எந்தையாரின் இனிய நண்பர்-
பொற்றாமரை நாயகர்!
அரிய பண்புகளின் உறைவிடம்.
அடுத்தவர் மீது பரிவு காட்டும் நிறைகுடம்.
தொண்டு செய்யவே வாழ்வைத்
தனிமையாக்கிக் கொண்ட தவம்.
எவரிடமும் பகை கொள்ளாத தோழமை!
புலவர்களை அரவணைத்த பொற்றாமரை!
ஈடில்லாத் திலகம் திரு இல கணேசன்(16.2.1945-15.8.2025) அவர்களை இழந்து விட்டோமே என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
ஒரு முறை திரு இல கணேசன் அப்பாவிடம் தனக்கு ஒரு தனிநிலை உதவியாளர் வேண்டும் என்று கேட்டார் .
அப்பா என்னை அழைத்து உடன் செய்யுமாறு கேட்டுக் கொண்டார் .
என்னுடன் யூ டி எஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஆற்றல் திலகம் ராஜ்குமாரை அப் பணியினை ஏற்றுக் கொள்ளுமாறு சொன்னவுடன் 1.6.2014 முதல் நாள்தோறும் அவருக்குத் துணையாக இன்முகச் செல்வமாக பணியாற்றினார்
பத்துத்திங்கள் கழித்து 10.4.2015 அன்று தனக்கு வேறு ஒரு நல்ல பணி கிடைத்திருக்கிறது என்று அவரிடம் சொல்லி விலகிய போதும்
திரு இல கணேசன் அன்புடன் தன்னை வழியனுப்பி வைத்ததை ராஜ்குமார் என்னை பார்க்கும் பொழுதெல்லாம் சொல்லி நெகிழ்வார்.
மத்திய செம்மொழி நிறுவன துணைத் தலைவராக
அப்பா இருந்தபோது அப்பதவியில் இருந்து விலகி விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதற்காகவே
திரு இல கணேசன் திலகர் தெருவில் உள்ள விருந்தினர் இல்லத்திற்கு நேரில் வந்து நீண்ட நேரம் தனிமையில் அப்பாவுடன் பேசினார்…
மூத்த வழக்கறிஞர் காந்தி வழக்காடி வெல்லலாம் என்று தெளிவுற எடுத்துச் சொன்ன பிறகும் அப்பா என்னை அழைத்து எந்த வழக்கும் வேண்டாம் என்றும் தீர்மானமாக சொல்லிவிட்டு வா என்று என்னை அனுப்பி வைத்தார்…. பிறகு உடனே விலகல் கடிதத்தையும் 2015 ஆம் ஆண்டில் அப்பா கொடுத்து விட்டார்.
இது நடந்த வரலாறு.
தியாகராயர் நகரில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் நடத்தப்படும் பொற்றாமரை நிகழ்வுகளுக்கு அப்பாவின் தனிச் செயலர் பொன்னேரி பிரதாப்புடன் தொடர்ந்து சென்று வருவது மரபாகும்.
ஆண்டுதோறும் பாரதியார் பிறந்தநாள் விழாவினை சீரும் சிறப்புமாக ஸ்ரீராம் நிறுவனம் நடத்துகிற போதெல்லாம் அப்பாவுடன் மேடையில் அணி செய்வதோடு பாரதியார் விருதினையும் ( 2016 ஆம் ஆண்டு ) திரு இல கணேசன் அவர்களுக்கு வழங்கி பாராட்டிய பொழுதும் அன்பில் இருவரும் திளைத்தனர்.
என் அண்ணன் மகள் மருத்துவர் தாரா நிகிதா கண்ணன் அவர்களின் நடன அரங்கேற்றத்திற்கு (14.12.2018)
இராணி சீதை மன்றத்திற்கு நேரில் வருகை புரிந்து நீண்ட நேரம் அமர்ந்து வாழ்த்திச்சென்றதையும் குறிப்பிட விழைகிறேன்
அப்பா மறைந்த பொழுது
( 21. 11.2022 ) தன்னால் சென்னைக்கு வர முடியவில்லையே என்ற தவித்த குரலில் தொலைபேசியில் என்னிடம் பேசியதும் அப்பொழுது மணிப்பூரில் தன்னுடன் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா இருந்ததையும் மறவாமல் சொல்லிக் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு மே 24 ஆம் தேதி அவருடைய முத்து விழா நிகழ்வுக்கு சென்ற பொழுது தமிழ்நாடு அரசு
தமிழ் வளர்ச்சிக்கு நிகரற்ற பணிகளை செய்து வருவதனை பாராட்டி என்னை வாழ்த்திய பொழுது பணிந்து வணங்கினேன்.
அண்ணலின் மறைவிற்கு என் கண்ணீரை மாலையாக்குகிறேன்!
ஔவை அருள்

Add a Comment