ஆங்கிலேயே அரசுக்கு எதிராகப் பேசும் அரசியல் தலைவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் நோக்கில், ‘இனி வட்டார மொழியில் பேசுபவர்கள் பேச்சும் அப்படியே சுருக்கெழுத்தில் எடுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பெற வேண்டும்’ எனத் தில்லி அரசு மாநிலங்களின் நிருவாகத்திற்கு அறிவுறுத்தியது.
மேலை நாட்டுச் சுருக்கெழுத்து முறைகளைத் தழுவி, நமது இந்திய மொழி கள் அனைத்திற்கும் சுருக்கெழுத்து முறை தோன்ற அது காரணமாக இருந்தது.
ஆங்கிலேய ஆட்சியில் இந்திய நாட்டில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு ஆங்கிலத்தையும், ஆங்கிலச் சுருக்கெழுத்தையும் கற்றுக்கொள்வது தேவையாயிற்று.
அப்பொழுது இராவ்சாகிப் ம. சீனிவாச ராவ் (1864-1924) என்பவர் ஆசிரியப் பயிற்சிப் பட்டயக் கல்வி பெற்று, ஆங்கில பிட்மென் சுருக்கெழுத்தைக் கற்றுப்பிறருக்குச் சுருக்கெழுத்துப் பணியைக் கற்பிக்கும் பணியிலேயே ஈடுபட்டு வந்தார்.
வேலூரில், பயிற்சி பெறும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு ஆங்கிலச் சுருக்கெழுத்தைக் கற்றுத் தரும் பகுதி நேரத் தற்காலிக ஆசிரியராக சீனிவாச ராவை ஆங்கிலேய அரசு 1903-இல் நியமித்ததும் குறிப்பிடத் தக்கது.
முதன் முதலாக தமிழில் 1910-ஆம் ஆண்டில் பிட்மென் பதிப்பை தமிழ்ச் சுருக்கெழுத்து நூலாக சீனிவாச ராவ் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
பிறகு அவரே தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் சுருக்கெழுத்து நூல்களைத் தொகுத்து வெளியிட்டார்.
சுருக்கெழுத்துக் கலைக்கு சீனிவாசராவ் ஆற்றிய பணியைப்பாராட்டி அவருக்கு 1920-இல் ஆங்கில அரசு ‘
இராவ் சாகிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1935-இல் என். சுப்பிரமணியம் என்பவர் தமிழ்ச் சுருக்கெழுத்து நூலினை வெளியிட்டார்.
அவரைத் தொடர்ந்து பி.ஜி. சுப்பிர மணியம் என்பவர், ‘தமிழ்ச் சுருக்கெழுத்து தற்போதினி” என்ற பெயரில் இயற்றிய நூல், தருமபுர ஆதீனத்தால் 1939-இல் வெளியி டப்பட்டது.
சீனிவாச ராவ் முறையில் தமிழ்ச் சுருக்கெழுத்தைக் கற்று உயர்வேகத் தேர்வில் தேர்ச்சி பெற்று சட்டப்பேரவைத் தமிழ்ச் செய்தியாளராகப் பணியாற்றிடத் தொடங்கித் தமிழ்நாடு சட்டப்பேரவையின் துணைச் செயலாளராக ஓய்வு பெற்ற ஜி.எஸ். அனந்த நாராயணன், முறையாகத் தமிழைக் கற்று, ‘வாகீச கலாநிதி’ கி.வா. ஜகந்நாதன் வழிகாட்டுதலுடன் 1964-ஆம் ஆண்டு 28 அத்தியாயங்கள் கொண்ட எளிய நடை தமிழ்ச் சுருக்கெழுத்து நூலினை வெளியிட்டார்.
‘பொருட் குறிப்பு அகராதி’ நூல், கைகாட்டி மரமாக இலங்குகிறது.
தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயில்வோருக்கு வழிகாட்டி நூலாகவும் கரைகாட்டும் கலங்கரை விளக்காகவும் ஒளிர்கிறது.
சுருக்கெழுத்தில் மெல்லிய கோடுகளாக வரியை மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ எழுதப் பழக வேண்டும்.
ஆனால், அழுத்தமான கோடுகள் கீழ் நோக்கியே எழுதப்படுவதன்றி மேல் நோக்கி எழுதப்படுவதில்லை.
4.2 மி.மீ. அளவில்தான் மெய்க்குறிகளை எழுதிப் பழக வேண்டும்.
பின்னர் இந்த அளவைப் பாதியாக்கி எழுதும் முறையும், இரட்டிப்பாக்கி எழுதும் முறையும் பயிற்சியால் வரும்.
நன்றாகப் பழக்கமாகும் வரையில், மெய்க்குறில்களை எழுதும் பொழுது அவற்றின் ஒலியையும் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே எழுத வேண்டும்.
பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் பொழுது என் அருமைத் தாயார் ஆங்கில பிட்மென் சுருக்கெழுத்துப் பயிற்சிக்கு என்னை அனுப்பி வைத்தார்.
கற்றுத்தந்த ஆசிரியர், வயதில் மிக மூத்தவர் ஆவார்.
அவரது முதுமையினால் சுருக்கெழுத்துப் பயிற்சியில் அவர் எழுதிக்காட்டிய மெல்லியக் கோடுகளில் பல நெளிவுகள் ஏற்பட்டன.
அக்கோடுகளின் நிலை புரியாமல் அவர் வரைந்த நெளிவுகளையே நான் பாடமாகக் கொண்டேன்.
அதனாலேயோ என்னவோ சுருக்கெழுத்துப் பயிற்சியில் வெற்றி பெறாமல் சோர்ந்து நின்றேன்.
இக்காலம் செயற்கை நுண்ணறிவு காலமாகும்.
உலகம் நம் கண் முன்னால் மிக மிகச் சுருங்கி வருகிறது.
சுருக்கெழுத்தின் எதிர்காலம் வளமாக இருந்தாலும், பலர் அதனைப் பயன்படுத்த மருள்கின்றனர்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை நம்புவதைக் காட்டிலும் கருவிகளின் வழிச் சுருக்கெழுத்து முறை நம்பத்தக்கதாகவும் விரைந்தும் தடைபெறுகிறது.
கோவையில் சிறந்த கவிஞராய் மிளிரும் மரபின் மைந்தன் முத்தையா, தன் உரைகளை ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருக்கும்போதே சுணித்திரையில் உடனுக்குடன் எழுத்தாய் தட்டச்சுச் செய்யப்படுகிற உத்தியை, திருச்சியில் உள்ள தன் நண்பர் முயன்று செய்தளித்ததாகவும், அதனால் பயன் பெறுவதாகவும் என்னிடம் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.
1940-களிலிருந்தே உயர்நிலைப்பள்ளியிருந்த எந்த ஊரிலும் பள்ளிக்கு அடுத்து ஒரு தட்டச்சு, சுருக்கெழுத்து, புத்தக அடுக்குப் பயிற்சி நிலையம் இருக்கும்.
பத்தாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர் அதில் போய்ச் சேர்ந்து பயிற்சி பெற்றதுடன் பணியிலும் சேர்ந்து பிற்காவங்களில் மிகப்பெரிய பதிப்பாளர்களாக மாறியதும் தமிழகத்தின் பொன் சுவடுகளாகும்.
என் அருமை அன்னையாரும், அவர் தமக்கையரும் வேலூரில் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்ததை அடிக்கடி நினைவு கூர்வார்கள்.
எங்கள் வீட்டில், என்னோடு உடன்பிறந்த இருவரையும் சென்னையில் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்த்ததும் நினைவிருக்கிறது.
நாங்கள் மூவரும் அரைகுறையாகத் தட்டெழுத்துப் பயிற்சி பெற்றோம்.
சுருக்கெழுத்து எங்களுக்கு கைவரப்பெறவில்லை. அந்த நாளில் அலுவலகங்களில் இந்த மூன்றும் தெரிந்தவர்கள் தான் பணியில் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.
என் அன்னையார் இந்த மூன்றிலும் வல்லமை படைத்தவராயிருந்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகும் கூட இந்தப் பயிற்சி வகுப்புக்கு அவ்வப்போது சென்று தன் பயிற்சித் திறமையை புதிப்பித்துக்கொண்டார்கள்.
இன்று தொலைபேசி வந்த பிறகு தட்டெழுத்துப் பயிற்சியில் அனைவருமே முதலில் அரைகுறையாக இருந்து, பிறகு தேர்ச்சி பெறலானார்கள்.
கணிப்பொறியும் அப்படித்தான் கற்றுக் கொண்டார்கள்.
இப்படி, சுருக்கெழுத்து முறை மெல்ல மெல்ல முழு எழுத்து முறையாக மாறியது.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் ஏற்பினைப்பெற்ற வணிகவியல் பயிற்சி நிறுவனங்களில் பதிவு செய்தோருக்கு ஆகஸ்டில் சுருக்கெழுத்து மற்றும் கணிதப்பதிவியல் தேர்வுகள் நடத்தப்பெற்றன.
இத்தேர்வுகளை 14,388 பேர் எழுதியதில், 5,676 பேர் (38.91%) தேர்ச்சி பெற்றனர்.
மேலும் 56 பேர் முறைகேட்டுப்புகாரில் சிக்கினர்.
8,856 பேர் தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை.
சுருக்கெழுத்து உயர் வேகம்
ஆங்கிலம் மற்றும் தமிழ் எனும் இரண்டு வகை தேர்வுகளில் ஒருவர் கூடத் தேர்ச்சிப் பெறவில்லை என்பது வருத்தமான பதிவாகும்.
கட்டுரையாளர்:
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழக அரசு,

Add a Comment